சீரற்ற காலநிலையால் பாக்குச் செய்கைப் பாதிப்பு

மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் நீடித்துவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பாக்குச் செய்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாக்குச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி மாகாணத்தில் பாரியளவில் பாக்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகினறது. சீரற்ற காலநிலையால் பாக்கு மரங்களில் பூக்கள் உதிர்கின்றமை, பாக்கின் அளவு சிறிதாகின்றமை, போதியளவு பாக்கு உற்பத்தி இன்மை காரணமாக, பாக்குச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக, செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் பாக்கின் தொகை விலை அதிகரித்துள்ளதாக, செய்கையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கைக்கான Salam Air விமான சேவை ஆரம்பம்

ஓமானின் சலாம் விமான நிறுவனமானது, இலங்கைக்கான நேரடி விமானசேவையை ஆரம்பித்துள்ளது. ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான விமானசேவையையே Salam Air நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, திங்கட்கிழமை, புதன், வௌ்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களுக்கு இந்த விமானசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

’அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கவும்’

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சு.கவின் மத்திய கொழும்பின் முன்னாள் அமைப்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுடமான பைஸார் முஸ்தபா, சிறுபான்மை சமூகத்தினரது உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் பிரதமர் மதிப்பளித்து, அவற்றைப் பெற்றுக்கொடுப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.

’தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்’

தமிழ்மக்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைய இனியாவது சிந்திக்க வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க அலுவலக பொறுப்புகளிலிருந்து சந்திரிகா விலகினார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளர் பதவியிலிருந்து விலகினார். நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அதன் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டார்.

நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

’அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்’ – த.தே.கூ

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இடைக்கட்டு பகுதியில் வெடிபொருள்கள் மீட்பு

வள்ளிபுனம் – இடைக்கட்டு கிராமத்தில், கடத்தலுக்கு தயாரான நிலையில் இருந்த 52 கிலோ 800 கிராம் வெடிப்பொருள்கள், நேற்று (19) சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இடைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞர் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல்

சகல ஆளுநர்களையும் பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் வெற்றிடமாகவுள்ள ஆளுநர் பதவிகளுக்கு புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் புதுய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தமிழகத் தலைவர்களின் விமர்சனம் தமிழர் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும்’

ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவின் தெரிவை, தமிழக அரசியல் தலைவர்களில் ஒருசிலர் தமது வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்கிறார்களெனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, இது, தமது மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்காமல் மேலும் மேலும் துன்பத்துக்கு வழிவகுத்துவிடுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.