ஆட்சியாளர்கள் மாறலாம்; ஆட்சியமைப்பு மாறாது

பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெடித்த மக்கள் எழுச்சியின் காரணமாக, அசைக்க முடியாதவர்கள் என்று பலர் கருதிய, நாட்டில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகளான ராஜபக்‌ஷ சகோதரர்கள் மூவர், கடந்த மூன்று மாதங்களில் ஒன்பதாம் திகதிகளில் ஒருவருக்குப் பின் ஒருவராக வீழ்த்தப்பட்டனர். 

ஏப்ரல் ஒன்பதாம் திகதி, ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் ஜனாதிபதியின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து, நிரந்தர ஆர்ப்பாட்டத் தளமொன்றை அமைத்தனர். 

மே ஒன்பதாம் திகதி, அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க குண்டர்களை ஏவி, அதனால் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக அன்றே, அப்போதைய பிரதமர் மஹிந்த, ‌பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ய நேர்ந்தது. 
நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் மேலும் பரவிய நிலையில், ஜூன் ஒன்பதாம் திகதி பசில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். 

மக்கள் எழுச்சி உச்சக் கட்டத்தை அடைந்த நிலையில், ஜூலை ஒன்பதாம் திகதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தமது இராஜினாமாவுக்கான திகதியை அறிவித்தார். 

கோட்டா தமது இராஜினாமாவை அறிவித்ததை அடுத்து, ஜூலை 12 ஆம் திகதி பசில் நாட்டை விட்டு வெளியேற முயன்றார். ஆனால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சில விமானப் பிரயாணிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தியதாலும் விமான நிலையத்தில் ‘சில்க் ரூட்’ வழியூடாக அவர் செல்ல முயன்ற போது, அந்த வழியில் கடமையாற்றிய அதிகாரிகள், கடமையாற்ற மறுத்ததன் காரணமாகவும் அவர் பயணத்தை கைவிட்டு வீடு திரும்பினார்.  

அன்றைய நிலையில், மஹிந்த தலைமறைவாக வாழ்ந்தார். கோட்டாவும் தமது இராஜினாமாவை அறிவித்துவிட்டு தலைமறைவாகி இருந்தார். நாட்டைவிட்டுத் தப்பி ஓட முயன்ற பசில் திருப்பி அனுப்பப்பட்டார். பல மாதங்களாக இவ்வாறு ராஜபக்‌ஷர்களை அச்சுறுத்திய நிலை, பசில் நாட்டைவிட்டு வெளியேற முயன்ற நாளிலிருந்து, ஒரு வாரத்துக்குள் மறுபக்கம் திரும்பியது. இப்போது ராஜபக்‌ஷர்கள் மீண்டும் தமது அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டுள்ளனர். 

விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பசில், அன்றே தமது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டார். அதுவரை அவர் ரணிலை விரும்பவில்லை. மே மாதம் 12ஆம் திகதி, பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் மஹிந்தவின் இராஜினாமாவின் பின்னணியிலும், ஜனாதிபதி கோட்டாபய செய்வதறியாது ரணிலை பிரதமராக நியமித்த போதும், பசில் அதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. எனினும், அதற்கிடையில் நாட்டு நிலைமை மாறியதன் காரணமாக, அவர் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, அந்த முயற்சி தோல்வியடையவே ரணிலை பாவித்தே, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டம் வகுத்தார். 

அதன்படியே அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ரணிலை அடுத்த ஜனாதிபதியாக, தமக்கு பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்ய நடவடிக்கை எடுத்தது. இப்போது ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அமைச்சரவையையே அவர் மீண்டும் நியமித்துள்ளார். 

கோட்டாவின் அமைச்சரவையில் இருந்த ஜீ.எல் பீரிஸ் மட்டும், புதிய அமைச்சரவையில் இல்லை. ராஜபக்‌ஷர்களை எதிர்த்து டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக பீரிஸ், நாடாளுமன்றத்தில் பிரேரித்தமையால் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது போலும். 

ஜீ.எல் பீரிஸூக்குப் பதிலாக கோட்டாவின் சட்டத்தரணியான அலி சப்ரியே வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, எல்லாம் ராஜபக்‌ஷர்களுக்கு வேண்டியவாறே நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த ஜனாதிபதித் தேர்தலானது, இலங்கை அரசியல்வாதிகளுக்கு கொள்கை, தேசப்பற்று, இனப்பற்று, ஊழல் எதிர்ப்பு போன்றவை எல்லாம், மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வெறும் கருவிகளே என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டியது. 

ரணில் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம், நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்க முயன்றதாக, இப்போது பொதுஜன பெரமுனவின் தலைவர்களாக உள்ளவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர். ரணிலுக்கு தேசிய கலாசாரத்தைப் பற்றிய அறிவோ, உணர்வோ இல்லை என்றனர். அவர் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடி என்றனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பின்னால் இயங்கியவர் என்றனர். ஆனால், அதே பொதுஜன பெரமுனவினர் அதே ரணிலை, நாட்டின் மிகவும் உயரிய பதவியான ஜனாதிபதி பதவிக்கே தெரிவு செய்துள்ளனர். 

அதேபோல், ராஜபக்‌ஷர்களை ரணில் இனவாதிகளாகவே சித்திரித்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ராஜபக்‌ஷர்கள் உலகிலேயே மிகவும் மோசமான திருடர்கள் என, ரணிலும் ஐக்கிய தேசிய கட்சியும் கூறித் திரிந்தனர். 

இன்று அதே ரணில் பொதுஜன பெரமுனவின் தலைவர்களை பாதுகாக்க முன்வந்துள்ளார். ரணிலின் பின்னால் இருப்பது, நாட்டில் மிகவும் மோசமான இனவாதிகளான ராஜபக்‌ஷர்களே என்பது தெளிவாக இருந்தும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், ரணிலுக்கு வாக்களிக்க முடிவு செய்தார்.

இதேபோல், விமல் வீரவன்ச போன்றோர்  தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளை எப்போதும் பிரிவினைவாதிகளாகவும் புலிகளின் மறுஅவதாரமாகவுமே சித்திரித்து வந்தனர். தமிழ் கட்சிகளும் இந்தத் தென்பகுதி கட்சிகளை இனவாதிகளாகவே வடக்கில் சித்திரித்தன. ஆனால் அவர்கள் சிறியதொரு விடயமொன்றுக்காகவன்றி, நாட்டின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்காக ஓரணியில் ஒன்று சேர்ந்தனர். 

தேசப்பற்று, இனவாதம், தேசிய கலாசாரம், ஆகியவற்றைப் பற்றியும் ஊழல் எதிர்ப்பைப் பற்றியும், அரசியல்வாதிகள் கூறும் எந்தக் கூற்றிலும் நேர்மையோ பாரதூரத்தன்மையோ இல்லை என்பதை உணர, இந்தத் தேர்தல் கூட்டுகள் சிறந்த உதாரணங்களாகும். 

கோட்டா பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேறுவதற்கும், ரணில் ஜனாதிபதியாக வருவதற்கும் பொதுமக்களின் போராட்டங்களே காரணமாகின. அந்தப் போராட்டக்காரர்களைத் தாக்க நடவடிக்கை எடுத்த மஹிந்த, அதன் காரணமாகவே பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்த போது, ரணில் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும், ரணில் ‘கோட்டா கோ கம’வுக்கு சகல வசதிகளையும் வழங்குவதாக பகிரங்கமாகவே கூறினார். 

அதன் பின்னர், ரணில், தமக்கு நாட்டில் அதி உயர்பதவிக்கு வர உதவிய போராட்டக்காரர்களை, வௌ்ளிக்கிழமை (22) அதிகாலை முப்படைகளைக் கொண்டு தாக்கினார். தாம் அன்று அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்த நிலையிலேயே, அவர்கள் தாக்கப்பட்டனர். 

ஆரம்பத்திலேயே, மக்கள் மனதில் தம்மைப் பற்றிய அச்சத்தை ஊட்டி வைத்தால், தமக்கு எதிராக மக்கள் போராட மாட்டார்கள் எனவும் அவர் நினைத்திருக்கலாம். 

ரணில் தற்போதைய நெருக்கடியை தமது சொந்த உயர்வுக்காக மிகவும் சாதுரியமாக பாவித்துள்ளார். அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வில்லாமல் தடுமாறும் போது, சர்வகட்சி மாநாடு போன்ற இடங்களில் தமது பொருளியல் அறிவைக் காட்டி உரையாடினார். 

அந்தநிலையில் கோட்டா அவரை பிரதமராக நியமித்தார். கோட்டா பதவி விலகிய போது, ரணிலும் பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று சகல கட்சிகளும் கூறின. “சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுங்கள்; நான் போகிறேன்” என்றார். அதற்கிடையில், ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்பது அவருக்குத் தெரியும். அதன்படி அவர் ஜனாதிபதியானார். 

ஆனால், பொருளாதார நெருக்கடிக்கு ரணிலிடம் தீர்வு இருக்கிறதா என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. அவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பித்த வேலைத்திட்டத்தையே ரணிலும் முன்னெடுத்துச் செல்கிறார். அதன் மூலம் தற்காலிகமாக நிலைமை சீராகலாம். நாட்டை கடனற்ற நாடாக மாற்றும் திட்டம், எந்தவோர் அரசியல்வாதியிடமும் இல்லை.

மக்கள் விடுதலை முன்னணியும் சில தமிழ் கட்சிகளும் தவிர்ந்த நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய சகல கட்சிகளின் ஒவ்வோர் ஆட்சியின் போதும் அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டி வாழ்ந்ததையும் நாடு மேன்மேலும் கடன்கார நாடாக்கியதையும் மட்டுமே கண்டோம். எனவே, ஆட்சி மாறினாலும் பெரும் எதிர்ப்பார்ப்புகளை வைத்திருக்க முடியாது.