நன்றி மறந்தோம் நாதியற்றவர் ஆனோம்!?

ஈழத் தமிழரை நாடு விட்டு ஓடவைத்தது மட்டுமல்ல, சொந்த நாட்டில் இருப்பவரை கூட நடுத்தெருவில் குந்தி இருந்து புலம்ப விட்ட நிலையை உருவாக்கிய படுகொலை நடந்த நாள் மே 21. இந்தியாவின் இளம் பிரதமர், பாரதத்தை கணணி யுகத்தில் முன்னிலை படுத்தியவர்,  எதிர்கால இந்திய வல்லரசின் அசுர வளர்ச்சிக்கு தன் சிந்தனை சிறகை விரித்தவர், சிறிபெரம்புதூர் மண்ணில் மிருக வெறியின் உச்சத்தால் உடல் சிதறுண்டு போனார்.

அதை செய்த தனுவை நான் நிந்திக்க மாட்டேன். அது சிந்தனை சிதறல். உணர்ச்சி ஊட்டல். அவள் பாதை தெரியாத பயணி. எய்தவன் உண்மை நோக்கம் அறியா அம்பு. ஆனால் எய்தவன் வஞ்சகன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன். மாதா மாதம் கிடைக்கும் பணத்துக்காக தன் வாலை சுருட்டியவன். வாங்கிய பணத்தில் ஆயுதம் வாங்கி அட்டூழியம் செய்தவன். அது எம் நாட்டு வங்கிகளை, கோவில்களை, தனி நபர்களை, கொள்ளை அடித்த பணமோ,

அல்லது எம் ஜி ஆர், மற்றும் இந்திய அரசு மட்டுமல்ல, எம் எதிரியான சிங்களத்தின் தலைவன் பிரேமதாசா கொடுத்த பணம் உட்பட மகிந்த கொடுத்த பணம் அத்தனையும், எம் இனத்தை கருவறுத்தது தான் வரலாறு.

அதே வேளை இந்திய பிராந்திய நாலன் முன்னிலைப்பட்ட போதும், எம் நிலை நிரந்தர தீர்வு அடைய இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முறைமையை அறிமுகம் செய்த அந்த மா மனிதன், இன்று இல்லை என்ற ஏக்கம் ஈழ தமிழருக்கு அகிலம் எல்லாம் உறைக்கும். அமரர் ராஜீவ் காந்தி அவர்கட்கு என் இதய அஞ்சலி.! உண்மைகள் சிலருக்கு கசக்கும். ஆனால் மறுக்க முடியாது.

(ராம்)