‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள்

வரலாற்றை எழுதுவோர் யார், எமக்குச் சொல்லப்படும் செய்திகள் யாருடைய செய்திகள் போன்ற கேள்விகளை, நாம் தொடர்ந்து கேட்கவும் ஆராயவும் வேண்டும். சில பொய்கள், தொடர்ந்து சொல்லப்படுகின்றன. அதன் மூலம், அதை மீளவும் உண்மை என நிறுவும் காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

இம்மாதம் ஐந்தாம் திகதி, சீனாவின் ‘தியனன்மென்’ சதுக்கத்தில் இடம்பெற்ற படுகொலையின் 30 ஆண்டுகள் நிறைவு, மேற்குலக ‘ஊடகங்களால் நினைவுகூரப்பட்டது. சீன அரசாங்கத்தினதும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் கொலைவெறிச் செயல்’ என, இந்நிகழ்வு நினைவுகூரப்பட்டு வருகிறது.

இம்முறை, 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிகழ்வுகள், இன்னும் கொஞ்சம் மேலதிக ஊடகக் கவனிப்புடன் முக்கியத்துவம் பெற்றன. இதன் பின்னணியில் சொல்லப்பட வேண்டிய செய்திகள் சில உண்டு. அதேவேளை, இன்று முற்றியுள்ள அமெரிக்க – சீன வர்த்தகப் போரின் தொடக்கம், இந்தத் ‘தியனன்மென்’ சதுக்க நிகழ்வுடனேயே தொடங்குகிறது.

கதையும் கட்டுக்கதையும்

‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை பற்றி, எமக்கு இதுவரை சொல்லப்பட்டு வந்தது என்ன என்பது, இங்கு முக்கியமான வினா? ‘சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ‘தியனன்மென்’ சதுக்கத்தில், ஜனநாயகத்தைக் கோரி, மாணவர்கள் செய்த போராட்டத்தை, வன்முறை கொண்டு சீன அரசாங்கம் அடக்கியது. இதன்போது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். சீனா, ஜனநாயகமாவதற்கான ஒரே வாய்ப்பு, 1989 இல் கிடைத்தது. அது, வன்முறை கொண்டு அடக்கப்பட்டது. மேற்குலக நாடுகளில் நடைமுறையில் இருந்துவரும், ஜனநாயகத்தின்பால் ஈர்ப்புக் கொண்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு, சீனாவின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைச் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது’. இந்தக் கதை, கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால், 1989இல் சீனாவில் என்ன நடந்தது என்பது பற்றிப் பல ஆய்வுகள், ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவை தொடர்ந்தும் மறைக்கப்பட்டு வருகின்றன.

1989இல் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான ஹு யவ்பாங்கின் மரணத்தை அடுத்து, 1989 ஏப்ரலில் மாணவர் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.

ஹு யவ்பாங், ஒரு சீர்திருத்தவாதியாகவும் திறந்த பொருளாதாரத்தை முழுமையாக ஆதரிப்பவராகவும் இருந்தார். அவரது மரணச்சடங்கில் பங்கேற்கச் சென்ற மாணவர்கள், அதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இது, சிலகாலத்தின் பின்னர், அரசாங்கத்தின் ஊழலுக்கும் கொம்யூனிஸ்ட் கட்சியின் வினைத்திறன் இன்மைக்கும் எதிரான போராட்டமானது. போராட்டக்காரர்களுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக சீன அரசாங்கம் தெரிவித்தது.

ஆனால், போராட்டக்காரர்கள், முதலில் சீன அரசாங்கம் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்தே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும் எனவும் சொன்னார்கள். அரசாங்கம் தொடர்ச்சியாகப் பேச்சுகளின் ஊடாக, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தது. ஆனால், பேச்சுகள் தடைப்பட்டன. இதையடுத்து, மே மாதம் 19ஆம் திகதி, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

போராட்டக்காரர்களை அமைதியாகக் கலைந்து செல்லும்படி கேட்கப்பட்டது. பல போராட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள். ஆனால், குறிப்பிடத்தக்க போராட்டக்காரர்கள், ‘தியனன்மென்’ சதுக்கத்தை முற்றுகையிட்டு, பாதைகளை ம​றித்து, இராணுவத்துடன் முரண்பட்டார்கள்.

தொடக்கத்தில், சீன அரசாங்கம் ஆயுதங்களைப் பயன்படுத்தாது, போராட்டக்காரர்களை அகற்ற முனைந்தது. இதனால், சீன மக்கள் விடுதலை இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதில், நிராயுதபாணிகளான இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்கள் வன்முறையைப் பயன்படுத்துவார்கள் என, சீன அரசாங்கமோ, சீன இராணுவமோ எதிர்பார்த்திருக்கவில்லை. இது, சீன அரசாங்கத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதேவேளை, இராணுவத்தினர் கொல்லப்பட்டது, அரசாங்க மட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆயுதபலத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களை அடக்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆயுதங்களுடன் வந்த இராணுவத்தினரை, போராட்டக்காரர்களும் ஆயுதங்களுடனேயே எதிர்கொண்டார்கள். இறுதியில், இரண்டு தரப்பிலும் உயிர்ச்சேதம் இருந்தது. போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சொல்லப்படும் கதைகளின் கதை

நடைபெற்ற நிகழ்வுக்கும், அந்நிகழ்வு பற்றி, எமக்குச் சொல்லப்பட்டுள்ள கதைக்கும் இடையிலான வேறுபாடு பெரிது. இந்த வேறுபாட்டுக்கான காரணங்கள், அறியப் பயனுள்ளவை.

உலகில் நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வழியாக எம்மை வந்தடைகின்றன. அவை, வெறும் தகவல்களாக மட்டும் எம்மை வந்தடைவதில்லை. நடைபெற்ற நிகழ்வு, அதற்கான காரணகாரியம் என, அவற்றுக்கான விளக்கங்கள், வியாக்கியானங்கள், ஆய்வுகள் என எல்லாம் கலந்தே, செய்தியாக எமக்கு வழங்கப்படுகின்றது. இதில் உண்மை எது, பொய் எது என்பதைப் பிரித்தறிய இயலாதளவுக்கு, உண்மையும் பொய்யும் கலக்கப்பட்டு எமக்கு வழங்கப்படுகின்றது.

எமக்குச் சொல்லப்படும் பல செய்திகளுக்கு, ஆதாரங்களோ மூலங்களோ கிடையாது. ஏதோ ஓர் இணையத்தளத்திலோ, பத்திரிகையிலோ வந்த தகவலே ஆதாரமாகிறது. எமக்குச் சொல்லப்படும் உலகச் செய்திகள் யாவும், சர்வதேச ஊடகங்களின் செய்திகளே. நமது ஊடகங்கள், உலகத் தகவல் நிறுவனங்களின் பொய்களைத் திருப்பிச் சொல்லுகின்றன.

மக்கள் விடுதலை இராணுவம் நிராயுதபாணிகளாகப் போராட்டக்காரர்களை கலைக்க முனைந்ததையும் போராட்டக்காரர்களே முதலில் வன்முறையைப் பிரயோகித்ததையும் ஊடகங்கள் இன்றுவரை மறைக்கின்றன. இது குறித்துப் பல தகவல்கள் வெளியானபோதும், அவை சீனாவின் பிரசாரங்கள் என்று புறக்கணிக்கப்பட்டன.

ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு, அமெரிக்க தூதரகங்களின் செய்திப் பரிமாற்றங்களை ‘விக்கிலீக்ஸ்’ பகிரங்கப்படுத்தியபோது, ‘தியனன்மென்’ சதுக்க நிகழ்வு பற்றி, சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதுவராலய அதிகாரிகள், வொஷிங்கனில் உள்ள தலைமையகத்துக்கு எழுதிய ‘கேபிள்’கள், ‘தியனன்மென்’ சதுக்கத்தில் கொலைகள் எதுவும் நடக்கவில்லை; மாறாக, சீனாவின் வேறுபகுதிகளில் நடந்த கைகலப்புகளில், துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு, இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்பதைச் சொல்கின்றன.

1989இல், சீனாவுக்கான சிலி நாட்டின் தூதுவர், ‘தியனன்மென்’ சதுக்கத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு, தான் அதன் நேரடிச் சாட்சியம் என்றும் கூறியுள்ளார். அதேபோல, இந்நிகழ்வுகளை நேரடியாகச் செய்தியாக்கிய பி.பி.சி செய்தியாளர் ஜேம்ஸ் மைல்ஸ், “பத்தாண்டுகளுக்கு முன்னர், ‘தியனன்மென்’ சதுக்கத்தில் கொலைகள் நிகழவில்லை. நான், தவறுதலாக அறிக்கையிட்டேன்” என்பதை ஒத்துக் கொண்டார்.

இதுகுறித்து, மேலதிகமாக அறிய விரும்புபவர்கள், ‘விக்கிலீக்ஸ்’ அம்பலப்படுத்தியதும் 1989இல் பரிமாறப்பட்டதுமான இராஜதந்திரக் ‘கேபிள்’களை வாசிக்கலாம்.

சீனாவின் மீதான அமெரிக்காவின் போர்

‘தியனன்மென்’ நிகழ்வு நடைபெற்ற காலப்பகுதி, மிகவும் முக்கியமானது. அமெரிக்க, சோவியத் ஒன்றியக் கெடுபிடிப்போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலமது.

சோவியத் ஒன்றியம் தன் முடிவை, மெதுமெதுவாக எட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்கா, சீனாவுக்கு நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருந்தது. மாஓ சேதுங்கைத் தொடர்ந்து தலைமையேற்ற டென்சியோ பிங், புதிய திசையில் சீனாவை நகர்த்த முயன்று கொண்டிருந்தார்.

சோவியத் ஒன்றியத்தின் சரிவு, சீனாவுக்குப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவைக் கொடுத்திருந்த நிலையில், அமெரிக்காவின் நேசக்கரத்தைப் பற்றினார். அமெரிக்காவுடனான நல்லுறவின் ஊடாக, பொருளாதார வலிமையுள்ள நாடாகச் சீனாவைக் கட்டியெழுப்ப விரும்பினார். இதன் பின்னணியிலேயே, 1989இல் அரசாங்கத்துக்கு எதிராக, மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில், அமெரிக்க, பிரித்தானிய, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உளவுத்துறைகளின் கரங்கள் இருப்பதை, சீன அரசாங்கம் கண்டுபிடித்தது. சீனாவில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி, தோல்வியடைந்தது.

அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில், 1990களில் அரங்கேற்றிய நிறப்புரட்சிகளின் சோதனை, சீனாவிலேயே முதலில் அரங்கேறியது. அமெரிக்காவின் இந்த நடத்தை, அமெரிக்க – சீன மறைமுகப்போரின் தொடக்கமானது. அன்றுமுதல் அமெரிக்காவை நம்ப, சீனா தயாராக இல்லை என்பதே உண்மை. இதன் நவீன வடிவம், வர்த்தகப் போராக இப்போது அரங்கேறுகிறது.

போராட்டம் முடிவுக்கு வந்த கையோடு, ‘தியனன்மென்’ ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்திய மாணவத் தலைவர்கள் பலர், விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக, அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஜ.ஏ, பிரித்தானியாவின் எம்.ஜ. 6, பிரான்ஸ் தூதராலயம் ஆகியவை இணைந்து, 800 மாணவர்களை, பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஹொங்கொங் ஊடாக, மேற்குலக நாடுகளுக்கு அனுப்பிவைத்தது. இந்த நடவடிக்கை Operation Yellowbird எனப்பட்டது. இவர்கள் கைதாவார்களாயின், மேற்குலகின் பங்கு வெளிப்பட்டுவிடும் என அமெரிக்கா அஞ்சியது.

இதன் போது வெளியேறி, இப்போது அமெரிக்காவில் வாழும் சாய் லிங், 2014ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார். “நாங்கள் வன்முறையைப் பயன்படுத்தி, அரசாங்கத்தை எரிச்சலுக்கு உள்ளாக்கி, அச்சுறுத்தி, இறுதியில் அரசாங்கம், தனது மக்களுக்கு எதிராகவே, வன்முறையைப் பயன்படுத்தத் தூண்டினோம். இதன்மூலம், ஓடும் இரத்தஆறு, ஆட்சிமாற்றம் ஒன்றைக் கொண்டு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இதைப் போராடும் மாணவர்களிடம் நாம் கூறவில்லை.

ஏனெனில், இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம் என்றால், மாணவர்கள் ஒருபோதும் எம்முடன் இருக்கமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்”. இந்தக் கூற்றுகள், இந்த ஆர்ப்பாட்டங்களை யார் தூண்டினார்கள் என்பதையும் இதன் பின்னால் இருந்த நலன்கள் என்ன என்பதும் விளங்கக் கடினமானதல்ல.

இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு, Wei Ling Chua எழுதிய Tiananmen Square Massacre? The Power of Words vs Silent Evidence என்ற நூலை வாசிப்பது பயனுள்ளது. உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்தாலும், அது ஒருநாள் வெளியே வரும்; வந்தே தீரும். ‘தியனன்மென்’ சொல்லும் செய்தியும் அதுதான்.