கரும்புலிகள் தின [மாறுபட்ட] பார்வை!

கரும்புலிகள் தினம் வருடம் தோறும் நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் வேளை, அதனை இகழ்ச்சியுடன் பார்க்கும் நிலையும் இன்றுவரை தொடர்கின்றது. காரணம் ஈழ விடுதலையில் தங்களை ஆகுருதியாக்க தாம் அறிந்த, விரும்பிய போராட்ட இயக்கங்களில் இணைந்த எண்ணற்ற இளம் குருத்துக்கள் பிரபாகரனின் பரநோய்ட் [Paranoid] எனும் மனநோய் காரணமாக அவர் கட்டளைப்படி கொன்று குதறப்பட்டமை. தன்னை சுற்றி இருப்பவரால் கூட தனக்கு ஆபத்து நேரலாம் என்ற அவரின் மனப்பயம் ஏனைய இயக்க போராளிகளையும், அவ்வாறே நோக்கச் செய்தன் விளைவுதான், வடமராச்சி மண்ணில் ஆக்கிரமிப்பு ராணுவம் காலடி பதித்தமை.

அதுவரை டெலோ, ஈ பி ஆர் எல் எப், புளட், ஈரோஸ் மட்டுமல்ல தம்பாபிள்ளை மகேஸ்வரன் [பனாகொடை] உட்பட உதிரிகளாய், ஆயுதம் ஏந்திய இளையவரால், ஆக்கிரபிப்பு இராணுவம் முகாங்களை விட்டு வெளிவர பயந்தது. அந்தப் பயத்தை தான் நடத்திய ஏனைய இயக்கங்களின் மீதான சகோதர படுகொலைகளால் நீக்கிய, சிறுமதி செயல் செய்தவர் தான், தன்னைத்தானே தேசியத்தலைவர் என துதி பாடிகள் கொண்டு புகழாரம் சூடிக்கொண்ட, நந்திக்கடலில் உடலமாக அவரினால் துரோகம் இளைத்தவர் என மரணதண்டனை விதிக்கப்பட்ட, கிழக்கின் தளபதி கருணாவால் அடையாளம் காட்டப்பட்ட மேதகு[?] வேலுப்பிள்ளை பிரபாகரன்.

வடமராச்சி வசப்பட்டதும் அடுத்து யாழ் நகரம் நோக்கிய தன் முன்னேற்றம் வரை,  ஒய்வெடுத்த ஆக்கிரமிப்பு ராணுவம் முகாமிட்டது, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம். அப்போது தான் தன் மதிகெட்ட செயலால் வந்திருக்கும் ஆபத்தை உணர்ந்தார் மேதகு[?] வே பி. தேவர்களை பகைத்து பிரம்மா, இந்திரன் முதல் விஸ்ணு என அனைவரையும் எதிரியாக்கி, மானிடபதர் என ராமனை நினைத்து, அவன் மனைவி சீதையை கவர்ந்த ராவணன், பின்பு தொடர் தோல்விகளை களத்தில் கண்டபோது, நானிருக்கிறேன் என்று களம் புகுந்து வீரமரணம் அடைந்தான் இந்திரஜித். நவீன ராமாயணம் எழுதப்பட்டால் அதில் நினைவு கொள்ளப்பட வேண்டிய உத்தம வீரன் மிலர் எனும், துன்னாலை மைந்தன், ஹாட்லி கல்லூரி மாணவன், பெற்றவர்க்கு மட்டுமல்ல பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்த உத்தம ஆத்தமா, முதலாவது கரும்புலி மிலர் எனும் வசந்தன்.

1961ல் பிறந்த அவன் 1983ல் புலிகள் அமைப்பில் இணைந்தான். அவன் மண்ணில் கால் பதித்த ஆக்கிரமிப்பு ராணுவ பிரசன்னம் அவனை  1987ல் அவனது  21வது வயதில் கரும்புலி ஆக்கியது. உயிர் தற்கொடை ஈய்தல் என்பதை அதுவரை கேட்டிராத ஈழத்தாய் தேம்பி அழுத நாள் அது. தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என வீர வசனத்தை அவன் அரசியல் மேடையில் பேசவில்லை. என் தாய் மண்ணை மிதித்தவனை மேலும் முன்னேறவிடேன் என்ற ஓர்மத்துடன் தான் ஓட்டிச் சென்ற வெடி பொருள் வண்டியுடன் வீர காவியமானான். அவன் தியாகம் வெறியா? விடுதலை வேட்கையா? உயிர்த்தியாகம் செய்தவன் புலியா? புனிதனா? கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம். இதய சுத்தியுடன் அலசுவோம். ஆணித்தரமான முடிவு எடுப்போம். மிலர் என்கின்ற வசந்தன் பற்றி வாதப் பிரதிவாதம் தேவை. காரணம் ஈழ விடுதலை போராட்டம் எண்ணற்ற இழப்புகளை கண்டும் இதுவரை ஈடுசெய்ய முடியாத நிலையில் கேவலப்பட்டு எதிரியின் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறது.

தோல்விக்கு காரணம் நாமல்ல என கூறிக்கொண்டு எதிரியின் பக்கம் பஞ்சணை போட்டவரும், கூடிக்குலவியவரும், பதவிகள் பெற்று பெரும் பேறு அடைந்ததாக பெருமிதம் பெற்றவர்களும் தான் இந்த நிலைக்கு காரணம். வெறுமனே புலிகளையும் புலித்தலைமையையும் மட்டும் காராணம் சொல்லி இவர்கள் தப்பித்து கொள்ள முடியாது. தாம் ஏற்றுக்கொண்ட பாதையில் பயணிக்க எத்தனை தடை வந்தபோதும் எதிர்கொள்ளும் சித்தம் இல்லாது, சிதறி ஓடியது மட்டுமல்ல தம்மை தற்காத்துக்கொண்டு தம் தலைமையை ஏற்று தம்வழி தொடர்ந்தவரையும் விட்டோடி, தாம் மட்டும் இன்று உள்நாட்டிலும், உலகின் தஞ்சம் தரும் நாடுகளிலும் பாதுகாப்பாக வாழும், விடுதலை இயக்கங்களில் குறிப்பிட்ட துறைகளுக்கு தலைமைதாங்கியோர், பொறுப்பு கூற மறந்து முழு பழியையும் புலிகள் மேல் போட்டு, தாம் தப்பிக்கொள்ளும் நிலை விமர்சனத்துக்கு உட்பட வேண்டியது.

மக்கள் விடுதலை போராட்டம் அவசரகதியில் ஆயுத போராட்டமாக மாறிய போது, இந்திய ஆதரவில் ஆயுத பயிற்சி முடித்தவருக்கு அடுத்த நடவடிக்கை பற்றிய தெளிவு இருந்ததா? தம்முள் அரசியல் பிரிவு, ஆயுதப்பிரிவு, உளவுப்பிரிவு என பலபிரிவுகளாக விடுதலை போரை முன்னெடுத்த அதன் பிரிவு தலைமைகள், தமக்குள் நீயா நானா என பிரிந்து செயல்ப்பட்டதை மறுப்பார்களா? தமக்குள்ளே பல அணிகளாக அவர்களின் செயல்கள் அமைந்ததை அவர்கள் மறுப்பார்களா? தங்களை ஜனநாயவாதிகள், மாக்சிசவாதிகள் என மார்தட்டி கொண்டவர்களே ஆயுதப்பயிற்சியின் பின்னர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி செயல்ப்படவில்லையா?

புலிகளின் தலைமை பற்றிய விமர்சனம் அவர்களை பாசிச வாதிகள் என அடையாளப்படுத்திய போது, அதற்கு எதிராக மக்களை விழிப்படைய செய்யவேண்டியவர்களே தாமும் மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்த போது, மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் தான் புலிகளின் வளர்ச்சி. ஏனென்றால் விடுதலை போர் பேரினவாதத்துக்கும், அதன் ஆக்கிரமிப்பு ராணுவத்துக்கும் எதிராக ஆரம்பமான போது மக்கள் அனைவரையும் ஆதரித்தனர். ஆனால் எதிரியின் கொட்டத்தை அடக்கவேண்டிய கரங்கள் தம் பிடரியை பதம் பார்த்த போதுதான், மக்கள் விடுதலை போராட்டத்தை அல்ல போராளிகள் என்ற போர்வையில் அதில் புல்லுரிவிகளாய் புகுந்து, தம் இஸ்டப்படி செயல்பட்டவர் மேல் தம் வெறுப்பை காட்டினர். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் ஆகியதால், தடம் மாறியது விடுதலை போராட்டம்.

இந்த வேளையில் தான் வீரகாவியம் எழுத தம் இன்னுயிர் நீக்க துணிந்தான் மிலர் எனும் வசந்தன். இங்கு புலி தலைமை பற்றியோ அல்லது அதனது பாசிச செயல்கள் பற்றியோ எந்த மாற்று கருத்தும் கொள்ள முடியாது. அதன் ஆரம்பமே தீர்வுகள் துப்பாக்கியால் மட்டுமே எட்டப்படும் என்பதே. எந்த சமரசத்துக்கும் அது தயாராக இருக்கவில்லை. ஏற்பட்ட சமரசங்களை கூட தனக்கு சாதகமாக்கும் சந்தர்ப்பவாதமே அது ஏற்றுக்கொண்ட கொள்கை. அதனால் தான் மிகுந்த முன்முயற்சியினால் ஈ பி ஆர் எல் எப், ஈரோஸ், டெலோ கூட்டில் உருவான ஈ என் எல் எப் இல் தானும் இணைந்து பின் கூட்டில் இருந்தவரையே அது வேட்டையாடியது.

தலைமையின் தவறுகளை தட்டிக்கேட்கும் கட்டமைப்பு இல்லாத அமைப்பில் இணைந்ததால், கட்டளைக்கு பணிதல் மட்டுமே தம் கடமை என பல உன்னதமான போராளிகள் களமாடி மரணித்தபோது, மக்களின் பார்வை அந்தபக்கம் திரும்புதல் யதார்த்தம். அதே வேளை நடத்தப்பட்ட அராஜகங்களுக்கு எதிராக கிளர்ந்து எழவும் அவர்களால் முடியவில்லை. தம்மை அடக்கியாள வரும் எதிரியை அடிப்பவன் மீது அவர்கள் அனுதாபம் காட்டும் அதே வேளை, அவர்களின் அத்துமீறலையும் மௌனமாக அங்கீகரிப்பதை தவிர வேறு மார்க்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. மாற்று போராளி குழுக்கள் தோற்றுப்போன நிலையில் மக்கள் வெறும் பார்வையாளராய் மௌனிக்கப்பட்டனர்.

மாற்று சிந்தனைகளுக்கு இடமே இல்லாத நிலையில் எதிரியின் முன்னேற்றத்தை தடுக்கும் உயிர் ஆயுதங்கள் தேவை என்ற பாசிச சிந்தனை, தலைமைக்கு உருவான போது விடுதலையை நேசித்தவர் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்ப்பட்டன. மனச்சிதைவு சாதாரண மனிதரையே தற்கொலைக்கு தூண்டும் உளவியல் தாக்கம் ஆகும். அப்படியான மன சிதைவு கொண்டவர்களை வளர்த்தெடுத்து, பலி கொடுத்தல் படுபாதக செயல் என்ற போதும், அது பலராலும் போற்றுதலுக்கு உரிய ஒன்றாக மாறிய போது, தன்னை ஆகுருதியாக்க ஆயத்தமான எண்ணற்ற போராளிகள் தான் கரும்புலிகள். அவர்களின் செயல் வெறுமனே உணர்ச்சியூட்டலால் நிகழ்த்தப்பட்டாலும், அவர்களின் செயல் எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராதது.

யுத்த களத்தில் சாதனை புரியும் வீரனுக்கு புகழ், பதவி உயர்வு என வரிசைகட்டி வரும். அதன் பலா பலன்களை அவனே அனுபவிக்கும் நிலையும் வரும். ஆனால் கரும் புலி என காவியமானவன் வருடாவருடம் அஞ்சலி தினத்தில் மட்டுமே நினைவு கூரப்படுவான். யுத்த சத்தம் நின்றபின் வீடு திரும்பிய போராளிகள் பல ஆயிரம். போராட்ட காலத்தில் கூட விட்டு விலகியவர் ஆயிரம் ஆயிரம். விடுதலை கிடைத்ததோ இல்லையோ இன்று அவர்களில் பலர் உறவுகளுடன் வாழ்ந்திருக்க தவறான தலைமைத்துவமோ, அதீத உணர்ச்சியோ, மனச்சிதைவோ அல்லது மடமைத்தனமோ எதுவாக இருந்த போதும் இறப்புக்கு வரவு கூறி, தன் உடல் சுமந்த வெடி பொருளுடன் இரண்டறக்கலந்தவர் பற்றிய நினைவுகள், இதயத்தில் எவருக்கும் சிறு வலியையாவது நிச்சயம் ஏற்படுத்தும். எப்படியான விமர்சனங்கள் கரும்புலிகள் பற்றி எழுந்தாலும், அவர்களின் அழிப்பிற்கு நாமும் தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

(Ram)