ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘அரச பயங்கரவாதம்’: தமிழக அரசை விளாசிய ராகுல் காந்தி

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில அரசே மக்களைக் கொன்று குவிக்கும் அரசு பயங்கரவாதச் செயலுக்கு கொடூரமான உதாரணமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து தமிழக அரசைச் சாடியுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தொடர்புடையவை

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்
தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேரை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்திக் கொன்று இருக்கின்றனர். இது ஒரு மாநில அரசே தனது மக்களைக் கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்துக்கு கொடூரமான உதாரணமாகும். அநீதிக்கு எதிராகப் போராடி, நீதி கேட்ட மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என அனுதாபத்தையும், காயம் அடைந்தவர்களுக்கும் விரைவில் குணமடைய பிரார்த்தனையும் செய்கிறேன்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலையைச் சுற்றியுள்ள குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு அடைந்து வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட மக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர்.

மேலும், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.