ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!

இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளவுள்ள மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த ஒப்பந்தத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸார், இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி தலைவர் யதுவேந்திரா மதூர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது கலந்துரையாடப்பட்ட நீர் வழங்கல் திட்டத்திற்கமைவாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பிரதிபலனாகவும் இந்த நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 304 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அலுத்கம, மத்துகம, அகலவத்த குண்டசாலை,ஆரகம, அலவ்வ, பொல்காவலை, பொத்துஹெர ஆகியவற்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த திட்டமானது 10 இலட்சம் மக்களுக்கான குடிநீரை பெற்றுக் கொள்ளவுள்ளதுடன் 500 கிராம சேவை பிரிவுகள் உள்ளடக்கியுள்ளது.