‘மீளவும் முன்னிலைக்கு வர வேண்டும்’

கல்வியில் முன்னிலையில் இருந்த யாழ்ப்பாணம் தற்போது பின்னடைவைச் சந்தித்திருக்கின்ற நிலையில் மீளவும் முன்னிலைக்கு வர வேண்டுமென, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அத்துடன், கல்வி மற்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியிலான முன்னேற்றத்துக்கு அரசியல்வாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு, இன்று (18) 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இலட்சக்கணக்கான பணம் செலவழித்து தமிழ் நாட்டிலிருந்து எங்களுக்கு வந்து இத்தனை ஆயிரம் புத்தகங்களைக் கொடுப்பது எமக்கு கிடைத்த பெரிய உதவியாகுமெனவும் அறிவுத் தியாகம் தான் மிக முக்கியம். அது தான் வாழ்க்கைக்கும் உதவியாக அமையுமெனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கல்வியிலேயே முன்னிலை வகித்தாகவும் தற்போது பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் தெரிவித்த அவர், ஆகவே மீளவும் முன்னிலைக்குச் செல்ல வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இங்குள்ள மக்களின் விடுதலைக்கு இருக்கின்ற ஒரே விடயம் கல்வி தான். அத்தகைய கல்வி தான் இங்குள்ள சொத்தாகுமெனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் தான் அதிகம். இந்த நாட்டின் பல இடங்களிலும் உயர் பதவிகளில் இருந்தனர், இருக்கின்றனர். உலகத்திலேயும் இங்கு கற்வர்கள் தான் முன்னிலை பதவிகளில் உள்ளனர். ஆகவே, அவ்வாறு முன்னிலையிலிருந்த கல்வி தற்பொது பின்னடைவில் இருந்தாலும் அதனை மீளவும் முன்னிலைக்கு கொண்டு வரும் வகையில் இந்தியா வழங்கும் உதவிகள் மிக நல்லவை எனத் தெரிவித்தார்.

ஆகவே, தமிழ் மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் முன்னேற்றமடைய வேண்டும். அதற்கு இங்குள்ள அரசியல் வாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செயற்படுகின்றது. அதே போன்று தமிழகமும் வடக்கு மாகாணமும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.