187 கிலோ மன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு

மன்னார் -சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுக் காலை(16) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மாவட்ட மதுவரி திணைக்கள பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் சிலாபத்துறை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, சிலாபத்துறை – முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட 60 கேரளா கஞ்சாப்பொதி மீட்கப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 1 கோடி 87 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், குறித்த 187 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாப்பொதிகள் விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும், மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.