தமிழ் கட்சிகளின் கோரிக்கை இன ஐக்கியத்துக்கு குந்தகம்

கேள்வி: உங்கள் கட்சியின் அன்ஜான் உம்மா உள்ளிட்ட சிலர் தற்போது கட்சியை விட்டு விலகிச் சென்று சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளார்கள். என்ன நடந்துள்ளது?

பதில்: அவர்கள் எமது கட்சியிலில்லை. எனக்கு அன்ஜான் உம்மா உள்ளிட்ட சிலர் 2008ம் ஆண்டிலேயே எமது கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்று ஞாபகத்திலுள்ளது. அவர்கள் விமல் வீரவங்சவின் கட்சிக்குச் சென்றார்கள். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றார்கள். அவர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்களில்லை. ஆகவே அவர்கள் பற்றி எதுவும் கூற முடியாது.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்க வேண்டுமென்றால் 13 கோரிக்கைகளை வடக்கு அரசியல் கட்சிகளும் 5அமைப்புகளும் முன்வைத்துள்ளன. இந்நிலைமையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: அந்தக் கோரிக்கைகள் தேசிய ஒற்றுமைக்குத் தடையாகும். அதில் சில கோரிக்கைகள் தவிர, ஏனையவற்றை எந்த வேட்பாளரும் நிறைவேற்ற முடியாது. அதனால் அவற்றை நாம் நிராகரிக்கின்றோம். அதனால் இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மை ஏற்படலாம். அக்கோரிக்கைகளை பெரும்பான்மையான தமிழ் மக்கள் கூட ஆதரிக்க மாட்டார்கள்.

கேள்வி: நிறைவேற்றக் கூடிய யோசனை களாக அவற்றில் எதனைப் பார்க்கின்றீர்கள்?

பதில்: மனித உரிமைகள் தொடர்பான சில விடயங்கள், காணிகளை மீள வழங்கல் போன்றவற்றிற்கு இணக்கம் அளிக்கலாம். தமிழ் மக்களை சங்கடத்துக்கு உள்ளாக்கும் அடிப்படைவாத கோரிக்கைகளே அதிகமாக உள்ளன.

கேள்வி: வடக்கு மக்களை தேசிய மக்கள் சக்தியுடன் இணைப்பதற்கு உங்கள் கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்: வடக்கு மக்களுடன் உரையாடி தேசிய ஒற்றுமையை உருவாக்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். அதனை ஏற்றுக் கொண்ட அறிஞர்கள் மற்றும் அரசியல் குழுவினர்கள் வடக்கில் உள்ளார்கள். தேசிய உணர்வுடன் செயற்படும் அவர்களின் கருத்துடன் இணைந்து நாம் நடவடிக்கையில் ஈடுபடுவோம். இனவாதிகளுடன் இணைந்து செயற்பட மாட்டோம். தெற்கில் அடிப்படைவாதிகளுடன் இணைந்து நாம் செயற்படாதது போல வடக்கிலும் அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயற்பட மாட்டோம். நாம் அனைவரினதும் சம உரிமையை ஏற்கும் அணிகளுடன் மாத்திரமே இணைந்து செயற்படுவோம்.

கேள்வி: நீங்கள் அவ்வாறு கூறினாலும் தெற்கை விட வடக்கில் நிலைமை வேறு அல்லவா? அடிப்படைவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் அதிக இடமுண்டு. தமிழ் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் செல்வாக்குண்டு. அந்நிலைமையில் தேசிய மக்கள் சக்தி எவ்வகையில் நடவடிக்கையில் ஈடுபடும்?

பதில்: நாம் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து 5 – 6 வருடங்களாகின்றன. எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அறிஞர்களும் நிபுணர்களும் அங்குள்ளார்கள். அவர்களினூடே எமது நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நாம் பல மேதினக் கூட்டங்களையும் நடத்தியுள்ளோம். அதற்கு மக்களிடையே பெருமளவு ஆதரவு கிடைத்தது. அனுரகுமார திஸாநாயக்கவும் பல கூட்டங்களை வடக்கில் நடத்தியுள்ளார். அதற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. வடக்கு மக்களும் மாற்றமொன்றை எதிர்பார்த்துள்ளார்கள்.

கேள்வி: ஆனால், விக்னேஸ்வரன் தெளிவாக சிங்களத் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கோரியிருந்தாரே?

பதில்: விக்னேஸ்வரன் அடிப்படைவாத அரசியல்வாதி. அவரின் கூற்றை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணவில்லை. அவர் முதலமைச்சராக இருந்த 5வருட காலத்தில் வெற்றிகரமாக எதனையுமே செய்யவில்லை. வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகளிடம் கூட அவருக்கு இடமில்லை. அதனால் அவரைப் போன்ற அடிப்படைவாத இனவாத அரசியல்வாதியொருவர் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி: ஆனால், அவர் கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தேசிய மக்கள் சக்தியினூடாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவை நியமிப்பதாக விஜித ஹேரத் கூறினார். குறைந்த பட்சம் இச்சந்தர்ப்பத்தில் இனவாதத்தை பரப்பும் கதைகளை ஊடகங்களினூடாக பரப்புவதற்கான தடையை பெற்றுக் கொள்ளும் முறையொன்று குறித்து உங்கள் கட்சி கவனம் செலுத்தியுள்ளதா?

பதில்: ஊடகங்களினால் மாத்திரம் அதனை நிறைவேற்ற முடியாது. அடிப்படைவாதம் குறித்து பேசுபவர்கள் தொடர்பாக முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய தெளிவான முறையொன்று இருக்க வேண்டும். உலகில் அநேக நாடுகளில் ஊடகங்களுக்கு சட்ட தணிக்கை நியமிக்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள் புரிந்துணர்வு, அனுபவம் மற்றும் சுய ஒழுக்கத்தின்படியே நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். அதனால் அவர்கள் சமூகத்தில் தேவையற்ற, இனங்களிடையே ஒற்றுமையைக் குலைக்கும் செய்திகளை வெளியிட வேலி அமைப்பது அவசியம்.

கேள்வி: அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இலங்கையில் சட்டம் ஒழுங்கு இல்லையென்று கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியூடாக அந்நிலைமையை மாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் என்ன?

பதில்: எமது நாட்டில் அரசியல் தலையீட்டாலேயே ஒழுக்கம் இல்லாமற் போகின்றது. அதனால் நீதித்துறை ஆணைக்குழுவை அதிகாரத்துடன் செயல்படும் ஒன்றாக மாற்ற வேண்டும். அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் தேவைக்காக அதனை பாவிப்பதை தடுக்க வேண்டும்.

கேள்வி: லால்காந்த, அநுர குமார திஸாநாயக்காவின் கூட்டம் ஒன்றில் கோட்டாபயவை மோசமாக விமர்சனம் செய்தார். உங்கள் கட்சியும் மற்றவர்களைப் போல குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளதா?

பதில்: எமது கட்சியின் கொள்கைகள் தொடர்பாக மக்களுக்கு கருத்துக் கூறுவது போல் ஏனையோரின் தவறுகள், ஊழல்கள், குற்றங்கள் பற்றி தெரிவிப்பதும் எமது கடமையாகும். சில நபர்கள் யார் மீதும் சேறு பூசுவதில்லை என்று கூறுகின்றார்கள். சேறு பூசுவது வேறு, உண்மையை கூறுவது வேறொன்றாகும். நாம் கூறும் விடயங்கள் பொய்யென்றால் வழக்குத் தொடுக்கலாம்.