ஜெய்ஷங்கரின் உரை மிரட்டலா?

இந்தியத் தலைவர்களின் இந்த வலியுறுத்தல், ஏதும் புதிய விடயமல்ல; இலங்கைத் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்தாலோ, இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தாலோ, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என்று, இந்தியத் தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டுதான் வருகிறார்கள்.

அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழ்த் தலைவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தும் வருகிறார்கள். இது கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. எனினும், உருப்படியாக எதுவும் நடைபெற்றதாக இல்லை.

ஆயினும், இம்முறை சில புதிய சூழ்நிலைகளின் கீழ் இந்திய வெளியுறவு அமைச்சர், இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், மாகாண சபைகளை இரத்துச் செய்ய முற்படுவதாகத் தெரிகின்ற நிலையிலேயே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

மாகாண சபை முறைமையை எதிர்த்து, ஜனாதிபதி கருத்து வெளியிட்டு வருகிறார். மாகாண சபைகளுக்குப் பொறுப்பாக இருந்த இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, அம் முறைமையை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு வருகிறார்.

புதிய அரசியலமைப்பு நிறைவேறும் வரை, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என்ற சில பௌத்த மதகுருக்களின் ஆலோசனையை ஏற்று, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளது. மகா சங்கத்தினரின் கருத்தே மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கக் காரணமாகியது என்று, சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த வாரம் கூறியிருந்தார். அந்தப் பின்னணியிலேயே ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வந்தார்.

இரண்டாவதாக, இந்திய மண்ணிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மாகாண சபைகளுக்கும் அதிகாரப் பரவலாக்கல் முறைமைக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையிலேயே ஜெய்ஷங்கர், அம் முறைமையை வலியுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் (2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி) கலாநிதி ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தின் போதும், அவர் “தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை அடையும் வகையில் இலங்கை அரசாங்கம் இன நல்லிணக்கச் செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி, ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே ஒரு சொல் வேறுபாட்டுடன் இதே கருத்தை ஜனாதிபதியின் முன், ஊடகங்களிடம் கூறியிருந்தார். அத்தோடு, அவர் இந்த வசனத்தோடு இணைத்து, “நல்லிணக்கச் செயற்பாடு என்றால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்குவதும் உட்பட்டதாகும்” என்றும் கூறியிருந்தார்.

எனினும், ஜனாதிபதி அதைக் காதில் போட்டுக் கொள்ளாததைப் போல், இந்திய ஊடகங்களுடன் உரையாடும் போது, அதிகாரப் பரவலாக்கல் என்பது, நடைமுறைச் சாத்தியமற்றது என்ற கருத்துப் பட பேசியிருந்தார்.

இப்போது, ஜெய்ஷங்கரும் ஜனாதிபதி கூறியதைக் காதில் போட்டுக் கொள்ளாதவரைப் போல், மீண்டும் இலங்கைக்கு வந்து, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என்ற கருத்துப் படப் பேசியிருக்கிறார்.

மூன்றாவதாக, இந்தக் கருத்தோடு ஜெய்ஷங்கர் மற்றொரு கருத்தையும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். “இலங்கையின் நலனுக்காகவே ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப்படுகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுக்கான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிக்கும் இது பொருந்துகிறது” எனக் கூறியிருந்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுலாக்கி, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது உங்களுக்கு நல்லது’ என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஒரு போடு போட்டுள்ளார்.

‘உங்களுக்கு நல்லது’ என்றால், அதன் அர்த்தம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு விதமாகப் பதிலளிக்கலாம். அதிகாரப் பரவலாக்கல், நல்லிணக்கத்துக்கு ஏதுவாகும். நல்லிணக்கம் அபிவிருத்திக்கு ஏதுவாகும். எனவே, 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது, நாட்டுக்கு நல்லது என்பது ஒரு பதிலாகும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது, உங்களது உடம்புக்கு நல்லது என்பது, மற்றொரு விதமான பதிலாகும். எந்த அர்த்தத்தில் ஜெய்ஷங்கர் இதைக் கூறினார் என்பது, அவருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தான் தெரியும்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கல், முறையாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற இந்தியத் தலைவர்களின் கூற்றைப் புறக்கணித்து, அதிகாரப் பரவலாக்கலானது நடைமுறைச் சாத்தியமற்றது; அபிவிருத்தியே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் என, ஜனாதிபதி இந்திய மண்ணிலிருந்து கூறிவிட்டு வந்ததை, இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே அதுவாகும். அதனை இந்திய வெளியுறவு அமைச்சர், இலங்கை மண்ணிலிருந்தே கூறிவிட்டுச் சென்றுள்ளார். இனி இலங்கைத் தலைவர்கள், மீண்டும் அதை மறுத்துக் கருத்து வெளியிடுவார்களா?

அத்தோடு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என்று கூறும் போது, இந்தியத் தலைவர்கள் அதன் மூலம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது. ஏனெனில் 13 ஆவது திருத்தம், ஏற்கெனவே அமுலில் இருக்கிறது. இத்திருத்தத்தின் அடிப்படை நோக்கமான மாகாண சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கப்பால், இந்தியா அன்று எதையும் எதிர்பார்க்கவில்லை.

தற்போது, அச்சபைகளுக்குப் பொது மக்களின் வாக்குகளால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள போதிலும், மாகாண சபைக் கட்டமைப்பானது 1987 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அக்கட்டமைப்பின் படி, மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாகாண சபை அமைச்சுகள் இருக்கின்றன. தற்போது அமைச்சர்கள் இல்லாவிட்டாலும் அமைச்சுகளின் செயலாளர்கள் அவற்றை நடத்தி வருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தின் மூலம், மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் படி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமாயினும் அது 13 ஆவது திருத்தத்தில் இல்லை. அது, மாகாண சபை சட்டத்திலேயே வருகிறது. ஒப்பந்தத்தில் இருந்தாலும் 13 ஆவது திருத்தத்தில் இருந்தாலும் மாகாண சபைகள் சட்டத்தில் இருந்தாலும் அந்த விடயத்தை, இந்தியாவே கைவிட்டுவிட்டது.

2017 ஆம் ஆண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இலங்கைக்கு வந்த இதே ஜெய்ஷங்கர், “தொடர்ந்தும் மாகாண இணைப்பு விடயத்தில் தொற்றிக் கொண்டு இருக்க வேண்டாம்” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கூறியிருந்தார். அது, பொதுவாக சகல தமிழ் தலைவர்களுக்கும் விடுத்த செய்தியாகும்.

அதேவேளை, பொலிஸ், காணி அதிகாரங்கள் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டு இருந்தாலும். அவ்வதிகாரங்களை ஜனாதிபதி வர்த்தமானி ஒன்றின் மூலம் மாகாண சபைகளிடம் கையளிக்க வேண்டும். தாம் மேல் மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது, அந்த அதிகாரங்களைக் கோரிய சந்திரிகா குமாரதுங்கவே, தாம் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முன்வரவில்லை.

அந்த விடயத்தை, இதுவரை எந்தவோர் இந்தியத் தலைவரும் வரையறுத்துக் கூறவும் இல்லை. அவ்வாறாயின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என்னும் போது, இந்தியத் தலைவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெளிவில்லை.

அதேவேளை, இலங்கை தமிழ்த் தலைவர்கள், 13 ஆவது திருத்தத்தால் திருப்தியடையவும் இல்லை. உத்தேச புதிய அரசியலமைப்புக்கான வரைவைத் தயாரிப்பதற்காக, கோட்டாபய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடம், அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் மூலம் அது தெளிவாகிறது. ஆனால், அவர்களும் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்கு என்று இந்தியா கூறும் போது, மகிழ்ச்சியடைந்து அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

ஒரு புறம் மாகாண சபைகள், ‘வெள்ளை யானைகள்’ எனக் கூறிக் கொண்டு அரசாங்கம் அவற்றை ஒழிக்க முற்பட்டுள்ளது.

இந்தியா, மாகாண சபைகளை உருவாக்கிய 13 ஆவது திருத்தத்தை அமுலாக்கு என்கிறது.

தமிழ்த் தலைவர்கள் மாகாண சபைகளை விட அளவிலும் அதிகாரத்திலும் கூடிய பிராந்திய சபைகளைக் கேட்கிறார்கள்.

மாகாண சபைகள், ‘வெள்ளை யானைகள்’ என்பது மட்டுமல்லது, ஆபத்தானவை என்ற கருத்து, ஆரம்பத்தில் இருந்தே இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையும் வட மாகாண சபையும் தென்னிலங்கை மக்களின் மனதில் பதியவிட்டது.

எனவே, கையில் இருப்பதைப் பாவித்து, மாகாண சபைகள் ‘வெள்ளை யானைகள்’ அல்ல என்பதையும் ஆபத்தானவை அல்ல என்பதையும் தென்னிலங்கை மக்களுக்கு (தலைவர்களுக்கு அல்ல) நிரூபித்துக் காட்டுவது, தமிழ்த் தலைவர்களின் முதன்மையான பொறுப்பாகும்.