ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கின் ‘பிடி’

ஒன்றுக்காக, ஏற்கெனவே முடிவை எடுத்துவிட்டு, அதற்காக எல்லோரையும் அழைத்துக் கூட்டங்களை நடத்தி, ஆராய்ந்து, காலத்தைக் கடத்திவிட்டு, தீர்மானத்தை அறிவிக்கின்ற வழமை, முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். இந்த மாதிரியான சம்பவங்கள், தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அழிவையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தியிருந்தது. இதை, ஈழத் தமிழர்கள் மறந்திருக்க முடியாது.

வடகிழக்கு மாகாண சபை, செயற்பாட்டில் இருந்த வேளையில்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்தார். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம்வரை, கிழக்குக்கான கட்டளைத் தளபதியாக கேணல் பானு இருந்தார்.

இக்காலப் பகுதியில், அதாவது, 2005ஆம் ஆண்டு நடுப்பகுதியில், கேணல் பானு, தளபதி சொர்ணம், அரசியல் பொறுப்பாளர் எழிலன், அரசியல் பேச்சாளர் இளந்திரையன் இன்னும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள் கிழக்கிலுள்ள புத்திஜீவிகளைச் சந்தித்திருந்தனர். குறிப்பாக, வடகிழக்கு மாகாண சபையின் பணிப்பாளர்கள், திட்டங்களுக்குரிய பணிப்பாளர்கள் இச் சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.

இச்சந்திப்பில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவை வெற்றிபெறச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்போது, “மஹிந்தவை, ஜனாதிபதியாக்குவதற்குத் தீர்மானித்திருக்கிறோம். அது தொடர்பில் உங்களது கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டது.

அப்போது, “இத்தீர்மானத்துக்கு எதிராக, நாங்கள் கருத்துத் தெரிவித்தால், மாற்றம் ஏற்படுமா” என்று அங்கிருந்த ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால், முடிவில் மாற்றம் இருக்கவில்லை.

அச்சந்திப்பில், “ரணில் ஒரு நரி; போராட்டத்தைக் குழப்பி, கருணாவைப் பிரித்தவர்; போராட்டத்தைப் பலவீனப்படுத்தியவர்” என்று விடுதலைப் புலிகள் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரணில் குறித்த எச்சரிக்கையுடனேயே விடுதலைப் புலிகள் அப்போது இருந்தனர். அந்தத் தேர்தலில், ரணில் வெற்றி பெற்றிருந்தால், பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என்பது, பலருடைய கருத்தாக இப்போதும் இருக்கிறது.

ஆனால், மஹிந்த ஜனாதிபதியானால், போரைத் தொடங்குவார்; நம்முடைய இராணுவ, ஆயுத பலத்தை வைத்துக் கொண்டு, போரில் வெற்றியடைந்து விடலாம் என்றுதான் விடுதலைப் புலிகள் கணக்கிட்டிருந்தனர். அந்தக் கணக்கு 2005இல் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியான பின்னர், தவிடு பொடியானது. 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் எல்லாம் புதையுண்டு போனது. இது வரலாறு. இப்போது, பேய் இல்லாவிட்டால், பிசாசு என்பதுதான் முடிவாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள், தவறான முடிவுகளை எடுக்கமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த வேளை, தங்களுடையை ‘ஓவர் எஸ்ரிமேட்’ என்கிற தன்நிலை அறியாத கணக்கிடல், தமிழர்களின் கனவையே அழித்துவிட்டது என்பதுதான் உண்மை.

தமிழர்களாகிய நாம், கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து, ஐந்து வருடங்களைக் கடத்தி விட்டோம். இப்போது, நடைபெறப்போகின்ற தேர்தலில், யாரோ ஒருவரை ஆதரிக்கப் போகிறோம். அவரும் ஒன்றையும் கொடுக்காமல், காலத்தை இழுத்தடித்தால், என்ன பலன் கிட்டும் என்பதுதான், கிழக்கு மக்களின் கேள்வி.

விடுதலைப் புலிகள், மஹிந்தவை ஜனாதிபதியாக்க எடுத்த முடிவு, தமிழர்களின் ஆயுத ரீதியான போராட்டத்தின் முடிவுக்குக் காரணமாக இருந்தது; புலிகள் அழிக்கப்பட்டனர். இப்போது, விடுதலைப் புலிகளின் அப்போதைய கிழக்குத் தளபதி கருணா எடுக்கும், ‘கோட்டபாயவை ஜனாதிபதியாக்கும் முடிவு, எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, முதல் கேள்வியாகக் கிழக்கில் இருக்கிறது.

பிசாசுடன் கூட்டுச் சேர்ந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் கட்சியான, ஐ.தே. கவுக்குத்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கப் போகிறார்கள்.

ஐ.தே.க யாரை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போகிறது என்பது இதுவரையில் தெரியாமலிருந்தாலும் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற ஊகங்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

தற்போது, கிழக்கு என்றாலே, அது கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவினுடைய தரம் உயர்வு என்கிற விடயத்துக்குள்தான் தொக்கி நின்றுவிடுகிறது.

தமிழர்களைப் பொறுத்தவரையில், முஸ்லிம்களுடன் சேர்ந்து, அனுசரித்துப் போகலாம் என்று எண்ணிக் கொண்டுதான் இருக்கின்றனர். அது தமிழர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது.

ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்கள் முழுமையானதோர் இனவாதப் போக்குடனேயே இருந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பிடிவாதம், எதிர்காலத்தில் சரிசெய்துவிட முடியாததொரு பகைமையைக் கொண்டுவந்து விடுமோ என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகின்றது.

கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தின் கணக்காளரை நியமித்துவிட்டால் சரி என்ற போக்கில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால், இதுவரையில் அதைக் கூடச் சாதிக்க முடியவில்லை.

கணக்காளரை நியமித்துவிட்டால் மாத்திரம், அந்தப்பிரச்சினை முடிந்து விடுமா என்றால் இல்லை. ஏனென்றால், இந்த ஆண்டுக்கான வரவு செயலவுத் திட்டம் முடிந்துவிட்டது. அப்படியானால், அதற்காக விசேடமான ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும். இது எதுவும் நடைபெறாமல், வெறுமனே கணக்காளரை நியமித்துவிட்டால், கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டதாகுமா என்பது தான் சந்தேகம். அப்படியானால், அடுத்த வரவு செலவுத் திட்டம் வரையில், நாம் காத்திருக்க வேண்டும்.

இந்த இடத்தில், ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ’ என்கின்ற நன்றிகெட்ட, நயவஞ்சகமானதோர் அரசியல் போக்குக்கு, நாம் பல்வேறு உதாரணங்களை இலங்கை அரசியலில் சொல்லிக் கொள்ள முடியும். இது கடந்த வாரத்திலும் நாடாளுமன்றத்தில் நடைபெற்று முடிந்தது.

ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து உருவான சூழல், முஸ்லிம் அரசியல் தலைவர்களை அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகவைத்தது. அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறியதா, இல்லையா என்பது சரியாகப் புரியாவிட்டாலும் நால்வர் அமைச்சுப் பொறுப்புகளை மீளஎடுத்துக் கொண்டனர்.

கல்முனை விவகாரத்தைக் காரணம் காட்டி, ஹாரிஸ் தனது அமைச்சைப் பொறுப்பேற்க மாட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறார். இது எப்படி, ஏப்ரல் குண்டு வெடிப்புக்குள் வந்தது என்பது ஒரு பிடி.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பின் சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்றுக்குத் தெரிவான ‘அமல்’ எனும் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதுக்கும் இதற்கும் எவ்வாறு பொருத்தப்பாடு ஏற்படுகிறது என்பது புரியவில்லை.

முடிவுகளில் சாதகங்கள், பாதகங்கள் எல்லாமே இருக்கத்தான் செய்கின்றன. கிழக்கைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பெரும் முறுகலைத் தோற்றுவித்திருக்கின்ற கல்முனை தமிழ்ப்பிரிவு விவகாரம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.
மிகவும் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தரப்புகள், தமிழர்களுடன் இணைந்திருந்த வேளையில், நடைபெற்ற அரசிலுக்கு நேர் எதிரான ஒன்றையே, இப்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதைப் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் நடுநிலையாளர்கள் யதார்த்தவாதிகள் என்கிற தமிழர்களும் அவர்கள் வெளியேற்றப்பட்டதன் ஆரம்பம், யாரால் உருவானது என்பது பற்றிச் சிந்திப்பதில்லை; அதைப் பதிவு செய்வதுமில்லை. வெளிப்படையாக, ஒன்றையொன்று சீர்தூக்கிப் பார்த்து, திறந்தமனதுடன் கணக்கிட்டு, சமப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது இதில் அவசியமானது.

வெறுமனே பூசி மெழுகிக்கொண்டு, அரசியலையும் நடைமுறைகளையும் நகர்த்திச் செல்வதற்கே ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருப்பது மேலும் மேலும் இந்தப் பிரச்சினைகள் அடுத்த, அடுத்த தலைமுறைகளுக்கும் நீள்வதாகவே இருக்கப்போகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, எல்லோரும் முனைவதே சிறப்பாக இருக்கும். இதுவும் ஒருவகையில், விடுதலைப் புலிகள் எடுத்த முடிவால் ஏற்பட்ட பலாபலன்தான்.

அந்தவகையில் எதிர்வருகின்ற தேர்தலில் கிழக்கு மக்களின் ஆதரவு சிங்களப் பெரும்பான்மைக்கு ஆதரவளிப்பதாக இருப்பதுடன், தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறிய பின்னரே அந்த ஆதரவளிப்பு நடைபெறவேண்டும். இந்த விடயத்தில், விட்டுக் கொடுப்புகள் தமிழத் தரப்பிடம் இருக்கக்கூடாது என்பதே முடிவாக இருக்க வேண்டுமேயொழிய, யானை இல்லாவிட்டால் பூனை என்பதோ, பேய் இல்லாவிட்டால் பிசாசு என்பதோ அல்ல.