கொரனா: தீமையிலும் நன்மை


கரியமில வாயுவின் அதிகப்படியான வெளியேற்றம் இந்த பூமி வெப்பமடைதலின் பிரதான காரணியாக சுற்று சூழல் விஞ்ஞானிகளால் எதிர்வு கூறப்பட்டு இதற்கான ஆதாரங்களையும் அவரகள் முன்வைத்து வருகின்றனர்.
தொழில் போட்டியும், வல்லரசாக சிறப்பாக பொருளாதார வல்லரசாக நாம் வர வேண்டும் என்ற நாடுகளுக்கிடையிலான போட்டிகள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரியமில் வாயுக்களை குறைப்பதற்கு நாடுகளை இணங்க வைக்கும் பொது முடிவை உலகம் எட்ட முடியவில்லை.
இதற்கான ஓத்துழைப்பை அதிகம் வழங்க மறுத்து பிரான்சில் நடைபெற்ற மகாநாட்டில் இருந்து வெளியேறி ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த ஓப்பந்தங்களை மீறிச் செயற்பட போவதாக அறிவித்திருந்ததில் அமெரிக்க ட்றம் தனது தான் தோன்றித்தனமான போக்கை கடைப்பிடித்திருந்தார்.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், நாடுகள், மக்கள் பெரிதும் இதனையிட்டு விசனம் அடைந்தும் இருந்தனர். இதற்கான எதிர்பலைகள், விழிப்புணர்சிகள் ஐ இளைஞர் சமூகம் பெரிதும் முன்னெடுத்தும் வந்திருந்தனர்.
கரியமில வாயுக்களின் வெளியீட்டை மட்டுப்படுத்த தொழில்சாலைகளின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தல், வாகனங்களின் பாவனைகளை குறைத்தல், மாமிச(சிறப்பாக இறைச்சி) உற்பத்தியை மட்டுப்படுத்தல் என்பன சாத்தியமற்றவை என்று உலகம் தான் தோன்றித் தனமாக செயற்பட்ட போது…. செயற்பட்போது… இயற்கையே இதற்கான வேகத் தடையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாட்டை ஒரு தீமையின் வடிவில் உருவாக்கியது.
அதுதான் கொரனா என்னும் உயிர் கொல்லி வைரஸ் பரம்பலாகும். இதன் தொடர்சியாக உலகத்தின் பெரும்பகுதி…..75 வீதற்திற்கு மேலாக உறங்கு நிலையை அடைந்திருக்கின்றது இன்று. ஒரு நாள் அல்ல பல நாட்கள… பல கிழமைகள்… ஏன் மாதங்கள் என்று நீண்டு செல்லும் சூழலும் ஏற்பட்டிருக்கின்றது.
ஒரே ஒரு மணித்தியாலயம் வாகன ஓட்டத்தை நிறுத்ததல், தொழிற்சலைகளின் இயந்திரங்களை நிறுத்துதல் அல்லது குறைந்த அளவு செயற்பாட்டிற்குள் கொண்டு வருதல் இதன் மூலம் கரிமில வாயுவின் வெளியேற்றத்தை மட்டுப்படுத்திப் பார்க்கலாம் என்று கூட யோசித்து பார்க்க முடியாத, செயற்படுத்த முடியாத சூழலை இல்லை சாத்தியம் ஆகும் என்று அந்த கொடூரன் கொரனா ஏற்படுத்தியிருக்கின்றானர்.
கொரனாவின் கொழுந்து விட்டெரியும் தீச் சுவாலை கரியமில வாயுவின் எரியலை தடுத்து நிறுத்தியிருக்கின்றது. மாதங்களாக தொடரப் போகும் இந்த நிலமை எந்தளவிற்கு இந்த பூமிப் பந்திற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தப் போகின்றது என்பதை சூழலியல் விஞ்ஞானிகள்தான் கணித்துக் கூற வேண்டும்.
இதில் கிடைக்கும் தரவுகள் கண்ணை மூடி பூமி வெப்பமடைதலை தடுக்க மறுத்தவர்களின் கண்களை சில வேளைகளில் திறக்கலாம். பொது மக்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். இதற்கு இந்த பேரிடர் நேரத்தில் மருத்து விஞ்ஞானிகள் கொரனாவை தணிக்க அர்பணிப்புகளை செய்வது போல் சூழலியல் விஞ்ஞானிகளும் அர்பணிப்புடன் செயற்பட்டு புள்ளிவிபர அடிப்படையில் நல்ல முடிவுகளை தெரிவித்து மக்கள் மத்தியில் வழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கு முயல வேண்டும்.
இந்த கொரனாத் தீமையிலும் நன்மை ஏற்பட்டு இந்த பூமிப் பந்து குளிர்மையாக்கப்பட வேண்டும். இது மனித குலத்தின் தொடர்ந்த வாழ்விற்கு உறுதிபாட்டை ஏற்படுத்தவேண்டும்.பொருளாதாரம்… சந்தைப் பொருளாதாரம் என்று பங்கு முறிகள், பணம் என்ற கடதாசிப் பொருளாதாரத்திற்குள் வீழந்து கிடக்கும் இந்த உலகை பண்டப் பொருளாதாரத்திற்குள் இழுத்து வரவேண்டிய தேவையும் உணரப்பட வேண்டும்.
முதலாளித்தவத்தின் வளர்ச்சி போக்கில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய கடதாசிப் பொருளாதாரம் கியூபா போன்ற நாடுகளின் தனநிறைவான ஆனால் பணம் குறைவாக உள்ள நாடுகளை வறிய நாடுகள் என்று புறம் தள்ளிய பொருளாதார கட்டுமானங்கள் உடைக்கப்பட வேண்டும்.
இதனை இந்த கொரனா என்ற தீமையிலும் நன்மை என்பது போல் செய்யும் என்ற நம்புவோம்.பணத்திற்கு அல்ல பண்டத்திற்கே உண்மை மதிப்புண்டு என்று நிரூபிக்கப்பட வேண்டும்.
எவ்வளவு டாலர்கள் இருந்தும் இறுதியில் தனது பகையாளிகளான சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளிடம் தமது தடைகளை மீறி பண்டத்திற்காக(சிறப்பாக மருத்துவ பண்டங்களுக்காக) கையேந்திய நிலை மக்களை நிச்சயம் விழிப்படைச் செய்யும்.
பொருளாதார வல்லுனர்களே! மக்களுக்கான பொருளாதார வல்லுனர்களே!! இதற்கான கணக்கு வழக்குகளை, சூத்திரங்களை புள்ளி விபர அடிப்படையில் வெளிப்படுத்தி பண்டம் உள்ளவனே நிறைவான வாழ்வை கொண்டிருப்பான் என்பதை மக்களுக்கு தாமதம் இன்றி பிரச்சாரப்படுத்துங்கள். இது அவசியமானதும் ஆகின்றது.
உணவே மனிதனின் வாழ்விற்கான அடிப்படையானதில் மிகவும் முக்கியமானது. இதனை ஆகக் குறைந்தளவிலாவது ஒவ்வொருவரும் தாமே உற்பத்தி செய்யவேண்டும். இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் நிலம், நீர், சூரிய சக்திதிகளைக் கொண்டும நாம் உணவு உற்பத்தியில் ஈடுபடுவோம்.
இதுவே இந்த பேரிடர் காலத்தில் மட்டும் அல்ல மனித வாழ்வில் மகிழ்வாக வசிப்பதற்கும், இயற்கையான உணவுகளை உள்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உதவும். உணவுப் பற்றாக் குறையையும் தீர்த்து வைக்கும் என்பதை மக்கள் தமது பேரிடர் ஊரடங்கு வாழ்வில் மூலம் உணர்ந்து வருகிழன்றனர்.
சில அரசுகள் தமது நாடுகளில் வீட்டுத் தோட்டம் என்று இதனை பேரிடர் காலத்து செயற்பாடாகவும் அறிவித்து செயற்பட்டும் வருகின்றனர் வீட்டுத் தோட்டங்களில் எமக்கான உணவை உற்பத்தி செய்வோம் என்ற செயற்பாட்டிற்குள் மக்களை தொடர்ச்சியாக இறங்குவதற்கான பிரசாரம், செயற்பாடுகளை நாம் உடனடியாக கொரனா தீமையிலும் நன்iமாக உடனடியாக ஆரம்பித்தாக வேண்டும்.
உலக மயமாக்கலில் குறைந்த கூலிக்கு வேலை வாங்கி பொருட்களை உற்பத்தி செய்து அதிக லாபம் ஒன்றே தமது குறிக்கோள் என்று பரந்து பட்ட நிலையில் இருந்த உற்பத்திகள் ஒரு மூலைக்குள் தள்ளபட்டன. இந் நிலையில் ஒரு ஏற்றுமதிஃஇறக்குமதி(சிப்மென்ர்) வராவிட்டால் முச்சுத் திணறலை ஆற்றுப்படுத்தும் மருத்துவக் கருவி இல்லை மருந்தும் இல்லை ஏன் உணவும் இல்லை உதிரிப் பாகங்களும் இல்லை என்றாகி விடும்.
ஒரு மூலையில் ஓதுங்கியுள்ள உற்பத்தி பண்டங்கள் அந்த மூலை ஏதோ ஒருவகையில் ஊரடங்கால் முடங்கினால் அதனைச் சார்ந்திருக்கும் ஏனைய உலக மக்கள் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் நிலை ஏற்படுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
இனி வரும்காலத்தில் குறைந்த கூலியை காரணமாக்கி பண்ட உற்பத்திகளை ஒரு மூலைக்குள் முடக்காமல் முடிந்தளவிற்கு பரந்து பட்டு விரிவாக்க சுதேசியம் என்ற பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தும் தேவையை உணர்த்திய கொரனா என்ற தீமையிலும் நன்மை என்பதை உலக மக்களுக்கு எடுத்தியம்புவோம்.
இலாபம் ஒன்றே நோக்கம் என்று தமது தொழிற்சாலைகளை கட்டிக் கொண்டு வேறு நாடுகளுக்கு ஓடும் நிலமைமைகளுக்கு அனுமதியளிக்காத அரசுகளை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவோம்.
டாலர்… டாலர்… என்று பரபரப்பாக தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் ஓடி குடும்ப வாழ்வு, கூட்டுறவு வாழ்வை தொலைத்துவிட்டோம் நம்மில் பலர். இந்த ஊரடங்கு நாட்களில் வல்லந்தமாக (வலுக்கட்டாயமாக) குடும்பமாக, கூட்டுறவாக அன்பை பரிமாறி ஒருவருக்கு ஒருவர் உதவியாக ஆண் பெண் சமநிலையை..? பேணும் செயற்பாட்டிற்குள் வலிந்து தள்ளப்பட்டு பாடங்களை கற்றுவருகின்றது மனித குலம்.
இது வரை காலமும் அளவில்லாமல் ஓடித் தேட முற்பட்ட கடதாசி(டாலர்) முக்கியம் இல்லை. மாறாக குடும்பம், கூட்டுறவு, உதவி செய்தல், சமுதாய சிந்தனை, சமூகமாக வாழுதல் என்ற சேர்ந்து நிற்றே கொடூரன் கொரனாவை ஒழிக்க முடியும். தனித்து அல்ல என்பதை உண்ர்தியிருக்கின்றது.
குடும்பம், கூட்டுக் குடும்பம், சமூக சிந்தனை, இணைந்த கரமே மனித வாழ்வின் சந்தோஷத்தின் அடித்தளம் என்று கொரனாவின் தீமையிலும் நன்மையாக பாடம் கற்றுத் தந்த வாழ்க்கை முறையை தொடர்ந்தும் பின்பற்றுவதன் அவசியத்தை சமூக விஞ்ஞானிகள், சம உடமைவாதிகள் மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.
கத்தி இன்றி, இரத்தம் இன்றி ஒரு சமூக மாற்றத்திற்கான ஆரம்பத்திற்கான வித்திடலை ஏற்படுத்துவோம். இது அரசுகளை மக்களுக்கான அரசுகளாக உருவவெடுக்க வாய்புக்களையும் ஏற்படுத்தும்.
கொரனாவின் தீமையிலும் நன்மையாக இவற்றை நாம் முன்னெடுக்க இன்றே தயாராகுவோம். இந்த தீமையிலும் நன்மைகள் ஒரிரு நாட்களில் நடந்தேறிவிடப் போவதில்லை.
இந்த நல்ல மாற்றங்கள் நடந்தேறி முடிக்க ஒரு ஆரம்ப புள்ளியை இடுவோம் தற்போது. இங்கிருந்து ஆரம்பிப்போம்… ஒரு நீண்ட இணைந்த பயணத்தின் மூலமே மனித குலம் இதனை நிறுவி நிற்க முடியும்.