பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 31)

1970 அப்பசி மாதம் இல்ங்கை வானொலியில் ஒரு அதிர்ச்சிகரமான புதிய செய்தி ஒலிபரப்பானது.அன்றைய நிதி அமைச்சர் கலாநிதி என்.எம்.பெரேரா புதிய அம்பது,நூறு ரூபா நாணயத்தாள்களை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.

கறுப்புப் பணங்களை வெளியில் கொண்டுவருவதற்காக சிறிமா அம்மையாரின் உதவியுடன் இந்த புதிய நாணயத்தாள்களை அறிமுகப்படுத்தினார் .பழைய நாணயத்தாள்கள் யாவும் அப்பசி மாதத்திற்கு முன்பாக மாற்றப்படவேண்டும்.அதன் பின் அவை செல்லாத காசாகிவிடும் என அறிவிக்கப்பட்டது.இந்த உத்தரவு 1970 அப்பசி 3 ம் திகதியில் வந்தது.( என் நினைவுப் படி)

அப்போது திருகோணமலையில் மட்டுமே வங்கி இருந்தது.அந்த வங்கியால் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும்.தென்னமரவாடி புல்மோட்டை மக்கள் இங்கே வந்துபோவது கஷ்டம்.பெரும் அலைச்சல் கூட.
இந்நிலையில் பற்குணம் தனது குச்சவெளி பிரதேச மக்களை நினைத்தார்.உண்மையில் பலருக்கு இதைப் பற்றி தெரியாமலே இருந்தது.

பொதுவாக பலரிடம் அம்பது அல்லது நூறு ரூபாக்களே இருக்கும்.இதை மாற்ற அவர்களால் திருகோணமலை நகரத்துக்குப் போய் வர முடியாது.ஆனால் அந்தப் பணம் ஏழைகளுக்கு மிகவும் பெறுமதி மிக்கது.எனவே யாரும் பணத்தை இழக்கக்கூடாது என தீர்மானித்தார்.

இதுபற்றி அரச அதிபரிடம் கதைத்தார்.தனக்கு பணம் அனுப்பிவைத்தால் அலுவலக மூலம் தன்னால் செயற்படுத்த முடியும் என்றார்.ஆனால் வங்கியும் அன்றைய பொலிஸ் அதிபரும் சம்மதிக்கவில்லை .காரணம் பாதுகாப்பு.ஆனாலும் பற்குணம் விடவில்லை .

இறுதியாக அரச அதிபர் பற்குணத்தின் கோரிக்கையை ஏற்று பொலிஸ் உதவியுடன் பணத்தை அனுப்ப சம்மதித்தார்.இரண்டு பொலிஸ் மட்டும் காவலுக்கு தந்தனர்.

மிகவும் ஒழுங்காக திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் எந்த எந்த பகுதி மக்கள் வரவேண்டும் என வகுத்து நிலாவெளி ஆறாம் கட்டை முதல் தென்னமரவாடி வரை எந்த ஒரு ஏழையும் நஷ்டப்படாமல் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் பணம் மாற்றிக் கொடுக்கப்பட்டது.எந்த சன நெருக்கடியோ அசம்பாவிதமோ ஏற்படவில்லை.பொது மக்கள் பெரும் ஒத்துழைப்பை ஒழுங்குமுறைக்கேற்ப தந்ததும் ஆச்சரியமானது .

இந்தப் பணம் வழங்கியபோது அத்தனைபேருக்கும் இறுதியாக பணம் சரிபார்த்து வழங்கியது பற்குணம்தான்.ஒவ்வொருவருக்கும் அவரே எண்ணி வழங்கினார்.இந்த பணத்தை ஆறுபேர் மாறி மாறி எண்ணி வழங்கினர்.காரணம் எந்த தவறும் நேரக்கூடாது என்பதே.

நித்திரைப் பிரியரான பற்குணம் காலை ஆறு மணிதொடங்கி நள்ளிரவுவரை அந்த மாதம் முழுவதும் பணியாற்றினார் .இதே நேரம் டி.ஆர்.ஓ அலுவலகமும் தடங்கலின்றி இயங்கின.நான் என் வாழ்நாளில் பெருந்தொகை பணத்தை பார்த்தது அதுதான் முதலும் கடைசியும்.

மக்களின் தேவை கருதிய அவரின் முழுமையான செயற்பாடாக இதை நான் கருதுகிறேன்.

(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்….)