மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது; திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என ஸ்டாலின் தகவல்

திமுக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஏற்கெனவே முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு தலா 2, மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே ஆகியவற்றுக்கு தலா 1 என கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளின் குழுக்களுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களின் கூட்டம் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஆர்.தேவராஜன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு திமுக கூட்டணியில் உள்ள 9 கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 2, 3 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை கண்டித்தும், மக்களின் பிரச்சினைகளுக்காகவும் இணைந்து போராடி வந்தோம். இந்த தோழமை தற்போது மதச்சார்பற்ற கூட்டணியாக மாறியுள்ளது. இது பேர அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. கொள்கை அடிப்படையில் அமைந்த எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இன்னும் நான்கைந்து நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதிகள், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வரும் 17-ம் தேதி வெளியிடப்படும்.

கடந்த 13-ம் தேதி நாகர்கோயிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடக்கும்.

பொள்ளாச்சியில் நடந்துள்ள தமிழகத்தையே உலுக்கியுள்ள பாலியல் கொடூரம், வரும் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவே எனது மருமகன் சபரீசன் மீது பொய்யான புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். என் மீதும் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். நீதிமன்றத்தையும் நாடுவோம்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் ஆட்சி போய்விடும் என்பதால் பாஜகவும், அதிமுகவும் தேர்தல் நடப்பதை விரும்பவில்லை. என்ன நடந்தாலும் வரும் தேர்தலுக்குப் பிறகு மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் அகற்றப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

தீர்மானம்

முன்னதாக நடந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதலைவர்களின் கூட்டத்தில், ‘பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், பிற விவரங்களை சிபிஐ விசாரணைக்கான அரசாணையில் தமிழக அரசு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் கொடூரம் குறித்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும், போராடுபவர்கள் மீதும் காவல் துறை தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்பிவிடாதபடி உயர் நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.