தடுமாறும் அரசாங்கத்துக்குச் சட்டங்கள் காவல்

தமது வாழ்வாதாரத்துக்காகப் போராடிய மக்களை, அதே வாழ்வாதாரத்துக்காகத் தொழில்புரியும் பொலிஸ்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.

போராடுகின்ற மக்கள், இதே பொலிஸ்துறையினருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இந்த நெருக்கடி யாரையும் விட்டுவைக்கவில்லை. வரிசைகளில் அனைவருமே நிற்கிறோம். அப்படியிருக்கையில் அவர்களை நோக்கி, ‘கொலைக்கரங்கள்’ எவ்வாறு நீண்டன?

இக்கேள்வி பிரதானமானது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழ்மக்கள் பல்வேறு வடிவங்களில் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அதேவேளை, சிங்கள மக்கள் இந்த அரச பயங்கரவாதத்துக்கு உட்படுவது இது முதன்முறையன்று. 1971, 1988-89 ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போதும் 2013இல் ரதுபஸ்வெவவிலும் அரசு தன் கோரமுகத்தைக் காட்டியது.

சுதந்திர இலங்கையின் முதலாவது ஜனநாயகப் படுகொலையான குடியுரிமைச் சட்டம், மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது. இதைக் கண்டித்து நடத்தப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின்மீது, அரச வன்முறை ஏவப்பட்டது. இதுவே சுதந்திர இலங்கையில் அரசும் பொலிஸ்துறையும், எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதற்கான முதலாவது அறிகுறியாக இருந்தது. இந்த ஜனநாயக மறுப்பை, அரசின் வன்முறைக் கட்டவிழ்ப்பை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ யாரும் தயாராக இருக்கவில்லை. இதனால் அரச வன்முறை ஆளும் அரசாங்கங்களுக்கு பயனுள்ள கருவியானது.

1956இல் தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மீது ஏவப்பட்ட வன்முறை, இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. காலிமுகத்திடலில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டு, கவலையடைந்த சிங்கள அரசாங்க அலுவலர் ஒருவர், வீதியில் சென்றுகொண்டிருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவை இடைமறித்து, “தமிழ்மக்கள் தாக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தபோது, அதற்கு பண்டாரநாயக்க, “Let them geta taste of it” என்று பதிலளித்திருந்தார்.

இந்த நிகழ்வு, முக்கியமான பாடமொன்றைச் சொல்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு, அரசு வன்முறையைத் தொடர்ந்து ஏவிவந்த நிலையில், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற எந்தவொரு திட்டமிடலும் தமிழ்த்தரப்புகளிடம் இருக்கவில்லை.

தமிழர்கள் மீது வரன்முறையற்ற வன்முறையை ஏவமுடியும் என்பதை, சத்தியாக்கிரகத்தின் மீதாக வன்முறை காட்டிநின்றது. இந்த வன்முறைக்குப் பின்னரும் 1960களிலும் இதேவகைப்பட்ட சத்தியாக்கிரகங்களை அரசு வன்முறையால் எதிர்கொண்டது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில், அரச வன்முறை 1980களில் அரச பயங்கரவாதமாக உருவெடுத்தது. ஜே.வி.பி கிளர்ச்சியும் உள்நாட்டு யுத்தமும் அதை நியாயப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கின.

இலங்கையில் தொடர்ச்சியாக, அரசாங்கங்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. அதன் அண்மைய உதாரணமே ரம்புக்கனை.

இதையே 1986ஆம் ஆண்டு, தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்ட ‘புதுவரலாறு நாமே படைப்போம்’ என்ற ஒலிப்பேழைக்கு எழுதிய ஒரு பாடலில், கவிஞர் முருகையன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘தடுமாறும் அரசுக்குச் சட்டங்கள் காவல்
தவறான விளங்கங்கள் தரநூறு பேர்கள்
சுடுமாறு உத்தரவாயின் யார்வீழ்ந்தால் என்ன
துணைநிற்கும் அதிகாரம் பிறகென்ன கவலை’

இன்றைய மக்கள் போராட்டங்கள், அரசாங்கத்தை அசைத்துள்ளன. ஆனால், இந்த மக்கள் போராட்டங்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதாய் உள்ளது. இந்த நெடிய போராட்டத்தில், அரச வன்முறை தவிர்க்கவியலாத அம்சமாக இருக்கப் போகின்றது. இதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புவது தவிர்க்கவியலாதது.

ரம்புக்கனை கொலைகளைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்த சிலர், ‘எங்களைப் போல் (காலிமுகத்திடல்) அமைதியாக அவர்கள் (ரம்புக்கனைப் போராட்டக்காரர்கள்) போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதனாலேயே வன்முறையை எதிர்கொள்ள நேர்ந்தது’ என்று எழுதியிருந்தார்கள்.

இந்த மனநிலை மிகவும் ஆபத்தானது. அரசாங்கத்தின் கதையாடலை, இவர்கள் கேள்வியின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். கிடைக்கின்ற தகவல்களின்படி, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதையடுத்தே, மக்கள் கற்களை வீசினார்கள். இதையே மாவோ, “நாம் என்ன ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதை, எதிரியே தீர்மானிக்கிறான்” என்றார்.

இந்தக் கருத்துகள், ஓர் உயர்மத்தியதர வர்க்க மனநிலையின் பிரதிபலிப்புகள். இந்த மனநிலையையே அரசாங்கம் வெகுவாக நம்புகிறது. குறைவற்ற எரிபொருட்களையும் தடையற்ற மின்சாரத்தையும் தட்டுப்பாடற்ற உணவுகளையும் வழங்குவதன் ஊடு, இந்தப் போராட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்பவியலும் என உறுதியாக நம்புகிறது.

அடித்தட்டு மக்கள், இவ்வளவு காலமும் பெருமளவில் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. மனதார ஆதரவு கொடுத்தாலும் அவர்கள் இன்னமும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசைகளிலேயே நிற்கிறார்கள். இதுதான் கடந்த இரண்டுவார நிலைமையாக இருந்தது.

எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து, செவ்வாய்கிழமை (19) வீதிக்கிறங்கிய மக்களே, அரசுக்கு அச்சத்தைக் காட்டினார்கள். அரசாங்கம் எதுவித தயக்கமுமின்றி, உடனடியாக வன்முறையை ஏவியுள்ளது. இதன்மூலம் அரசு, ஒரு வலிய செய்தியைச் சொல்ல முனைகின்றது.அரச வன்முறையை, பெரும்பான்மை சிங்கள சமூகம் எவ்வாறு எதிர்கொண்டுள்ளது என்பதை நோக்குவது, இதன் பல்பரிமாணத் தன்மையை விளக்க உதவும்.

1971இல் ஜே.வி.பி கலவரத்தை அரசு ஒடுக்கியபோது, குத்துமதிப்பாக சுமார் 10,000 பேர் கொலை செய்யப்பட்டார்கள். இதைக்கண்டித்து, அப்போது கவிதை, கதை, நாடகம் என பரவலாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், இந்நிலை பின்பு தொடரவில்லை.

1988-89 காலப்பகுதியில், சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டமையானது மக்களிடையே ஓர் எதிர்ப்பை தோற்றுவிக்காததற்குக் காரணம், ஜே.வி.பியின் பயங்கரவாதம். அரசாங்கம், ஜே.வி.பியின் பயங்கரவாதத்தை முறியடித்து விட்டது என்றே மக்கள் பார்த்தார்கள்.

இன்றைய நெருக்கடியும், அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கின்றன. பதவிவிலகுவதில்லை என்ற முடிவில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் இயலாமையையும் அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. பாராளுமன்றச் சட்டகத்துக்குள் விளையாடவே, எதிர்த்தரப்புக் கட்சிகள் விரும்புகின்றன.

ஏனெனில், மக்கள் போராட்டங்களும் வெகுஜன எழுச்சிகளும் இலங்கையின் பாராளுமன்றக் கட்சிகளுக்குப் புதிது. வாக்குப்பெட்டிகளில் ஆட்சியைப் பிடித்து, அதுவே புரட்சி என்று நம்பியிருந்தவை அவை. இன்றைய அரசியல் நெருக்கடி, பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ள உண்மை யாதெனில், புரட்சிகர மாற்றங்களை மக்கள் விரும்பினாலும் அரசியல்வாதிகள் விரும்பவில்லை. சங்கீதக் கதிரைகளைத் தொடர்வதிலேயே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டுச் செயற்பட ஜே.வி.பி எத்தனிக்கிறது. அதனால் கடந்த சில நாள்களுக்கு முன்னர், பெரிய மக்கள் திரள் பேரணியை நடத்த முடிந்திருக்கிறது. ஆனாலும் பாராளுமன்றத்துக்கு உள்ளான விளையாட்டில் அதன் ஆர்வம் குறையவில்லை. ஜே.வி.பி கற்க வேண்டிய பாடம் ஏதெனில், பேரினவாத அரசியலை வைத்து, பாராளுமன்ற ஆசனங்களைப் பிடிப்பதில் முதலாளித்துவக் கட்சிகள் இரண்டும், அதனிலும் வல்லவை என்பது தான். ஆனாலும், அதனால் அந்த அரசியலை அதனால் கைவிட இயலாதளவுக்கு அதன் பேரினவாதப் பிரசாரங்கள் மக்கள் மனதில் நிற்கின்றன.

சிங்கள மக்கள் நடுவே உள்ள, நேர்மையான முற்போக்குச் சக்திகளுக்கு, இன்றைய நிலைமை மிகவும் சாதகமானது. பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே, என்.ஜி.ஓ உதவிகட்கும் அப்பால் ஒரு வெகுசன அரசியல் இயக்கம் கட்டி எழுப்பப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆனால், அதற்கான அறிகுறிகள் தென்படாமை துரதிர்ஷ்டமே!

காலிமுகத்திடலில், ‘மக்கள் பல்கலைக்கழகம்’ தொடக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட, தனது உரையை மாவோவின் மேற்கோள் ஒன்றுடன் மையப்படுத்தினார். இன்றைய தேவையும் அதுவே. “மக்களை நம்புங்கள்; அவர்களைச் சார்ந்திருங்கள்; அவர்களது முயற்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். புரட்சி என்பது மிகவும் பக்குவப்பட்டதாகவோ, அன்புடனோ, கருணையுடனோ, கட்டுப்படுத்தப்பட்டதாகவோ, பெருந்தன்மையுடையதாகவோ இருக்க முடியாது. அவ்வாறான அவசியமும் இல்லை. இந்த மகத்தான புரட்சிகர இயக்கத்தில், மக்கள் தமக்குத்தாமே கற்பித்துக் கொள்வார்களாக; சரியானது எது? தவறானது எது என்பதைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்வார்களாக. சரியான வழியில் செயற்படுவதற்கும் தவறான வழியில் செயற்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வார்களாக. அதற்கு வழிகாட்டுவதாகப் புரட்சிகர அமைப்புகள் இயங்க வேண்டும்” என்றார்.