‘8 மாவட்டங்களிலும் இணைந்து போட்டியிடவுள்ளோம்’

“வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் பொது அமைப்புகள் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது” என, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், நேற்று (08) மதியம் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், சட்டத்தரணி நடராஜா காண்டிபன், மன்னார் மாவட்டத்தில் அதிகாரம் அழிக்கப்பட்ட முகவர் அந்தோனி சகாயம் ஆகியோரே, கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இதற்கமைய, மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, மடு பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்தியப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “சைக்கில் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புகள் இணைந்த கூட்டு அணி சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் ஒரு நகர சபை மற்றும் 4 பிரதேச சபை உள்ளடங்களாக ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

“மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் பொது அமைப்புகள் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணத்தை செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.