எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக, அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் அவர்கள் அடிக்கடி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.

ஆனால் இம்முறை, அவர்களின் கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்படுவதாகத் தெரிகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, தாம் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க, தமிழ்க் கூட்டமைப்பு உதவியமையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, மஹிந்த அணியினரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழேயே போட்டியிட்டனர்.

ஆயினும், தேர்தல் முடிவடைந்தவுடன் அவ்வணியினர் தனியாக இயங்க ஆரம்பித்தனர். இந்த அடிப்படையில் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தமது குழுவுக்கே வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

அந்தத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐ.மு.சு.மு 95 ஆசனங்களையும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்மைப்பு 16 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி ஆறு ஆசனங்களையும் பெற்றன.

ஐ.ம.சு.மு தலைவர் என்ற முறையில், ஐ.தே.கவுடன் கூட்டரசாங்கத்தை ஜனாதிபதி, அமைக்க முன்வந்தமையால், தமிழ்க் கூட்டமைப்பே, எதிர்க்கட்சியின் பாத்திரத்தில், பிரதான கட்சியாகியது. எனவே, தமிழ்க் கூட்டமைப்புக்கே எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஆளும் ஐ.தே.க வாதிட்டது.

ஆனால், ஐ.ம.சு.முவின் 95 உறுப்பினர்களில் 55 உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், தனியான குழுவாக, நாடாளுமன்றத்தில் இயங்க முடிவு செய்தார்கள். இதனால், கட்சித் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் அதை ஏற்றுக் கொண்டதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில், தமது குழுவே மிகப் பெரிய குழுவாகும் என்றும், எனவே தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும், மஹிந்த அணியினர் வாதிட்டனர். அவர்கள் தமது குழுவுக்கு, ஒன்றிணைந்த எதிரணி என்ற பெயரையும் சூட்டிக் கொண்டனர்.

தமது அணியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான குமார வெல்கமவை, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அப்போது கூறினார். அதன்படி, ஒன்றிணைந்த எதிரணியின் 55 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு, வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை, 2015 ஆண்டு ஓகஸ்ட் மாதம் சபாநாயகரிடம் கையளித்தனர்.

ஆனால், ஒன்றிணைந்த எதிரணி என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் எவ்வித கட்சியும் அங்கிகரிக்கப்படவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளன என்றும் கூறிய ஆளும் கட்சியினர் அதை நிராகரித்தனர்.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மூன்றாம் திகதி, சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சி கொறடாவாகவும் நியமிக்கப்பட்டனர்.

சில வாரங்களுக்குப் பின்னர், மஹிந்த அணியினர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்காது, தம்மை நாடாளுமன்றத்தில் தனியான குழுவாக அங்கிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மைத்திரி தவிர்ந்த, அவரது அணியில் எவரும், மஹிந்த அணிக்கு எதிராகப் போராட விரும்பாததால் அவர்கள் அதை எதிர்க்கவில்லை.

ஐ.தே.கவும் அதை ஏற்றுக் கொண்டது. மஹிந்த அணியின் கைகளைப் பலப்படுத்தி, ஸ்ரீ ல.சு.கவுக்குள் மஹிந்த – மைத்திரி அணிகளுக்கு இடையிலான முரண்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்து, ஸ்ரீ ல.சு.கவைப் பிளவுபடுத்தி, எதிர்காலத் தேர்தல்களின் போது, தாம் வெற்றி பெறுவதே, ஐ.தே.க அதன் மூலம் எதிர்ப்பார்த்து என ஊகிக்கலாம்.

2016 ஆம் ஆண்டு, மீண்டும் இந்தப் பிரச்சினை எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தேசிய பிரச்சினைகளைப் பற்றிப்பேசுவதில்லை என்றும், அவர் தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுவதாகவும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சம்பந்தன், “சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்களா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்போது மீண்டும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, தமிழ்க் கூட்டமைப்பு வாக்களித்தமை மட்டுமல்லாது ஐ.தே.கவுக்கும் மைத்திரி அணிக்கும் மேலும் தலையிடிகளைக் கொடுப்பதும் இந்தக் கோரிக்கையின் நோக்கமெனத் தெரிகிறது.

காரணம் இருந்தோ இல்லாமலோ, சம்பந்தனுக்கு எதிராக எதைச் செய்தாலும், தென்பகுதியில் பெரும்பாலானோர் அதை வரவேற்பர். இந்த நிலையில், ஐ.தே.கவுக்கும் மைத்திரி தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவுக்கும் சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்ப்பது, கடினமாக இருக்கும்.

எனவே, மைத்திரி அணியினர் அனேகமாகப் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது செய்ததைப் போலவே, சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டால், வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொள்வர் என ஊகிக்கலாம்.

ஆனால், தமது தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்த சம்பந்தனுக்கு எதிராக, அதேகாரணத்தை முதன்மையாகக் கொண்டு முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, ஐ.தே.க ஒதுங்கியிருக்க முடியாது. அக்கட்சி சம்பந்தனுக்கு ஆதரவாகப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்றே ஊகிக்க முடிகிறது.

மஹிந்த அணியினர் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர். அவர்கள், இதைச் சிங்கள மக்கள் மத்தியில், ஐ.தே.கவுக்கு எதிரான அபிப்பிராயத்தை மேலும் வளர்க்கப் பாவிப்பர். சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டால், ஐ.தே.கவும் தமிழ்க் கூட்டமைப்பும் சேர்ந்து, அதை இலகுவாக முறியடிக்க முடியும்.

எனவே, அவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றின் மூலம், சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க முடியாது. ஆனால், அவ்வாறானதொரு பிரேரணையின் முடிவு எதுவாக இருந்தாலும், அது மஹிந்த அணியினருக்குத் தென்பகுதியில் சாதகமாகவே அமையும்.

சட்ட ரீதியாகப் பார்த்தால், ஒன்றிணைந்த எதிரணி என்ற பெயரில், அரசியல் கட்சியொன்று நாடாளுமன்றத்தில் இல்லாததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சியாகும். ஆனால், நடைமுறையில் ஒன்றிணைந்த எதிரணி, ஆளும் கட்சியில் இல்லை. அதன் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்கிறார்கள். அவர்களைத் தனியான ஒரு குழுவாகச் சபாநாயகர் அங்கிகரித்துள்ளார். அவர்களே, நடைமுறையில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறார்கள். எனவே, தார்மிக ரீதியில் அவர்களே, பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்பட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார் என்றும் தேசிய பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் தினேஷ் குணவர்தன வெளியிட்ட கருத்தும் கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

சிங்களத் தலைவர்கள், தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்களா என்ற கேள்வியின் மூலமே, சம்பந்தன் அதற்குப் பதிலளித்து இருந்தார்.

இவர்கள் இருவரும் சொல்வது உண்மையே. சம்பந்தன், தேசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதில்லை. சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதில்லை.
சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றி ஆரம்பத்தில் இருந்தே பேசுவதில்லை. பேசுவது ஒரு புறமிருக்க, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் பிரதான சிங்களக் கட்சிகள் எதிர்க்கின்றன.

உதாரணமாக, தமிழ் அரசியல் கைதிகளை, விடுதலை செய்வது தொடர்பான விடயத்தை எடுத்துக் கொள்ளலாம். அக்கைதிகள், குண்டு வெடிப்பு போன்ற பாரிய குற்றங்களோடு சம்பந்தப்பட்டு இருக்கலாம்.
ஆனால், அவை தனிப்பட்ட தேவைக்காகச் செய்தவை அல்ல; அவை ஓர் அரசியல் நோக்கத்துக்காக செய்யப்பட்டவை என்பதாலேயே, அவர்களை அரசியல் கைதிகளாகக் கருத வேண்டியிருக்கிறது.

அவர்களைச் சதாகாலமாக சிறையில் வைத்திருக்க முடியாது. என்றோ ஒரு நாள் அவர்களை, விடுதலை செய்துதான் ஆக வேண்டும். அவர்கள் பயங்கரக் குற்றங்களைச் செய்தார்கள் என்பதற்காக அவர்களை தடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்கு சுமார் 30 ஆண்டுகளாக, ஆயுதங்களை வழங்கி, பிரபாகரனுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டு இருக்கையில், கைது செய்யப்பட்ட ‘கே.பி’ எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக, வழக்கொன்றாவது தாக்கல் செய்ய முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது.

புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்று, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டவர் பயங்கரமானவர் அல்ல; அவரைச் சிறையில் வைத்திருக்கத் தேவையில்லை; ஆனால், புலிகளின் தலைவர்களின் கட்டளைப்படி, செயற்பட்டவர்கள் பயங்கரமானவர்கள்; அவர்களைச் சிறையில்தான் வைத்திருக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

கே. பி ஆயுதப் போராட்டத்தை இப்போது நிராகரிக்கிறார்; எனவே அவரை சிறையில் வைத்திருக்கத் தேவையில்லை என்று, சிங்கள அரசியல்வாதிகள் வாதிடுகிறார்கள் என்றால், தமிழ் அரசியல் கைதிகளில் எத்தனை பேர், இன்னமும் தமிழ் ஈழத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் நம்புகிறார்கள்?

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையையும் இராணுவத்திடம் இன்னமும் இருக்கும், தமிழ் மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினையையும் இன்று சிங்கள அரசியல்வாதிகள், தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பாவிக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்த் தலைவர்கள் தான், அவற்றைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் விடயத்திலும் அதுதான் உண்மை.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சம்பந்தனின் நிலைமைவேறு. சிங்களத் தலைவர்கள், தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத காரணத்தால், அவரும் ஏனைய தமிழ்த் தலைவர்களைப் போல், அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பது சரிதான்.

ஆனால், ஓர் எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளோடு மட்டும் நின்றுவிடலாமா? அவருக்குத் தேசியப் பிரச்சினைகள் விடயத்தில் ஒரு பொறுப்பு இல்லையா? ஆனால், சம்பந்தன் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகிறாரா? இல்லை! அண்மைக் காலத்தில், அரசியல் களத்தில் முக்கிய பிரச்சினையாக, மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் இருந்து வருகிறது. அதைப் பற்றி சம்பந்தன் பேசுகிறாரா?

ஊழல் போன்ற குற்றங்களை, விரைவாக விசாரணை செய்வதற்காக, விசேட மேல் நீதிமன்றங்களை உருவாக்குவது தொடர்பான சட்ட மூலம் ஒன்று அண்மையில் கொண்டு வரப்பட்டது. இது எதிர்க்கட்சித் தலைவர், பேச வேண்டிய தேசிய பிரச்சிகைளில் ஒன்று இல்லையா?

பெரும் சிக்கல்களைத் தோற்றவித்த புதிய கலப்புத் தேர்தல் முறை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது, புதிய வரி முறை, தங்கம் இறக்குமதி மீதான வரி போன்ற, பல தேசிய பிரச்சினைகளின் போது தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள்.

மற்றவர்கள் மௌனமாக இருந்தாலும், தேசியப் பதவியான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பவர், அவற்றைப்பற்றிப் பேசாது, மௌனமாக இருக்க முடியாது. அவ்வாறு, மௌனமாக இருப்பதன் மூலம், சம்பந்தன், தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் அல்லர் என்ற ஒன்றிணைந்த எதிரணியின் வாதத்துக்குப் பொருத்தமான முறையில் நடந்து கொள்கிறார்.