எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……..(Part 2)

எனது பயண அனுபவங்களில் முதல் பகுதியை வெளியிட்டு இருந்தேன். முதலில் இதற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இது என்னை செழுமைப்படுத்த உதவியது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இது தொடங்கி வைத்திருக்கின்றது என்பதில் எனக்கு மகிழ்சியே.வெறும் பயண அனுபங்களுக்கு அப்பால் இது தொடர்பான சமூகம் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்குவதே சிறந்தாக அமையும் என எண்ணுகின்றேன். அந்த வகையிலேயே நான் சற்று இங்கும் அங்கும் வெளியே சென்று வரும் எழுத்து அணுகுமுறையை பின்பற்றுகின்றேன். நான் தமிழில் துறைசார் புலமைத்துவமோ அல்லது எழுத்துத் துறையில் பாண்டித்தியம் பெற்றவனோ அல்ல. மாறாக என் வாழ்வில் எனக்கு கிடைத்த அனுபவங்களை சமூகம் சார்ந்து வெளிப்பபடுத்தும் விருப்புடையவன். இந்த வகையிலேயே இதனை எழுத முற்படுகின்றேன். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை வரவேற்க காத்திருக்கின்றேன். அது ஒட்டிய கருத்தாகவும் இருக்கலாம் அல்லது வெட்டிய கருத்தாவும் இருக்கலாம். மன மகிழ்வுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

மேற்கத்திய நாடுகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக ஆகாயத்தில் பயணம் செய்யும் போது பச்சைத்தண்ணி கூட காசு கொடுத்தே வாங்க வேண்டிய நிலை. நிலத்திற்கு கீழ் எல்லைகள் அற்று இருக்கும் இந்த நன் நீரை பல் தேசியக் கம்பனிகள் போத்தல்களில் அடைத்து பணம் பண்ணும் வியாபாரம் இன்று உலகெங்கும் கோலோச்சி வருவதன் வெளிப்பாடுகளின் இன்னொரு வடிவம் இவை. இந்த போத்தில் கலாச்சாரம் இலங்கை போன்ற நாடுகளிலும் பசுவின் பாலை விட போத்தல் தண்ணீர் கூடிய விலைக்கு விற்கும் நிலை வரை தள்ளிச் சென்றுள்ளது. இதில் வற்றாத நன்நீரைக் கொண்டுள்ள யாழ் நீர்வளம் தற்போது சுன்னாகம் நீர் மாசடைந்துள்ளதா? அல்லது இல்லையா? என்பதற்கு பொறுப்புக் கூறவேண்டிய யாரும் உறுதியான முடிவுகளை தெரிவிக்காத இடத்து மக்கள் கிணற்று நீரைத் தவிர்த்து போத்தல் தண்ணீரை தேடும் நிலைக்கு தள்ளியிருக்கின்றது. கூடவே கட்டுப்பாடற்ற குழாய் கிணற்றுத் தனி உடமைச் சிந்தனை வளவிற்குவளவு தோட்டத்திற்கு தோட்டம் என தனித்தனிக் குழாய் கிணறுகளை கட்டுப்பாடில்லாமல் உருவாக்கி சவர் நீரை நன்நீருடன் கலக்கும் அவலத்தை ஏற்படுத்தியும் உள்ளது.
இதற்குத் தீர்வாக இரணைமடுவை யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்கப் பாவித்தல் என்ற மாற்றீட்டுத் திட்டத்தினால் வன்னி என்றும் யாழ்ப்பாணம் என்றும் எம்மைப் பிரித்தாளும் அரசியலை நடத்த வழியும் வகுத்திருகின்றது. வடக்கிற்கு மகாவலி என்ற ஜேஆர் இன் செல்லப் பிள்ளையும் எமது யாழ் நூலக எரிப்பை சுபாஸ் ஹோட்டலில் அறை எடுத்துக் கண்காணித்த காமினி திசநாயக்காவின் அமைச்சு சிங்கள மக்களின் திட்டமிட்ட குடிப்பரம்பலை செய்ய மட்டும் பாவிக்கப்பட்டு நெடுங்கேணியில் மகாவலி நீரைப் பாய்ச்ச கால்வாய்களை கட்டுதல் என்பதற்கு அடிக்கல் நாட்டுதலுடன் நிறுத்தப்பட்ட அரசியலைக் கண்டவர்கள் நாங்கள். மாவிலாற்றில் தண்ணீரை அடைக்கப் போய் முள்ளிவாய்காலில் நெருப்புடன் சங்கமம் ஆகி நீரும் நெருப்பு என்ற எம்ஜிஆர் பட தலைபை ஞாபகப்படுத்தியவர்கள் நாங்கள்.

தாகத்திற்கு தண்ணீர் வழங்கல் என்பது உபசரிப்பு என்பதற்கு அப்பால் அவசிய தேவையாக இருக்கும் அவசிய சேவை இது. வெறும் 45 நிடங்களுக்கு குறைந்த பயணத்தில் ஒரு முழுச் சாப்பாட்டைப் படைத்து எம்மை அழைத்துச் செல்லும் இந்த சென்னை கொழும்பு பயணம் எனக்கு எப்போதும் இனித்தே இருக்கின்றது. அது எயர் லங்காவாக இருக்கலாம் எயர் இந்தியாவாக இருக்கலாம் ஏன் வேறு சகாரா போன்ற தனியார் விமான சேவைகளிலும் இந்த விருந்தோம்பல் தொடர்கின்றது. இதே அனுபவங்களை நான் கியூபா இற்கான 3 மணிக்கு கூடவான கியூபன் விமானச் சேவையில் பெற்ற அனுபவம் எனக்குண்டு.

மேற்கத்தைய நாடுகளின் சுரண்டல் முறமைகள் பல்தேசியக் கம்பனிகளின் வருகையினால் இந்தியா இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் புகுத்தி லாபம் என்றே குறிக்கோள் என்ற செயற்பாட்டுன் கூடிய விமானப் பயணம் இன்னமும் எத்தனை நாட்களுக்கு வெறும் 45 நிமிடப் பயணத்திற்கான விருந்தோம்பலை தொடர அனுமதிக்கப்போகின்றது என்பது எனக்குள் கடந்த 10 வருடங்களாக கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.

இலங்கையின் விமான சேவைகளில் பரிமாறப்படும் இலங்கைத் தேயிலையை பாவித்து உருவாக்கிய தேனீர் பால் கலக்காமல் அருந்திப்பாருங்கள் இந்த சுவையை நீங்கள் எங்கும் பெற முடியாது. இன்னமும் வாழ்கைத் தரத்தில் கடைநிலையில் உள்ள எங்கள் மலையக மக்களின் உழைப்பில் உருவான உலகின் முதல் தரமான தேயிலையில் உருவான தேனீர் பானம் இது. மிக அருமையாக இருக்கும். இதே போன்ற இன்னொரு அனுபவம்…. நான் என் வாழ் நாளில் இதனை விடச் சிறப்பான தேனீர் அருந்தியிருக்கின்றேன். தண்ணீர்ஊற்று சந்தியில் முல்லைத்தீவு, மாங்குளம் வீதி/ தண்ணீர்ஊற்று, புளியங்குளம் வீதிகள் சந்திக்கும் இடத்தில் சிறு கொட்டில் வடிவில் அமைந்த தேனீர் கடை. சுத்தமாக கழுவிய கிளாஸில் முக்கால் பங்கு அளவிற்கு மட்டும் பரிமாறும் தேனீரின் சுவையை நான் இதுவரை என் வாழ்நாளில் அனுபவித்தது இல்லை.

இக்கடையை காக்கா (இவரின் பெயர் எனக்கு தெரியவில்லை) என்ற முஸ்லீம் நடத்தி வந்தார். இந்தச் சந்தியை அடுத்த பகுதியில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் நீராவிப்பிட்டி என்ற சிறு முஸ்லீம் கிராமம் இருக்கின்றது. புலிகளின் வட மாகாண முஸ்லீம் இனச்சுத்திகரிப்பின் பின் 2009 ஆண்டு போர் முடிந்த பின்பு தற்போது இதே இடத்தில் முஸ்லீங்கள் மீள்குடியேறி இருக்கின்றனர். வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு தென் மேற்காக அமைந்துள்ளது.

இது போன்ற சிந்தனையின் ஓட்டங்களுடன் 45 நிமிடப் பயணத்துடன் நடுச்சாமத்தில் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்தேன்.

குடிவரவு குடியகல்வு பரிசோதனை முடிந்ததும் இதே இடத்தில் இனாமாக கிடைக்கும் ‘Simm Card’ யும் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். இந்த விடயம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். நீங்கள் உல்லாசப் பயணிகள் என்ற வகையிற்குள் இதனை இலங்கை அரசு இனாமாக வழங்குகின்றது. இதற்குள் ஏதாவது உங்களை இலத்திரனியல் வடிவிலான பின் தொடரல்கள் இருக்கின்றனவா என்பது எல்லோருக்கும் வரும் சந்தேகம் எனக்குள் இல்லாமல் இல்லை. இது இலங்கை தமிழருக்கு மட்டும் இடைஞ்சலாகவும் ஏனைய உல்லாசப் பயணிகளுக்கு உதவிகரமாகவும் இருக்கும் Double Standard கொண்டிருக்கும் ஒரு நடைமுறையாக என்னால் பார்கப்படுகின்றது.

 

சரி இதனைத் தவிர்தாலும் ஏனைய குடிவரவு குடியகல்வு முறையில் உங்களை கண்காணிக்க முடியாது என்று நாங்கள் கற்பனையில் இருந்தால் எம்மை நாமே கிணற்றுத் தவளைகள் என்றே அழைத்துக் கொள்ளலாம். வெறும் அரை மணி நேர விமான நிலைய சம்பிரதாயங்களை கடந்து விமான நிலையத்திற்கு வெளியே வந்தால் என்னை அழைத்துச்செல்ல ஒரு பெண்ணும் எனக்கு என்றுமே அறிமுகமில்லாத இரு ஆண்களும் காத்திருந்தனர்.

(பயணம் தொடரும்….)