‘எழுக தமிழ்’ நிகழ்வில்

‘எழுக தமிழ்’ நிகழ்வில் எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. சிலர் மூவாயிரம் பேர் வரையே கலந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.’எழுக தமிழ்’ நிகழ்வின் ஒளிப்படங்களை நுண்மாண்நுழைபுலன் கொண்டு ஆராய்ந்த போது, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பது புலப்பட்டது. ஆறாயிரத்தில் இருந்து எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும்.

மூவாயிரம் பேர் வரையிலேயே கலந்து கொண்டார்கள் என்பது சரியானது அல்ல.

2009இற்கு பின்னர் தமிழர் தாயகத்தில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்ட அரசியல் நிகழ்வாக பொங்கு தமிழ் இருக்கிறது. அந்த வகையில் இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

‘எழுக தமிழ்’ நிகழ்வின் ஒளிப்படங்களை, வீடியோக்களை மேலும் ஆராய்ந்த பொழுது இன்னும் ஒரு விடயம் கண்ணில் பட்டது. மிகக் குறைவான காவற்துறையினரே அங்கே நிற்கிறார்கள். முதலமைச்சரின் பாதுகாப்பிற்கு நிற்கின்ற காவற்துறையினர், வீதி ஒழுங்குக் காவற்துறையினர் என்று வெகு சிலரே தென்படுகின்றார்கள்.

முப்பது ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திய இனம், தன் மீது குண்டுகளைக் கட்டிக் கொண்டு எதிரி மீது பாய்ந்த இனம், மீண்டும் எழுச்சி கொண்டு ‘எழுக தமிழ்’ என்று ஒரு போராட்டம் நடத்துகிறது. தமது இனத்தின் மீது அடக்குமுறையை தொடர்கின்ற இலங்கை அரசுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் என்று விளக்கம் வேறு கொடுக்கிறது.

அப்படியான ஒரு போராட்ட நிகழ்வில் இத்தனை காவற்துறையினர்தான் பாதுகாப்பிற்கு நிற்பார்களா?

இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வு உண்மையில் தமக்கு எதிரானது அல்ல, இது தமிழர்கள் தங்களுக்குள்ளேயே நடத்துகின்ற அரசியல் போட்டியின் ஒரு பகுதி என்கின்ற தெளிவு இலங்கை அரசாங்கத்திற்கு இருந்ததனாலேயே, இந்த நிகழ்விற்கு ஒரு சில காவற்துறையினரே போதும் என்று இலங்கை அரசாங்கம் முடிவெடுத்திருக்கக் கூடும்.

(வி. சபேசன்)