தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா?

இந்த இறக்குமதித் தடைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பலர், தற்போதைய ஜனாதிபதியினால் தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனால் நாடு மேலும் பின்னடைவை எதிர்நோக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளமையின் காரணமாக தற்போது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நாடு பாதிக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்த நிலைக்கு யார் பொறுப்பாளிகளாக அமைந்திருந்தாலும், தற்போது நாடும், நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்துக் கொள்வதை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த காலப்பகுதியில், இந்நாட்டின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்களை இறக்குமதி செய்ய அவசியமான அந்நியச் செலாவணி நாட்டில் இருக்கவில்லை என்பதுடன், இந்தியா அடங்கலா சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைத்த கடன் மற்றும் நிவாரண உதவித் திட்டங்களினூடாக, இந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்து கொள்ள முடிந்தது.

ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் தொழிற்துறை போன்றவற்றுடன் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் இந்நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டுப் பணம் போன்ற முறைகளில் இலங்கைக்கு அந்நியச் செலாவணி கிடைக்கின்றது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியின் காரணமாக, அந்நியச் செலாவணி இருப்பு பெருமளவு குறைந்தமை இந்த நெருக்கடி நிலை தோன்றுவதற்கு ஒரு பிரதான காரணியாக அமைந்திருந்தது.

அண்மைக் காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களினூடாக, தற்போது சற்று திருப்திகரமான நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்த வாரத்தின் முற்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் இறக்குமதி செலவீனம் குறைவடைந்திருந்தமை, அந்நியச் செலாவணி கிடைப்பனவு, ஏற்றுமதி வருமானம் கிடைப்பனவு, பணவீக்கம் நிலையான மட்டத்தை எய்தியிருந்தமை, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு சீரடைந்தமை போன்றவற்றை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு இதனால் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக குறுகிய கால கடன்களைப் பெற்று செயலாற்றக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், நாட்டின் செலவுகளை நிர்வகித்துக் கொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

உண்டியல் போன்ற சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்காக செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பினூடாக அந்நியச் செலாவணி கிடைப்பதில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கேள்வியின் அடிப்படையில் பணவீக்கம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விலைகள் நிலையான மட்டத்தை எய்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திறந்த கணக்குகளினூடாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை முழுமையான நிறுத்த வேண்டும் என பரிந்துரை செய்திருந்தார். இதனூடாக, கறுப்பு சந்தையில் டொலர் பரிமாற்றம் இடம்பெறுவதை இல்லாமல் செய்வதற்கு மத்திய வங்கி முயற்சி செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

இறக்குமதித் தடையை மேலும் நீடிப்பதனூடாக, இந்நாட்டில் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணியை, அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதுடன், உண்டியல், ஹவாலா போன்ற சட்டவிரோதமான பணப் பரிமாற்றங்களை வலுவிழக்கச் செய்து, இந்நாட்டினுள் சட்டபூர்வமான முறையில் டொலர் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் தற்காலிக ஏற்பாடாக அமைந்துள்ளமை புலனாகின்றது.

எரிபொருள், எரிவாயு, உணவு, மருந்துப் பொருட்கள், உரம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தமை இந்நாட்டு மக்கள் கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருந்த பிரதான பிரச்சனைகளாக அமைந்திருந்தன. அவற்றுடன் இணைந்த மேலும் பல பிரச்சனைகளும் காணப்பட்டன. அரசின் பொருளாதாரக் கொள்கையினூடாக இன்று இந்தப் பிரச்சனைகளின் பெருமளவானவற்றுக்கு ஏதேனும் வகையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் நெருக்கடி தீரவில்லை. மேலும் ஒரு வருட காலப்பகுதிக்கேனும் இந்த நெருக்கடியான நிலை தொடரும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, மேலும் ஒரு வருட காலப்பகுதிக்கேனும் இந்த கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்பட்டு, நாட்டை வழமைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இதன் காரணமாக இறக்குமதி தடையும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வழமையாக இறக்குமதி தடை செய்யப்படும் போது, உள்நாட்டு உற்பத்தித் துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, ஏற்றுமதி வருமானமும் வீழ்ச்சியடையும் சூழல் காணப்பட்டது. அதனால், டொலர் இருப்பு குறைவடைவதாக தெரிவித்து, கண்மூடித்தனமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகக்குறைந்த பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு மாத்திரம் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளினூடாக, ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும், ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான செலவு போன்றவற்றுக்கிடையிலான இடைவெளியை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ளவும் முடிந்துள்ளது.

எளிமையாகக்கூறுவதானால், எம் வீட்டில் வருமானம் மட்டுப்பட்டு, நிதி நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிட்டால், வழமை போல நாம் முன்னெடுத்த வாழ்க்கைமுறையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது. மீண்டும் வருமானமீட்டக்கூடிய நிலை வரும் வரை, அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வோம். இதை நாம் அனைவரும் அறிந்ததே. உணவருந்திய பின்னர் இனிப்புப் பண்டமொன்றை உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், தற்போது இந்த இனிப்புப் பண்டத்தை தவிர்க்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. சோற்றுடன் நான்கு அல்லது ஐந்து கறி வகைகளை உண்டால், அதை தற்போது மூன்றாக குறைக்க வேண்டியுள்ளது. அவ்வாறான அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளாமல், நாளைய உணவு வேளைக்காக பணத்தை சேமித்துக் கொள்ள முடியாது.

நாடும் இவ்வாறானதொரு நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. செலவுகளை இயலுமானவரை குறைந்து, மீண்டும் வருமானமீட்டக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதை தற்போது மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனாலும், இந்தச் செயற்பாட்டை நிர்வகித்து சிறந்த தீர்வை தேடிக் கொள்வதற்கு அனைவரிடத்திலும் ஒற்றுமை இன்மையை காண முடிகின்றது. இறக்குமதி தடை செய்யப்படும் போது, நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என மக்களை தூண்டும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டால், இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அத்தியாவசியமற்ற இந்த தேவைகளுக்காக நாட்டில் எஞ்சியிருக்கும் பணத்தை பயன்படுத்துமாறு அறைகூவல்களை மேற்கொண்டால், நாட்டின் எதிர்காலம் இன்னும் மோசமானதாகவே இருக்கும்.

(ச.சேகர்)