‘கோட்டா வெளியேறு’: போராட்டத்தின் முடிவு என்ன?

எரிவாயு, மண்ணெண்ணெய், அத்தியவாசியப் பொருட்களின் தட்டுப்பாட்டையும் நாளொன்றுக்கு ஏழு எட்டு மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்படும் மின்வெட்டையும் எதிர்த்து, மிரிஹானையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், சிறிது நேரத்தில் “கோட்டா வெளியேறு” என்று கோஷமிடும் அளவுக்கு, அரசியல் போராட்டமாகிவிட்டது.

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மூன்றாம் திகதி முதல், சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்றன. அவற்றில், ஏப்ரல் ஒன்பதாம் திகதி கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தின் முன்னால், காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இராப்பகலாக இன்று வரை தொடர்கிறது. இப்போராட்டங்களின் போதும், “கோட்டா வெளியேறு” என்பதே பிரதான சுலோகமாக இருக்கிறது.

வடக்கில் மாதக் கணக்கில் போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும், தெற்கில் இது போன்றதொரு நீண்ட போராட்டம் ஒருபோதும் இடம்பெற்றதில்லை.

அரசாங்கமும் அரச ஆதரவாளர்களும், இந்தப் போராட்டத்தை முறியடிக்க இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், ஏப்ரல் மூன்றாம் திகதி போராட்டத்துக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்த போது, ஏப்ரல் முதலாம் திகதி முதல் நாடு முழுவதிலும் அவசரகால சட்டத்தையும் மேல்மாகாணத்தில் நான்காம் திகதி வரை ஊரடங்குச் சட்டத்தையும் அரசாங்கம் பிறப்பித்தது. ஆனால், பல பகுதிகளில் மக்கள் அச்சட்டங்களைப் பொருட்படுத்தாமல் வீதியில் இறங்கினர்.

அரசாங்கத்தை ஆதரிக்கும் கடும் இனவாதிகளான சிலரும் பௌத்த பிக்குகளும், இது பௌத்த தலைமைக்கு எதிரான போராட்டம் எனக் கூறி, போராட்டத்தை திசை திருப்ப முயன்றனர். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களுக்குப் பதிலளித்து, அந்த முயற்சியையும் முறியடித்தனர்.

அதையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆர்ப்பாட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் நிராகரித்து, ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற தமது நிபந்தனையை மேலும் வலியுறுத்திளர். அவர்கள் அந்த அழைப்பை ஏற்றிருந்தால், யார் தம்மை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற அடிப்படையில், அன்றே அவர்களிடையே பிளவு ஏற்பட்டு இருக்கும்.

பின்னர், சனிக்கிழமை 16ஆம் திகதி, ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் வகையில், போராட்டக் களத்துக்கு அருகே காலி முகத்திடலின் ஒரு கோடியில், பல பொலிஸ் ரக் வண்டிகளை பொலிஸார் நிறுத்தி வைத்தனர். சாத்வீகமாக நடைபெறும் ஒரு போராட்டத்தை, பலாத்காரத்தை பாவித்து அடக்கினால் ஏற்படக் கூடிய சர்வதேச நெருக்கடியைச் சுட்டிக் காட்டி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியதை அடுத்து, அந்த வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

பிரச்சினை என்னவென்றால், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் நிராகரித்தால், எவ்வாறான நிலைமை உருவாகும் என்பதும், அவை நிறைவேறினால் நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பதுமாகும்.

கடந்த திங்கட்கிழமை (18), ஜனாதிபதி மிகவும் மூத்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிதாக ஓரளவு இளம் வயதினரை அமைச்சர்களாக நியமித்துள்ளார். ஓரிரு முதியவர்கள் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர்.

அதேவேளை, முன்னரே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாதமை தவறு என்றும் இரசாயன பசளை இறக்குமதியை தடை செய்தமை தவறு என்றும் ஜனாதிபதி பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதனை அவர் புதிய அமைச்சர்களை நியமித்துவிட்டு, அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் உரையின் போது கூறியுள்ளார். நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில், அரசியலமைப்பை திருத்துவதாக அன்றே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது துறைசார் நிபுணர்களும் எடுத்துக் கூறும் போது, இவற்றை விளங்கிக் கொள்ளாத இந்தத் தலைவர்களுக்கு, இப்போது மக்கள் கொதித்தெழுந்து போது தான் ஞானம் பிறந்துள்ளது போலும்! இவை, இவர்கள் உண்மையை உணர்ந்து கூறும் கூற்றுகள் அல்ல.

கொதித்தெழுந்துள்ள மக்களின் மனவேகத்தைக் குறைத்து, அவர்களை மீண்டும் ஏமாற்றுவதே அவர்களது நோக்கம் ஆகும். எனவே, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. அவ்வாறாயின் போராட்டக்காரர்கள் என்ன செய்வது?

சட்டப்படி எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மட்டுமே நாம் ஆராயலாம். சட்டத்துக்கு அப்பாற்பட்ட நிலைமைகளை எம்மால் முடிவு செய்ய முடியாது. அது சூழ்நிலைமை ஏற்படுத்தும் மாற்றமாகும். அதை முன்கூட்டியே கூறவும் முடியாது.

சட்டப்படி ஒரு ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய, இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. ஜனாதிபதி அவரது கடமைகளை நிறைவேற்றக்கூடிய நிலையில் இல்லை என நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் பிரதம நீதியரசரும் முடிவு செய்தால், பிரதமர் ஜனாதிபதியாக கடமையாற்றலாம். ஆனால், இது தற்காலிக சட்டப் பிரமாணம் என்று அரசியலமைப்பே கூறுகிறது.

குற்றப் பிரேரணையைக் கொண்டு வருவதே மற்றைய முறையாகும். ஆனால், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். “கோட்டா வெளியேறு” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டாலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு அவ்வாறானதொரு பலமில்லை.

எவ்வாறாயினும் நாடு தழுவிய தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் மூலம் தொல்லை கொடுத்து, ஜனாதிபதி தமது பதவியைக் கைவிடச் செய்ய முடியுமாக இருந்தால், உடனடியாக பிரதமர் தான் ஜனாதிபதியாவார். ஆனால், ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

1993ஆம் ஆண்டு மே தினத்தன்று ஜனாதிபதி பிரேமதாஸ, குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த போது, அப்போதைய பிரதமரான டி.பி. விஜேதுங்கவே ஜனாதிபதியானார். பின்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக கலந்துரையாடும் போது, விஜேதுங்கவையே போட்டியின்றி தெரிவு செய்வதென நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளும் முடிவு செய்தன.

தற்போது நாடெங்கிலும் பரவி வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியைக் கைவிட்டால், மஹிந்த உடனடியாக ஜனாதிபதியாவார். அதன் பின்னர் ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பொன்றின் மூலம், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும். அப்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் கட்சி ரீதியாக பிரிந்தே வாக்களிப்பர்.

குறைந்த பட்சம் மூன்று வேட்பாளர்களாவது போட்டியிடலாம். கோட்டாபய ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்தாலும் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விட்டுக் கொடுக்காது. அதுவும் வேட்பாளர் ஒருவரை போட்டியில் நிறுத்தும். எதிர்க்கட்சிகள் கூட்டாக போட்டியிடும் என்று நம்ப முடியாது. ஏனெனில், “திருடர்கள் வேண்டாம்” என்று கூறும் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு வாக்களிக்காது, தமது வேட்பாளரை போட்டியில் நிறுத்தலாம்.

உண்மையிலேயே, தற்போதைய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பத்தில் விலைவாசி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற உடனடி காரணங்களை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அவை இப்போது ஊழலுக்கு எதிரான அரசியல் போராட்டமாகவே நடைபெற்று வருகிறது.

தற்போது, தேசிய கட்சிகளில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகாத ஒரே கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே! பொதுஜன பெரமுனவானது ஊழலுக்குப் பெயர் பெற்ற கட்சியாகும். ஐக்கிய மக்கள் சக்தி என்பது, ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டு, அதில் பெரும்பான்மையினர் அமைத்துக் கொண்ட கட்சியாகும்.

ஐ.தே.க தலைமையிலான கடந்த ஆட்சியின் காலத்திலேயே, வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரும் ஊழலான மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இடம்பெற்றது. அதன் ஆரம்பத்தில், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள அனைவரும் அந்த ஊழலை மூடி மறைக்கவும் நியாயப்படுத்தவும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நடைபெற்றால் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

அதாவது, அந்த முறையிலும் மற்றோர் ஊழல் நிறைந்த ஆட்சியே உருவாகும். ஆர்ப்பாட்டக்காரர்களின் முயற்சியும் தியாகங்களும் வீணாகிவிடும். எனவே, இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் சர்வாதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டங்களையாவது நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருந்தால், அது நாடு அடையும் பெரும் வெற்றியாகும்.