பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 13-11-2018 – SDPT

ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் மாகாண சபையின் அதிகாரங்கள் பறிபோகாது ஜனாதிபதியும் ஆளுநரும் அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

– அ. வரதராஜா பெருமாள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகள் கலைக்கப்பட்டு இப்போது ஆளுநரின் தலைமையின் கீழ் மாகாண ஆட்சி நடைபெறுகிறது. இதனvaratha் அர்த்தம் மாகாண ஆட்சி முறை குலைந்து போனதாக அர்த்தமாகாது. இவ்வாறான காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியின் அதிகாரங்களைக் கையிலெடுத்து செயற்படும் எனக் கருதுவதும் தவறாகும். அவ்வாறான தவறான அர்த்தத்தில் மாகாண ஆட்சி முறையை கடந்த காலங்களில் கையாண்டதனாலேயே 13வது அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் மாகாண சபை முறை கொண்டிருந்த ஆட்சித் தத்துவங்களெல்லாம் காலப்போக்கில் கரைக்கப்பட்டு மலினப்படுத்தப்பட்டன.

மாகாண சபை கலைக்கப்பட்டு ஆளுநரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படுகிற போது மாகாண ஆட்சிக் கட்டமைப்பின் எந்தவொரு பகுதியினது அதிகாரமும் எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் கைமாற்றப்பட மாட்டாது. மாறாக, அக்காலகட்டத்தில் அந்த மாகாணத்தின் நிறைவேற்றதிகாரங்கள் ஆளுநருக்கு மட்டுமே உரியதாகும். மாகாண ஆட்சிக் கட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளையும் வழி நடத்துவதுவும், கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதுவும் அரசியல் யாப்பின்படி அளுநருக்கு மட்டுமே உரியதாகும். மத்திய அமைச்சர்கள் எவரும் மாகாண ஆட்சியின் அதிகாரங்களுக்கு உட்பட்ட எந்த விடயத்தின் மீதும் அதிகாரம் செலுத்த முனைவதோ அல்லது அவற்றின் செயற்பாடுகள் எதன் மீதும் மத்திய அமைச்சர் என்ற வகையில் தலையீடுவதோ அரசியல் யாப்பை மீறும் செயலாகும். ஆவ்வாறான அணுகுமுறை முன்னர் இங்கே பிரயோகிக்கப்பட்டது என்பதனாலேயெ இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

மாகாண சபைகள் ஆளுநர் ஆட்சியின் கீழ் உள்ளபோது மாகாண சபைக்குரிய சட்டவாக்க அதிகாரங்கள் மட்;டுமே பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்படும். அதே எண்ணத்தில் இந்தக் காலகட்டத்தில் மாகாண ஆட்சிக்குரிய எந்தவொரு நிறைவேற்றதிகாரத்தையும் மத்திய அமைச்சர் எவரும் தமது கையில் எடுத்துக் கொள்ள முற்படுவiது மாகாண ஆட்சி முறையையே சிர்குலைக்கும் முயற்சியாகவே கருதப்பட வேண்டும். மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வுக்குரிய அடிப்படை விதிமுறைகள் கடந்த காலங்களில் மீறப்பட்டமையினாலேயே மாகாண சபைகள் ‘வெள்ளை யானைகள்’ என ஆக்கப்பட்டன. அதனாலேயே முக்கிமான பல விடயங்களில் 13வது அரசியல் யாப்புத் திருத்தம் மூலம் மாகாண ஆட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தை மெதுமெதுவாகச் சென்றடைய நேரிட்டன.

அந்த நிலைமை மீண்டும் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதியையும் ஆளுநரையும் கேட்டுக் கொள்கிறோம். மாகாண சபையின் செயற்பாடுகளை வலுவுள்ளதாகவும் மக்களுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்குவதற்கு ஜனாதிபதியினதும் மத்திய அமைச்சர்களினதும் ஒத்துழைப்புகளை ஆளுநர் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு பிரதிபலனாக மாகாண ஆட்சியின் நிறைவேற்று அதிகாரங்களை மத்திய அமைச்சர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கவர்ந்து கொள்வதற்கு இடமளிக்காது பார்த்துக் கொள்வது இந்தக் காலகட்டத்தில் ஆளுநரின் கடமையாகும்.

மாகாண சபை கலைக்கப்படும் போது எவ்வாறு ஆளுநர் மாகாண ஆட்சியை பொறுப்பெடுத்துக் கொள்கிறாரோ அதே அளவு பொறுப்புடன் மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மாகாண ஆட்சி ஏற்புடுகின்ற போது அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் எதுவித குறையுமின்றி ஆளுநர் கையளித்தல் வேண்டும். ஆளுநர் ஜனாதிபதியின் ஆளா அல்லது பிரதமரின் ஆளா என்பது இங்கு முக்கியமானதல்ல. மாகாண ஆட்சி முறை எந்தக் கட்சிக்கும் உரியதல்ல: மாகாண ஆட்சியை அந்த மாகாண மக்கள் எந்தக் கட்சியினரிடம் ஒப்படைக்கிறார்கள் என்பது பற்றி ஆளுநர் கவலைப்பட வேண்டியதில்லை. மாகாண ஆட்சி முறைக் கட்டமைப்பானது மத்தியிலுள்ள எந்தக் கட்சியினதும் நலன்களுக்கான ஒன்றல்ல. மாறாக இந்த மாகாண ஆட்சி முறையானது அந்தந்த மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்திக்காகவும், அந்தந்த மாகாண மக்களி;ன் சமூக பொருளாதார நலன்களுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.

நாட்டில் தற்போதுள்ள அரசியற் சூழ்நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் மீண்டும் எப்போதும் நடக்கும் என்று கூற முடியாத நிலைமையே உள்ளது. 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஆகியன நடந்து முடிந்ததன் பின்னர்தான் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என்ற சூழலே முன்னர் இருந்தது. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள்; மாகாண சபைகளுக்கான அடுத்த தேர்தல் எப்போது நடக்கும் என்பதில் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஐந்து வருடங்களாக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் தலைமையில் அமைந்த மாகாண ஆட்சி வட மாகாண மக்களுக்கு எந்தவித கடமையையும் செய்யாமல் காலத்தை வீணே விரயம் செய்துவிட்டு இப்போது கலைந்து போய்விட்டது என்பது பகிரங்கமான அபிப்பிராயமாகும். கௌரவ விக்னேஸ்வரனின் தலைமையில் அமைந்த வடக்கு மாகாண ஆட்சியானது காலத்தை வீணாக்கியது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் வடக்கு மாகாண சபைக்கு பல தவறான சடங்கு சம்பிரதாயங்களையும் பிழையான முன்னுதாரணங்களையும் விட்டுச் சென்றிருக்கின்றது.

எனவே, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மேன்மை தங்கிய வடக்கு மாகாண அளுநர் அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் திட்டமிட்ட ரீதியிலான விரைந்ததொரு பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் எனவும் அத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அடுத்ததாக வரவுள்ள மாகாண ஆட்சியாளர்கள் காரிய சித்தியுடையவர்களாக செயற்படுவதற்கு வேண்டிய முன்னுதாரணங்களையும், வழித்தடங்களையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அறிக்கையை வெளியிடுவது
அ. வரதராஜா பெருமாள்
கட்சி அமைப்புச் செயலாளர் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி
முன்னாள் வடக்கு – கிழக்கு முதலமைச்சர்.