‘Made in India’

எமது பண்பாடுகள், பாரம்பரியங்கள், கலை, கலாச்சாரங்கள் என்பன பாதுகாக்கப்படுவதுடன் அவற்றை நாம் நம் அன்றாட வாழ்வில் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என எண்ணுபவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் வெறுமனே அழிந்து போகும் நம் இன அடையாளங்களை தூக்கி நிறுத்துவதற்காக அல்ல. அவற்றுக்குப் பின்னால் உள்ள உயிர்ப்புத் தன்மையும், இயற்கையுடன் சேர்ந்த வாழ்க்கை முறையும், மனித நல் வாழ்விற்கான வழிகாட்டிகளும் நிறையவே அங்கு காணப்படுகிறது.

எனவே ஜல்லிக் கட்டை அல்ல எந்தக் கட்டையும் மக்களின் அனுமதி இன்றி உள்ளூர் நீதி மன்றம் முதல் உச்ச நீதி மன்றம் வரை தடை செய்வதற்கு உரிமை கிடையாது. ஜல்லிக் கட்டு மூலம் மிருகங்கள் துன்புறுத்தப்படுவதாக இருந்தால் அந்த துன்புறுத்தலை மட்டும் தடுப்பதற்கான சட்டங்களை கொண்டு வந்து குறித்த மிருகங்களை துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதுதான் சிறந்த வழிமுறை. அதை விடுத்து ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரு சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதால் தான் பெண் திருமணத்திற்கு பின்னர் ஆணால் அடிமைப்படுத்தப்படுகிறாள் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறாள், எனவே இனிமேல் யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று சொல்லி திருமண சம்பிரதாயத்தையே சட்டம் கொண்டு தடை செய்வதற்கு ஒப்பானதே இந்த ஜல்லிக் கட்டின் மீதான தடை ஆகும்.

ஜல்லிக் கட்டு என்பது இந்தியா – தமிழ் நாட்டில் உள்ள ஏனைய பிரச்சனைகளுடன் ஒப்பிடும் போது ஒரு சாதாரண பிரச்சனையே. இருப்பினும் இதை இவ்வளவு தூரம் நீதித்துறை, நீதித்துறை சார்தவர்கள், ஏனையவர்கள் என எல்லோருமாக சேர்ந்து தங்களை அறியாமலேயே ஊதிப் பெரிதாக்கியதற்குப் பின்னால் உள்ள அரசியலை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா என்ற ஒரு பெருந்தேசம் இந்த உலக ஒழுங்கு ஓட்டத்தில் தன்னை நிரந்தரமாக முழுமையாக இணைத்துக் கொள்ளும் வரைக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கு எந்த நேரமும் எந்த விடயத்திலும் தலையிடி கொடுக்க கூடிய மாநிலமாக ‘தமிழ் நாடு’ என்ற ‘தமிழ் மாநிலம்’ பல காலமாகவே வைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இன்றைய பிரதமர் மோடி அவர்கள் ‘Make in India’ எனக் கூறிக் கொண்டு உலகத் தலைவர்களுடன் கைகோர்த்து இவ்வுலகை வலம் வந்தபடி உள்ளார். நாளை நேருவின் பூட்டி .. இந்திராவின் பேத்தி .. ராஜீவ்வின் மகள் பிரியங்கா என அழைக்கப்படும் ‘பிரியங்கா காந்தி’ அவர்கள் இந்தியாவின் பிரதமராகி ‘Made in India’ என்று கூறி விட்டால் ..?

எனவே இந்தியா முழுமையாக தன்னை நிரந்தரமாக இந்த உலக ஒழுங்கில் இணைத்துக்கொள்ளும் வரைக்கும் ‘தமிழ் நாடு’ எப்பொழுதும் உலகின் கவனத்தில் பார்வையில் சுடர் விடும் ஒரு தேசமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.