கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.

கேரளத்தில் வாழுகின்ற “ஈழவர்” சமூகம் குறித்த ஆய்வு, இலங்கையில் பண்டைக்காலம் முதல் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குறித்து அதாவது ஈழத்தமிழர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பயனுடையதாகலாம் போல் தெரிகிறது. எனவே, இக்கட்டுரையில் கேரளத்தில் வாழுகின்ற ஈழவர் குறித்து கிடைக்கிற தகவல்களைத் தொகுத்து முன்வைக்க முனைகிறேன்.

விக்கிபீடியா, கேரளத்தில் வாழுகின்ற ஈழவர்கள், கேரளத்தின் இந்துக்களில் மிகப்பெரும் பிரிவினராக உள்ள மக்களாவர். கேரளத்தில் 73 இலட்சம் ஈழவர்கள் வாழ்கிறார்கள். இது மொத்த கேரள மக்கள் தொகையில் 23 வீதமாகும் என்ற தகவலைத் தருகிறது.

விக்கிபீடியா, ஈழவர், “மலபார் பகுதிகளில் திய்யா என்றும் துளு நாட்டில் பில்லவா என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய இனக்குழுக்கள் வில்லவர், பில்லவா, பூசாரி, இல்லத்துப்பிள்ளைமார், நாடார் ஆவார்” எனக்குறிப்பிடுகிறது.

குமரிமைந்தன், “பணிக்கர்” எனும் சாதிப் பட்டத்தைத் தாங்குவோர் இவர்களே. தமிழகத்தில் இல்லத்துப் பிள்ளைமார் என்று அழைக்கப்படுவோரும் இவர்கள்தாம்.” எனக்குறிப்பிட்டுள்ளார். தொ.பரமசிவன், “நெல்லை மாவட்டத்தினுடைய எல்லையோரத்திலே வாழ்கிற இல்லத்துப்பிள்ளைமார் என்று சொல்லப்படக்கூடிய சாதிகள் ஈழப்பிள்ளைமார் என்றுதான் சொல்வார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ். இராமச்சந்திரன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 2-3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்களில், மூன்றாவது நடுகல்லில் “கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. அந்தவன் என்பது இந்நடுகல் வீரனது பெயராகும். தீயன் என்பது இவனது குலமாக இருக்க வேண்டும்” எனக்கூறுவதுடன், “கூடலூர்ப் பகுதிக் கணவாய் மத்திய கேரளம் மற்றும் வட கேரளப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் கணவாய்களுள் ஒன்றாகும். கேரளத்தின் அப்பகுதிகளில் வாழ்வோருள் தீயர் என்று அழைக்கப்படுகின்ற ஈழவர் சமூகப் பிரிவினர் முதன்மையானவர் ஆவர்.” எனவும், “வட கேரளத்திலுள்ள ஒரு மாவட்டப் பகுதியாகிய வயநாடு என்பது வயவர் நாடு என்பதன் சுருக்கமாகும். ஈழவர் சமூகத்தவரை வயவர் என்று அழைப்பது அப்பகுதியில் வழக்கம்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும், களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர். ஈழத்து மன்னர்கள் என்ற ஈழவ (திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது. சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர் களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர். வட கேரளத்தில் உள்ள ஈழவர்கள் ‘வித்தை அரங்கு’ அல்லது ‘வேடிக்கை வட்டரங்கு’ விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு இந்தியாவின் சிறந்த கலைஞர்களை உருவாக்கியுள்ளனர் என்ற தகவலையும் தருகிறது விக்கிபீடியா.

இல்லத்துப் பிள்ளைமார் பற்றிய தகவல்களில், தமிழ்நாட்டின் அருகிலுள்ள கேரளாவில் இருக்கும் ஈழவர்கள் இந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்துடன் தொடர்புடையவர்கள். கேரளாவின் அனைத்துப் பகுதி ஈழவர்களிடமும் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார்களிடையே உள்ள இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன. குறிப்பாக கேரளாவின் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஈழவர்களிடையே இருக்கும் இல்லம் எனும் உட்பிரிவுகளும் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார்களிடையே இருக்கும் இல்லம் எனும் உட்பிரிவுகளும் ஒன்றாக இருக்கிறது. இவர்கள் மொழியால் மட்டுமே வேறுபட்டு இருக்கிறார்கள். கேரளாவில் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குப் போராடிய சமூகச் சீர்திருத்தவாதியான ஈழவர் சமுதாயத்தில் பிறந்த ஸ்ரீ நாராயணகுருவின் படம் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினர் வீடுகளில் இடம் பெற்றிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது என்ற தகவல்களையும் விக்கிபிடியா மூலம் அறியமுடிகிறது.

மேலும், கேரளாவிலுள்ள ஈழவர் சமுதாயத்தினருடன் தொடர்புடைய இச்சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் போன்ற ஊர்களில் அதிக அளவிலும், விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர் பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர் பகுதிகளிலும், இதர மாவட்டங்களில் சில ஊர்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலும் வசித்து வரும் இவர்கள் பெரும்பான்மையாக நெசவு மற்றும் கூலி வேலைகளையே செய்து வந்துள்ளனர். தற்போது தொழில் நிமித்தம் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இடம் பெயர்ந்து உள்ளனர்.

சமூக வரலாற்றறிஞர் சீ.இராமச்சந்திரன், எழுதிய “வலங்கைமாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும்” என்ற நூலின் மூலம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் குறித்து கீழ்கண்ட தகவல்கள் தெரியவருகிறது.

கேரள மாநிலத்தில் “ஈழவர்” என்ற பெயரிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் “ஈடிகா” என்ற பெயரிலும் தமிழகத்தில் “இல்லத்துப் பிள்ளைமார்” என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர். சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும்எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப்பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடிவேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை.

கொங்கு நாட்டுப் பேரூர் “மேலைச்சிதம்பரம்” என அழைக்கப்படும். சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத்தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும். இதிலிருந்தே கொங்குச் சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர்பிரிவைச் சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளை உய்த்துணரலாம். மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில் சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் “ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்” என்றும், “தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்” என்றும், “செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்” என்றும், “மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்” என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். இக்குறிப்புகளே மேற்படிச் சமூகத்தவர்க்கும் சான்றோர் குலத்தவர்க்கும், உள்ள தொடர்புகளை உணர்த்த போதுமானவையாகும். சான்றோர் குலத்தில் தோன்றி, அந்தஸ்தை இழந்து “காவிதி” பட்டம் பெற்றவர்கள் இல்லத்தார் எனப் பத்திரகாளியம்மன் கதை [வரி 1884 – 85] கூறும். பிரபுக்கள் வர்க்கத்துக்குரிய அல்லது சத்திரிய வர்ணத்துக்குரிய “சான்றோர்” பட்டம் தமக்குக் கிடைக்காததாலும், தாம் வைசிய வருணத்துக்குரிய அந்தஸ்தோடு மட்டுமே விடப்பட்டதாலும் ஈழவர் காலப் போக்கில் “இல்லத்துப் பிள்ளை” என்ற தமது குலப் பட்டத்தின் வழியாக வேளாளர் குல அடையாளத்தை ஏற்றிருக்க வேண்டும்” [ பக்கம்.174 – 175 ]

இத்தகவல்களிலிருந்து ஈழவர், திய்யா, தீயர், வயவர், இல்லத்துப்பிள்ளைமார் அல்லது ஈழப்பிள்ளைமார், சோழிய வேளாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய இனக்குழுக்கள் வில்லவர், பில்லவா, பூசாரி, நாடார் என்போராவார். இவர்கள் “பணிக்கர்” எனும் சாதிப் பட்டத்தையும் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

இக்கேரளத்து ஈழவர்கள், இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தை பலரும் முன்வைத்திருக்கிறார்கள். பக்தவத்சல பாரதி, “தமிழர் மானிடவியல்” என்ற நூலில் (2008: 35) “கேரளத்து ஈழவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் எனக் கருதப்படுபவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொ. பரமசிவன், “குறிப்பா Sannars of Tamilnadu ன்னு அவர் (கால்டுவெல்) எழுதின புஸ்தகம் இருக்கு… அதுல ஒரு கதை. நாடார்கள் ஈழத்துல இருந்து பனங்கொட்டையோட வந்தாங்க அப்படின்றது. நான் அதை ஒரு வரலாற்று உண்மையாகக் கருதுறேன். ஏனென்றால் ஈழம் என்ற சொல்லுக்குத் தமிழில் பனை என்ற பொருள் உண்டு. பனைமீது விதிக்கப்பட்ட வரிக்கு ஈழம்பூச்சி என்றே பெயர். ஈழவர் என்று கேரளாவிலே சொல்லப்படுகின்ற சாதியார் ஈழத்திலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். அதுபோல நெல்லை மாவட்டத்தினுடைய எல்லையோரத்திலே வாழ்கிற இல்லத்துப்பிள்ளைமார் என்று சொல்லப்படக்கூடிய சாதிகள் ஈழப்பிள்ளைமார் என்றுதான் சொல்வார்கள். அவர்களும் அங்கிருந்துதான் வந்திருக்கணும்.” எனக்கூறுகிறார்.

குமரிமைந்தன், “கரிகாலன் ஈழத்தின் மீது படையெடுத்து பன்னீராயிரம் போர் வீரர்களைச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிறை பிடித்துவந்து காவிரிக்குக் கரையமைத்தான் என்று வரலாறு கூறுகிறது. போர் வீரர்களான இவர்கள் இந்த அடிமை நிலையை எ‌‌திர்த்து நின்றிருக்க வேண்டும். இன்று கேரளத்தில் ஈழவர் என்று அழைக்கப்படும் மக்கள் இவர்கள்தாம் என்று சிலர் கருதுகின்றனர். இவர்களது தொழில் கள்ளிறக்குவதுதான். இவர்க‌ளைத் தீயர்கள் என்று பெயர் சூட்டி ஒதுக்கி வைத்திருந்தனர். தீவர்கள் (இலங்கைத் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதுதான் தீயர்கள் என்று மருவி வழங்கிற்று என்றும் கூறப்படுகிறது… பணிக்கர் எனும் சாதிப் பட்டத்தைத் தாங்குவோர் இவர்களே… தமிழகத்தில் இல்லத்துப் பிள்ளைமார் என்று அழைக்கப்படுவோரும் இவர்கள்தாம். ஆ‌னால் அவர்கள் கள்ளிறக்கும் தொழிலில் ஈடுபடுவதில்லை. ஈழவர்களும் தாங்களும் ஒரே பிரிவினர் என்பதையும் இவர்கள் ஏற்ப‌‌தில்லை. ஆனால் கேரளத்து ஈழவர்களுக்கும் இவர்களுக்கும் கோத்திரப் பெயர்களும், அகமண – புறமணக் கிளைப் பெயர்களும் பிற மரபுகளும் ஒன்றாகவே உள்ளன. ஈழத்துப் பிள்ளைமார் என்பதுதான் இல்லத்துப் பிள்ளைமார் என்று திரிந்துள்ளது உறுதி.” எனக்குறிப்பிடும் தகவல்கள் முக்கியமானவை.

எஸ். இராமச்சந்திரன், “கி.பி. 10-12ஆம் நூற்றாண்டைய தமிழ்க் கல்வெட்டுகளில் ‘தீயமாள்வான்‘ என்ற அடைமொழியுடன் சில வீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். தீயம் என்பது த்வீபம் (தீவு) என்ற சொல்லின் தமிழ்த் திரிபாகக் கருதப்படுகிறது. ஈழத் தீவுக்கும் இக்குலப் பெயருக்கும் (தீயர்) தொடர்பிருக்கக்கூடும். ஈழவர் சமூகத்தவர் ஈழத்தீவிலிருந்து குடியேறியவர்களா என்பது தனித்த ஆய்வுக்குரியது. இப்போதைய நிலையில் தீயர் என்போர் ஈழவர் குலப்பிரிவினர் எனக் கொள்வதில் தவறில்லை.” எனக்குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளப்படவேண்டியதொன்று.

ஈழவர் சமூகத்தில் களப்பணியாற்றியவரும் தற்பொழுது பிரான்ஸில் வசித்துவருபவருமான சிவா சின்னப்பொடி என்னும் ஈழப்போராளி தரும் தகவல்கள் முக்கியமானவையாக அமைகின்றன.

” 1980 களின் ஆரம்பத்தில் நான் கேரள இடதுசாரி தோழர்களோடு அரிவிப்புரம், நெய்யாற்றின் கரை, கொட்டாரக்கரை, காயங்குளம், கோட்டயம் சங்கணாஞ்சேரி முதலான முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலுள்ள ஈழவர் கிராமங்களில் களப்பணியாற்ற சென்ற போது எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்த கிராமங்களின் அமைப்பு முறை, குறிப்பாக ஒழுங்கைகள், வேலிகள் குடிசைகள் மற்றும் கல் வீடுகளின் அமைப்பு முறை, தோட்டம், கிணற்றடி அமைப்பு முறை, மா, பலா, தென்னை, கமுகு முதலான மரங்கள் வளர்ப்பு, கோவில்கள் அவற்றின் பூசை முறை என்பன அச்சொட்டாக எமது தென்மாரட்சி பகுதி (மீசாலை எழுதுமட்டுவாள் பளை பகுதி) கிராமங்களைப் போலவே இருந்தன.

உணவு முறையும் கூட புட்டு, அப்பம், கழி, சொதி, குளம்பு என்பன கூட எமது உணவு முறையைப்போலவே இருந்தது. தோங்காய் பாலை பிரதானமாக பயன்படுத்தி குழம்பு சொதி வைப்பது, மாங்காய் போட்டு தீயல் வைப்பது இவையெல்லாம் அச்சொட்டாக எங்கள் சமையல் முறையைப் போலவே இருந்தது. (தமிழகத்தில் இந்த சமையல்முறை கிடையாது) பேச்சு வழக்கிலே கூட மோனே! மோளே! வெய்யலத்தை போகாதை! மழையத்தை போகாதை! பறையாம இரு!! எவட போற! உறைப்பு கூட! இப்படி பல சொற்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற சொற்களை அதே உச்சரிப்புடன் இந்த ஈழவ மக்கள் பேசுவதை கேட்கக் கூடியதாக இருந்தது. எமது வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில், குடத்தனை, மாமுனை, குடாரப்பு முதலான ஊர்களில் ‘பார் அவரை’ என்பதை ‘பேப்பார்’ என்று சொல்வார்கள். இதை நான் யாழ்ப்பாணத்தில் வேறெந்த பகுதியிலும் கேட்டதில்லை. ஆனால் தமிழக கேரள எல்லையிலுள்ள களியக்காவளை பகுதியில் இதைக் கேட்டபோது எனக்கு அளவுகடந்த ஆச்சரியமாக இருந்தது.

அதைப் போலவே பண்பாட்டு அடிப்படையிலும் அவர்கள் எம்மைப் போல தாய் வழி சமூகக் கூறுகளை முதன்மையாக கொண்டவர்களாக இருந்தார்கள். தாய் வழி சொந்தங்களுக்கு முன்னுரிமை. பெண் திருமணமாகி கணவனோடு தாய் வீட்டில் இருப்பது (தமிழகத்தில் இது வீட்டோடு மாப்பிளை என்று இழிவாகக் கருதப்படுகிறது), தொழில் ரீதியாக தென்னந்தோட்டங்களில் அலவாங்கில் தேங்காயை குத்தி உரிப்பது, தென்னோலை ஊற வைத்து கிடுகு பின்னுவது, பாய் பெட்டி மூடல்கள் இழைப்பது எல்லாமே எங்கள் ஊரைப் போன்றது தான். இந்த ஒற்றுமைகள் நாயர்கள், நம்பூதிரிகள் வாழும் கிராமங்களில் கிடையாது என்பது தான் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் ஆனால், மலபார் என்று சொல்லுகின்ற வட கோரளத்திலுள்ள ஈழவர் கிராமங்கள் மாத்தறை, தங்காலை, கதிர்காமம் முதலான பகுதிகளிலுள்ள சிங்களக் கிராமங்களை போல இருந்தன. அந்தப் பகுதிப் பெண்கள் சிங்கள கிராமியப் பெண்களைப் போலவே உடையணிந்தார்கள். தென்னம் பொச்சை நீர்நிலைகளில் ஊறவைப்பது, பின்னர் அதிலிருந்து தும்பு எடுப்பது, அதன் பின் கயிறு திரிப்பது என்று இந்தத் தொழில் சிங்களக் கிராமங்களில் நடைபெற்ற அதே பாணியிலேயே நடைபெற்றது. “

ஈழவர் சமூகத்தின் சிறப்புக்கள் பற்றி விக்கிபிடியா மூலம் அறியமுடிகிறது. இவர்கள் மாநிலத்தின் முதன்மையான முற்போக்கான பிரிவினரும் ஆவர், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாயனார் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா தினத்தன்று சுப்பிரமணிய சுவாமி இங்குள்ள சங்குமுகநாட்டு இல்லத்துப் பிள்ளைமார் சமுதாய மண்டபத்தில் வைக்கப்படுவது தனிச்சிறப்பு. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகத்தில் பரம்பரையாக பூஜை செய்து வருவதும் இவர்களின் வாரிசுதாரர்கள். இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாகப் பணியாற்றும் உரிமையும் தமிழக அரசு வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. என்ற தகவலை விக்கிபிடியா மூலம் அறியமுடிகிறது.

எஸ். இராமச்சந்திரன், “ஈழவர் சமூகத்தவர் போர்க்கலைப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் போர்க்கலையைக் கற்பிக்கும் ஆசான் மரபினர் என்பதும் வடக்கன் பாட்டுகள் என்கின்ற கேரள நாட்டின் பழமையான நாட்டுப் பாடல்களால் தெரிய வருகின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நாணயவியல் அறிஞர் தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிங்கத்துடன் போரிடும் வீரன் ஒருவனின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பழங் காசினைக் கண்டறிந்தார். அக் காசில் ‘தீயன்‘ என்று பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்ததையும் படித்து வெளியிட்டார். எனவே ‘தீயன்‘ என்ற இக்குலப்பெயர் சங்ககாலத் தமிழரிடையே பரவலாக அறிமுகமான ஒரு பெயரே என்றும் போர்க்கலைப் பயிற்சியுடனும் வீரத்துடனும் அறப்போர் மரபுடனும் தொடர்புடைய ஒரு குலப் பெயராக இருந்துள்ளது என்றும் தெரிகின்றன.” எனக்கூறுகிறார்.

மேலும், “கருமாபுரம் சான்றோர் குல நாடார் மடத்தின் செப்பேடு 1600 வருடங்களுக்கு முந்தையது. அதில் நாடார்கள் பற்றியும் ஈழவர் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. நாயன்மார்களில் ஏனாதி நாயனாரும், ஆழ்வார்களில் நம்மாழ்வாரும் ஈழவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நம்மாழ்வாரை பாண்டிய அரச குலத்தை சார்ந்தவராக அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. நாடார்கள் பாண்டியர்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஈழவர் வரலாற்றில் அவர்களின் இளவரசியை சிங்கள மன்னன் விஜயன் மணந்ததாக கூறுகிறது. விஜயன் மணந்தது பாண்டிய மன்னனின் மகளைத்தான் இதையும் கவணிக்க வேண்டும்” என்ற தகவலை தருகிறது kshatriyanadar.blogspot.

இன்று ஈழவர் சமூகம், மாநிலத்தின் முதன்மையான முற்போக்கான பிரிவினரும் ஆகத் திகழ்கின்ற போதிலும், கடுமையான ஒடுக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டவர்கள் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கியா வலைத்தளத்தில், கேரளத்தில் சென்ற நூற்றாண்டில் கூட ஈழவர் சாதிப் பெண்கள் தலைவரி கட்டியதுடன், முலைவரியும் கட்ட ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை கோரியது. இந்த அவமானத்தை தாங்க முடியாது ”சேர்த்தலை” என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஈழவர் பெண் தன் இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தாராம். (அந்த இடம் இன்றும் முலைச்சிப் பறம்பு என்று அழைக்கப்படுகின்றது)… கிறிஸ்தவச் சாணார் பெண்கள் முலை மறைத்து உடை அணிந்ததால் ஆடை களைந்து அவர்களது முலைகள் அறுக்கப்பட்டன…” என, ஈழவர் சமூகம் எதிர்நோக்கிய கொடுமைகள் விபரிக்கப்பட்டுள்ளன.

Sreedhara Menon, “நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்கமுடியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். கடுமையான அடக்குமுறைக்குள் வாழ்ந்த ஈழவர் சமூகத்தை மேம்மபட்ட சமூகமாக மாற்றிய புரட்சியை செய்தவர் நாராயணகுரு. “அவர் கொலைத்தெய்வங்களை, பலித்தெய்வங்களை அகற்றிவிட்டு அங்கே கல்வித்தெய்வமான சரஸ்வதியை நிறுவினார். அத்வைத ஆப்தவாக்கியத்தை தெய்வமாக்கினார். அது நேரடியாகவே பெரிய விளைவை உருவாக்கியது. கல்வியறிவற்றவர்களும் கள்ளிறக்கும் தொழில்செய்தவர்களும் அடிதடிச்சாதியான ஈழவர் கல்வியில் இந்தியாவுக்கே முன்னுதாரணமான சாதியாக மாறினர். ஒரே தலைமுறைக்குள்” எனக்குறிப்பிட்டுள்ளார் ஜெயமோகன்.

சிவா சின்னப்பொடி, ” கேரள அதிகாரவர்க்த்தைச் சோந்த நம்பூதிரிகளினதும் நாயர்களினதும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் இருந்து இந்த ஈழவர் சமூகம் விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் நாராயணகுரு. அவர் ஈழவர்களுக்கான ஆலயங்களை நிறுவினார். 1888 ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில் அவர் முதலாவது சிவன் கோவிலை நிறுவியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் முதலான தெய்வங்களுக்கான கோவில்களை உருவாக்கியதுடன் வள்ளலாரின் வழியில் இறைவன் ஒளமயமானவன் என்பதை விளக்குவதற்காக விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து கோவில்களை அமைத்தார். பின்பு சத்யம்-தர்மம்-தயவு எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். அதன்பின்னர் மனிதனது மனச்சாட்சிதான் மிகப்பெரிய தெய்வும் என்பதை வலியுறுத்தும் வகையில் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக்கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார். அத்துடன், இந்தக் கோவில்களை ஒட்டி பாடசாலைகளும் களரி முதலான பாரம்பரிய விளையாட்டுகளை பழகும் இடங்களையும் அவர் அமைத்தார். ஈழவர்களால் மரபு ரீதியாக செய்யப்பட்டு வந்த ஆயுர்வேத மருத்துவத்தை வளப்படுத்துவதற்காக ஆயுர்வேத மருத்துவ மனைகளையும் அதை முறையாகக் கற்பதற்கான கல்விக் கூடங்களையும் அவர் அமைத்தார்.

இந்த நடவடிக்கைகள் காலாகாலமாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த ஈழவர் சமூகத்தை அந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்தது. அந்த சமூகத்தை கல்வி அறிவும் முற்போக்கு சிந்தனையுமுள்ள ஒரு சமூகமாக மாற்றியது. நாராயணகுரு ஈழவர் சமூகத்தில் இந்த மாபெரும் பாச்சலை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் ஒரு தமிழர் “. எனக் குறிப்பிடுகிறார்.

சிவா சின்னப்பொடி ஈழவர் குறித்து மேற்கொண்ட களவாய்வு முக்கியமான தகவல்களை தருவாதாக அமைகிறது.

எனது இந்த முயற்சிக்கு உதவுவதற்கு கேரளாவின் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தை சோந்த 4 தோழர்கள் முன்வந்தனர். அதில் முக்கியமானவர் அப்போது திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் கல்வி கற்று வந்த தோழர் எமிலியாசாகும்.

நாங்கள் திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், திருவனந்த புரத்திலிருந்த நாராணாயகுரு மன்றம், திருவிதாங்கூர் சமஸ்தான நூலகம் என்பவற்றிலிருந்து ஈழவர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை திரட்டியதுடன் நெய்யாற்றின் கரையில் இருந்து ஆரம்பித்து மேற்குத் தொடர்ச்சி மலையேரக் கிராமங்கள் மற்றும் வடக்கே காசர்கோடு, வயநாடு ஈறாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 18 மாதங்கள் பல்வேறு ஈழவர் சமூக பெரியார்களை சந்தித்து தகவல்களை திரட்டி கள ஆய்வு செய்ததில், ஈழவர்களுக்கும் ஈழத்திற்கும் தொடர்பிருந்ததை உறுதி செய்ய முடிந்தது. முக்கியமாக சேரர்களுடைய ஆட்சிக் காலத்தில் படைவீரர்களாகவும் படை தளபதிகளாவும் மெய்காப்பாளர்களாவும் வணிகர்காகவும் இருந்த இவர்கள் ஈழத்திலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டியதாக சொல்லப்படும் காலத்தில் ஈழத்திலும் இவர்களே கண்ணகிக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள்.(கண்ணகிக்கு இலங்கையில் கோவில் கட்டப்பட்ட செய்தி சிங்கள வரலாற்று நூல்களிலும் உள்ளது) தமிழகத்துடன் மண உறவுகளை வைத்துக் கொண்ட ஈழத்து மன்னர்கள்( ஈழம் என்பது அப்போது முழு இலங்கைத் தீவையும் குறித்தது) இவர்களையே படைத் தளபதிகளாகவும் மெய்காப்பாளர்களாகவும் நிமித்திருக்கிறார்கள்.

ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் சிறுதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களாகவும் மற்றொரு பகுதியினர் தமிழகத்தில் நிலவிய மாகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள். ஈழத்திலும் இவர்களே தேரவாத பௌத்தத்துக்கு எதிரான மகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள்.

கி.பி 6ம் நூற்றாண்டில் ஆதிசங்;கரருடைய எழுச்சி, தமிழ் நாடான சேரநாட்டை ஆரிய சமஸ்கிருத கலப்புக்குள்ளாக்கி லிங்க வழிபாடு, பத்தினி தெய்வ வழிபாடு (கண்ணகி வழிபாடு) முதலான தமிழ் வழிபாட்டு மரபுகளை அழித்து, அறுவகை சமையம், என்ற வைதீக கட்டுக்குள் கொண்டு வந்தது. சேர நாடு பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியை கடலுக்குள் எறிந்ததால் உருவான நாடு, விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்ட வாமண மன்னரால் ஆளப்பட்ட புனித பூமி என்பது போன்ற ஆரியம் சம்பந்தப்பட்ட புராணக்கதைகள் முதன்மைப்படுத்தப்பட்டன.

சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் அதிகாரமுடையவர்களாக இருந்த வில்லவர்கள் எனப்படும் இந்த ஈழவர்கள் சமஸ்கிரத மேலாதிக்க அலையில் அதிகாரம் இழந்து அடிமைகளாக்கப்பட்டார்கள். அதேநேரம் தமிழகத்தில் சைவநாயன்மார்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமண பௌத்த மதங்களுக்கு எதிரான இயக்கம், சோழ பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற சமண, பௌத்த மதத்தினரை கழுவேற்றிக் கொலை செய்யும் அளவுக்கு வெறிகொண்டதாக மாறுகிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மாகாயான பௌத்தம் (சமணமும்கூட) துடைத்தழிக்கபடுகிறது. அந்த மதத்தை சேர்ந்த விகாரைகள் இடித்தழிக்கப்பட்டு அங்கிருந்த பிக்குகள் கழுவேற்றிக் கொல்லப்பட அந்த மதத்தை கடைப்பிடித்த ஏனையோர் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் ஒரு சிறு தொகையினர் ஈழத்துக்கு தப்பியோட ஏனையோர், அந்தகாலத்தில் வலுவிழந்த அரசை கொண்டிருந்த வேளிர் நாட்டுப்பகுதிக்கு (பின்னாளிள் திருவிதாங்கூர்) சென்று தஞ்சமடைகின்றனர்.

ஈழத்திலும் இந்த மதப் போர், சைவ பௌத்தப் போராகவும், மாகாயான தேரவாதப் போராகவும் வெடிக்கிறது. யாழ்ப்பாணக்குடா நாட்டில் கந்தரோடை என்ற கதிரமலையில் இருந்த தமிழ் பௌத்த(மகாயான) தலைநகரம் கைவிடப்படுகிறது. அந்த நகரத்தின் கடைசி மன்னனான உக்கிரசிங்கன் சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை ( மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவள்) மணம் புரிந்து சைவ சமயத்தக்கு மாறியதுடன் தனது மனைவியின் பேரால் வல்லிபுரம் என்ற நகரத்தையும் உருவாக்கி தனது அரசை அங்கு மாற்றுகிறான். தெற்கே மாகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த (அனுராதபுரத்திலிருந்த அபயகிர விகாரை உட்பட) அனைத்து விகாரைகளும் தேரவாத பௌத்த பிரிவினரால் அழித்தொழிக்கப்படுகிறது. தேரவாத பௌத்தமானது தமிழ் எதிர்ப்பு, தமிழ் நாட்டு எதிர்ப்பு, ஆரிய தூய்மைவாதம் என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்தி தன்னை இலங்கையின் ஆதிக்க மதமாக நிறுவிக்கொள்கிறது. தென் இலங்கை முழுவதும் பரவி வாழ்ந்த மகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த வில்லவர்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். மகாயான பௌத்தமும் துடைத்தளிக்கப்படுகிறது.

இவ்வாறு அன்று ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வில்லவர்கள் அன்றைய சேரநாட்டில் தஞ்சமடைகிறார்கள். அவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்கின்ற படியினால் அப்போது சேரநாட்டில் தலையெடுத்த ஆதிக்கசாதியனரான (ஆரியவம்சாவழி) நம்பூதிரிகளும், நாயர்களும் அவர்களை ஈழவா அல்லது ஈழவர் என அழைத்தனர். இதுவே பின்னர் அவர்களது சாதிப் பெயராக ஆகிவிட்டது. இதிலே முக்கியமான விடயம் இந்த ஈழவர்கள் அல்லது வில்லவர்களில் ஈழத்தில் ஒரு அரச பரம்பரையை சோந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அது, எந்த அரச பரம்பரை என்பதற்கு உரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லலை. திய்யா என்று அழைக்கப்படும் இந்த மன்னர் பரம்பரை மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் அனுராதபுரத்தை ஆண்ட சேனன், குந்திகன் பரம்பரையின் வழித்தோன்றல்களா? அல்லது யாழ்ப்பாணக்குடா நாட்டை ஆண்ட உக்கிரசிங்கனின் அரசவம்சத்தை சோந்தவர்களா? அல்லது வேறெந்த அரசும் அவர்களுக்கு இருந்ததா? என்பது ஆராயப்படவேண்டும்.

எனக் குறிப்பிட்டுள்ளார் சிவா சின்னப்போடி.