காசாவில் மக்கள் படுகொலையை கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சி அறிக்கை!

கடந்த 11ம் திகதி பாலஸ்தீனத்திற்கு எதிராக மிகப் பெரும் தாக்குதலொன்றை இஸ்ரவேல் காசா பகுதியில் நடத்தி மூன்று கட்டிடத் தொகுதிகளை முற்றாக அழித்து பாரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த மோதல்களினால் இதுவரை குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 122 பாலஸ்தீனர்களும், 8 இஸ்ரவேலர்களும் இறந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காசா பகுதியல் ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்குப் பதிலடியாக எனக் கூறி காசா பகுதியை ஆக்கிரமிப்பதற்காக தனது காலாட் படையை அனுப்ப இஸ்ரவேல் ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்கேற்ப அந்நாட்டின் மிகப் பலம் வாய்ந்ததும், பயங்கரமானதுமான இராணுவப் படையணியாகிய கோலான் காலாட் படை ஏற்கனவே காசாவின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேச எல்லைகளில் தரித்து நின்று காசா மீது தாக்குதலை தொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அது பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான பகுதிகளில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் மனித அழிவு யுத்தமொன்றிற்கான ஆபத்தை மீண்டும் தலைதூக்கச் செய்துள்ளது.

தனது உலக மூலதன அபிலாஷைகளுக்காக உலகம் பூராவூம் பொருளாதார வேட்டை நிலங்கள் மற்றும் அரசியல் தந்திரோபாய ரீதியில் முக்கியமான நிலங்களை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்திய பலவான்கள் அதற்காக அந்நாடுகளில் நிலையான யுத்தங்களை உருவாக்குகின்றனர்.

தற்போதைய பாலஸ்தீனம் அதற்கு சிறந்த உதாரணமாகும். இரண்டாவது உலக யுத்த காலத்தில் நாஜிவாதிகளின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய யூதர்கள், மத்திய கிழக்கில் பிரித்தானிய ஆளுகையின் கீழிருந்த “பிரித்தானிய பாலஸ்தீனத்திற்கு” (British Palestine) குடிபெயர்ந்ததோடு அவர்களில் பெரும்பான்மையோர் இராண்டாவது உலக யுத்த காலத்தில் யூதப் படுகொலைகளுக்குப் பின்னர் அனாதைகளாக வந்தவர்களாவர். பின்னர் அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் மோதலை நிர்மானித்த பிரித்தானியர்கள் 1947ல் பாலஸ்தீனத்தை விட்டுச் சென்றனர். அதன் பின்னர், யூத்தத்தின் ஊடாக கைப்பற்றிய பாலஸ்தீனத்தின் பாரம்பரிய பூமியில் 1948 மே 14ம் திகதி யூதர்களின் நாடென்ற வகையில் இஸ்ரவேல் பிரகடனப்படுத்தப்பட்டது.

பின்னர், 1948லும் 1967லும் மேலும் நிலப் பிரதேசங்களை எகிப்து சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளிடமிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் கைப்பற்றி பெரிய நிலப்பரபை இஸ்ரவேல் தனதாக்கிக் கொண்டது. மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் அராபியர் அல்லாத நாடொன்றை அமைப்பதும் அதை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி எண்ணெய் வளங்களினாலும் யூத்த-அரசியல் உபாயங்களின் முக்கியத்துவத்தினாலும் மதிப்பு வாய்ந்த மத்திய கிழக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதுதான் இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டின் பின்புலத்திலிருந்த ஏகாதிபத்திய பலவான்களினது நோக்கமாக இருந்தது.

இந்த ஏகாதிபத்திய நோக்கத்திற்காக இன்று பாலஸ்தீன் மேற்குக் கரைக்கும் காசா பகுதிக்கும் சுருங்கியுள்ளதோடு நிரந்தர யூத்த மோதல்கள் ஊடாக பாரிய மனிதப் படுகொலைகள் நடக்கின்றன. விசேடமாக அமெரிக்கா இஸ்ரவேலுக்கு உத்தியோக மற்றும் உத்தியோகமற்ற ஒத்துழைப்பை வழங்கி பாலஸ்தீன மக்கள் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம்தான் 2020ல் டொனால் டிரம்பினால் முன்வைக்கபட்ட மேற்குக் கரையின் நிலத்தை இணைத்துக் கொள்ளும் திட்டமாகிய “நூற்றாண்டின் ஒப்பந்தம்” (Deal of the Century) என்பதாகும். அது ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வேதேச மரபுநெறிகளுக்கு முரணான வஞ்சக முயற்சியாகும்.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாகிய காசா பகுதியில் அதிகாரம் ஹமாஸ் இயக்கத்தின் கையிலிருப்பதுடன், மேற்குக் கரையின் அதிகாரம் அல்-பதாவின் கையில் உள்ளது. இஸ்ரவேலைப் போன்றே அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் பாலஸ்தீனத்தின் தலைவராக அல்-பதாவின் தலைவரும் பாலஸ்தீன ஜனாதிபதியுமான மொஹமட் அப்பாஸை மாத்திரமே ஏற்றுக் கொள்கின்றனர்.

முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ஹமாஸ் இயக்கத்தை அடிப்படைவாத இயக்கமாக அழைக்கும் போது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஹமாஸை உருவாக்கும் கைங்காரியத்தை அமெரிக்கா மேற்கொண்டதையும், 2007ம் வருடம் பாலஸ்தீனத்தின் பிரதான அரசியல் அமைப்புகள் இரண்டிற்குமிடையில் எழுந்த யூத்தத்த்தில் காசா பகுதியின் முழு அதிகாரத்தையும் ஹமாஸ் இயக்கம் கைப்பற்றிக் கொண்டதையும் இதன் பின்புலத்தில் அமெரிக்கா செயற்பட்டதையும் மறந்து விடுகின்றன. அல்கைதா மற்றும் தாலிபான் இயக்கங்களைப் போன்றே இப்போது ஹமாஸ் இயக்கம் தொடர்பிலும் ஏகாதபத்தியவாதிகளின் கொள்கையானது தாமே உருவாக்கிய அமைப்புகளை பகைவர்களாகக் கொண்டு கொள்ளைக்கார யூத்தத்தை முன்னெடுப்பதுதான்.

இந்த ஏகாதிபத்திய அதிகாரப் போட்டியின் முன்பாக பாலஸ்தீன மக்கள் பாரிய அழுத்தத்திற்கும் அடக்குமுறைக்கும் இரையாகின்றனர். சில காலங்களாக நிலவும் பொருளாதாரத் தடைகள் காரணமாக காசா பகுதிக்கு அத்தியாவசிய மருந்துக்கள் மற்று கட்டிடங்கள் கட்டுவதற்காக பொருட்கள் கூட கிடைப்பதில்லை.

வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படுவதாகவும் குழந்தைகள் கொல்லப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. பாலஸ்தீன ஆர்ப்பாட்டக் காரர்களை அடக்குமுறை செய்ய இஸ்ரவேல் பொலிஸ் நடவடிக்கை எடுத்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை சமீபத்திய மோதலுக்குக் காரணமாக இருந்தது. பாலஸ்தீன மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடும் ஏகாதிபத்திய திட்டத்திற்கு எதிர்வினையாற்றுவதற்காக மத அடிப்படைவாதத்தை அடிபபடையாகக் கொள்வது பிரச்சினைக்கு தீர்வாக மாட்டாது, அழிவை உக்கிரப்படுத்துவதாகும். இந்த நெருக்கடிக்கு இரு நாடுகளினதும் ஆளும் வர்க்கத்தின் இனவாத மதவாத திட்டத்திற்குள் நுழையாமல் உழைக்கும் மக்களின் பரவலான ஒற்றுமையின் வாயிலாகவே இந்தப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வைக் காண முடியும்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இரத்தம் சிந்தும் யூதத்தின் மூலம் துன்பத்திற்குள்ளாகும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக தோற்றி நிற்கும் எமது கட்சியானது ஏகாதிபத்தியவாதிகளின் மனிதப் படுகொலை யூதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவும் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவூம் ஒன்று சேருமாறும், இரு நாடுகளினது வலதுசாரி ஆட்சியாளர்களினதும் , அமைப்புகளினதும் சியோன்வாதம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு பாலஸ்தீன மக்களுக்கு மிகவும் நீதியான தீர்வொன்றிற்காக ஒன்றுபடுமாறு பாலஸ்தீன் மற்றும் இஸ்ரவேல் உழைக்கும் மக்களிடம் வேண்டிக் கொள்கிறோம்.

ஏகாதிபத்தியவாதிகளின் பொருளாதார,அரசியல் யூத நோக்கங்களுக்காக உலகம் பூராவும் முன்னெடுக்கும் கொள்ளைக்கார பொருளதார, அரசியல் கொள்கைக்கும் மற்றும் மக்களை அழிக்கும் யூத்தங்களுக்கும் எதிராக உலக மட்டத்தில் மக்கள் அதிகாரமொன்றை கட்டியெழுப்ப ஒன்று சேருமாறும் உலகின் சகல முற்போக்க மக்களிடமும் கேட்டுக் கொள்வதுடன், இந்த அடக்குமுறைக்கு முன்பாக பாலஸ்தீன மக்களுக்கு இலங்கை மக்களின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.