இலங்கையில் மாகாணசபைகள்: இருக்கின்றன…. ஆனால் இல்லை

(அ. வரதராஜா பெருமாள்)

இலங்கையில் மாகாண சபைகள் ஜனாதிபதியின் பிரகடன அறிக்கை ஒன்றினாலோ அல்லது அமைச்சரவையின் தீர்மானம் ஒன்றினாலோ உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அவை இலங்கையின் பாராளுமன்றத்தினால் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை. அரசியல் யாப்பிலுள்ள ஒவ்வொரு விடயத்தையும் முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டியது இலங்கை அரசை ஆளுபவர்களினது தலையாய கடமையாகும். அவ்வாறான சத்தியப் பிரமாணத்தை செய்துதான் அவர்கள் ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், மாகாண சபைகள் தொடர்பான தமக்குரிய கடமைகளை இன்று வரை எந்த ஆட்சியாளரும் மேற்கொள்ளவில்லை. தமிழ்த் தலைவர்கள் என்போர் கூட அது தொடர்பாக சட்டபூர்வமாக கேள்வி எழுப்பி அந்தக் கடமையினை அரசு கட்டாயம் நிறைவேற்றுவதற்கான எதனையும் செய்யவில்லை.