தீண்டாமை ஒழிப்பு போராட்டம் – மந்துவில்(பகுதி 8)

எனது கிராமத்தில் மூன்று பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.பெரிய மந்துவில் ,கும்பாவெளி,கலட்டி ஆகிய பகுதிகளில் வாழ்கிறார்கள்.இப் போராட்டத்தில் தனியாக பெரிய மந்துவில் மட்டும் பங்கேற்றது.மற்றைய பகுதிகளில் சிலர் ஆதரவளித்தனர்.

எமது பகுதியில் உள்ள ஒரு பகுதி மக்கள் 1935 ம் ஆண்டளவில் வடமராட்சி மண்டான்,கரணவாய் பகுதிகளில் இருந்து உயர்சாதியினரால் ஒரே இரவில் வீடுகளை எரித்தும் கொலைகள் செய்தும் விரட்டப்பட்டு மந்துவிலில் தஞ்சம் புகுந்தவர்கள்.இருந்தாலும் மந்துவில் வெள்ளாளர், நளவர் எல்லோரும் அவர்களை அரவணைத்தனர்.சாதி வேறுபாடு இருந்தாலும் வெள்ளாளர் பாணிகளில் குடியிருந்து அந்த காணிகளை வாங்கி சொந்தமாக்கி கொண்டனர்.இவரகள் இப்போதும் வடமராட்சி தொடர்புகளை அறுக்காமல் உறவுகள் தொடர்கின்றன .

ஆனால் இவர்களுக்கும் பூர்வீகமான எங்களுக்கும் உறவுகள் கிடையாது.இன்றுவரையும் இல்லை.ஆனால் இந்த சாதி எதிர்ப்பு போராட்டம் சாதி வெறியர்களின் கண்மூடித்தனமான பழிவாங்கல் போக்கால் ஒன்றுபட வைத்தது.இன்றுவரை எமக்குள் எந்தவிதமான உறவுகள் ஏற்படாதபோதும் வேறு சாதியினர் அல்லது வேறு ஊரவர் பிரச்சினக்கு வரும்போது எல்லாக் கைகளும் ஒன்று திரளும்.இது இந்த போராட்டத்தின் பின்னால் வந்த ஒற்றுமை.இதனால் இங்கே புலிகளின் சர்வாதிகாரம் கூட தலைநிமிர முடியவில்லை .

சமூகங்களிடையே உள்ள பிரச்சினைகள் ஏற்படுவதும் குறைவு.பயம் காரணம் அல்ல.பொதுவாக அவை தனிநபர் பிரச்சினைகளாக கருதி அவைகள் தீர்த்து வைக்கப்பட்டன.

இச் சாதிப்பிரச்சினையில் நம்மை எதிர்த்தவர்கள் காங்கிரஸ் கட்சியால் முன்னாள் பா.உ. வே. குமாரசாமியால் வளர்க்கப்பட்டவரகள்.1956 தேர்தலில் குமாரசாமிக்காக வன்முறையில் ஈடுபட்டவர்கள்.

எமது பகுதியும் குமாரசாமியின் கோட்டையாகவே இருந்தது.சேர்.ஜோன். கொத்தலாவல அவர்களை மாட்டுக்கு மாலையிட வைத்து எமது சமூகத்தை எமது ஊரை,சாதியை அவமானப் படுத்தியதால் செல்வாக்கை இழந்தது.பின் தமிழரசுக்கட்சியின் கோட்டையானது.அப்படி இருந்தும் எமக்கு எதிராகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டது.

நவரத்தினம் என்கிற இளைஞனின் கொலை திட்டமிட்ட கொலை அல்ல.அவர் அங்கே வந்தது தவறு.ஆனால் அவரின் குடும்பம் வழக்காடியது.அவருக்கு சாட்சியாக சாதிவெறியரகள் தங்கியிருந்த வீட்டுக்காரி அயிலகண்டம் என்னும் பெண் சாட்சியாக வந்தார்.

இந்த கொலையைத் தொடர்ந்து சாதி உரிமைப் போராட்டம் திசை மாற தொடங்கியது.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)