மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், சரியாக மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள். உண்மையில், தொழிலாளர் சுரண்டப் படுவதை தடுப்பதற்கான சட்டம் காரணமாகத் தான், ஆறு மணிக்கே கடை பூட்டுகிறார்கள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

ஐரோப்பாவிலும் ஒரு காலத்தில் நேர காலம் பாராமல் கடை திறந்திருந்த காலமிருந்தது. வியாபாரத்தில் ஒரு நாள் அதிகமாக விற்பனையாகும், மறு நாள் குறைவாக விற்பனையாகும். பகல் முழுவதும் யாரும் வராமல், இரவு கடை பூட்டும் நேரம் சனம் வந்தால், முதலாளி சொன்னதற்காக வேலை செய்தனர். அந்த மேலதிக நேரத்திற்கு சம்பளம் கிடைக்காமலும் போகலாம்.

“மனச்சாட்சிக்காக… மனிதராய் வாழ்வதால்” தானும் அவ்வாறு செய்ததாக தமிழ்த் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். இந்த மனச்சாட்சியும், மனிதாபிமானமும் முதலாளியிடம் கிடையாது என்பதை அந்த அப்பாவித் தமிழர் உணரவில்லை.

அந்த முதலாளி, மனச்சாட்சியின் படி, நிறைய வாடிக்கையாளர்கள் வரும் நாட்களில் சம்பளம் கூட்டிக் கொடுப்பதில்லை. சிலநேரம் அப்படியான நாட்களில் கொடுக்கப் படும் பணம் சம்பளம் அல்ல. அதற்குப் பெயர் போனஸ். அதாவது, அளவுக்கு மிஞ்சி இலாபம் வரும் பொழுது அதில் ஒரு பகுதியை கொடுப்பது.

சம்பளம் என்பது வேறு. அது பொதுவான செலவாக கணக்கு வைக்கப் படுகின்றது. அதாவது, ஒரு கடையில் வியாபாரம் நடந்தாலும், நடக்கா விட்டாலும், யாராவது அங்கே வேலை செய்ய வேண்டும். கடைக்கு தேவையான மின்சாரம் மாதிரி, வேலைக்கான கூலியும் ஒரு தவிர்க்க முடியாத செலவு தான்.

பகலில் யாரும் வராமல் இரவில் கடையை பூட்டும் நேரத்திற்கு சனம் வருவதால், திறந்திருக்கும் மேலதிக மணித்தியாலத்திற்கு மின்சார செலவை குறைக்க முடியாது. ஆனால், தொழிலாளரின் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றலாம். “மனச்சாட்சி, மனிதாபிமானம்” பார்க்கும் தொழிலாளர்களும் அந்த மோசடியை கண்டு கொள்ள மாட்டார்கள்.

பகலில் சனம் வரவில்லை என்ற சாட்டு சொல்லி, நேர, காலமில்லாமல் கடையை திறந்து வைத்து தொழிலாளரின் உழைப்பை சுரண்டும் நடைமுறை உலகம் முழுவதும் உள்ளது தான். ஐரோப்பாவில் அது பற்றிய விழிப்புணர்வு உருவானதால், அரசு தலையிட்டு மாலை 6 மணிக்கே கடையை பூட்ட வேண்டும் என்று சட்டம் பிறப்பித்தது.

தற்போது சில சூப்பர் மார்க்கெட்டுகள், அரசிடம் அனுமதி பெற்று இரவு 10 மணி வரை திறக்கிறார்கள். ஆனால், அதற்கு மேலதிக வரி செலுத்த வேண்டும். மாலை 6 மணிக்கு பிறகு வேலை செய்பவர்களுக்கு, சம்பளத்தில் 25% கூடுதலாக கொடுக்க வேண்டும். இதனால் பொருட்களின் விலையும் கூடியுள்ளது.

(Kalai Marx)