நாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்


இக்கட்டுரை கீற்று இணையத்தளத்திலெ வெளியானது. நாம் தமிழர் கட்சி தொடர்பான ஈழத்தமிழன் ஒருவனின் பார்வையாக இக்கட்டுரை இடம்பெற்றது. பிற்பாடு “எங்கே போகிறது நாம் தமிழர் கட்சி?” என்கிற ஆழி பதிப்பகம் ஊடாக வெளியான புத்தகத்திலும் இக்கட்டுரை இடம்பெற்றிருந்தது.
இடையில் சிலகாலம் வலைப்பதிவுகளில் சற்றே மனந்தளார்ந்திருந்தாலும் தமிழக, ஈழத்து, ஈழம் தொடர்பான தமிழக நிகழ்வுகளை தொடர்ச்சியாகவே அக்கறையுடன் பார்த்து வந்தவன் என்றவகையில் நாம் தமிழர் தொடர்பான எனது நிலைப்பாடு இன்னும் இன்னும் உறுதிப்படுவதால் மகிழ்ச்சி
இயன்றவரை தொடச்சியாக எழுதுவது என்று முடிவெடுத்திருக்கும் நிலையில் இக்கட்டுரையைப் பகிர்கின்றேன்
அன்புடன்
அருண்மொழிவர்மன்
2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்துவருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த்தேசியம் தொடர்பான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த்தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்பகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஈழப்போராட்டம் தொடர்பான கடந்தகால அனுபவங்களில் இருந்து சுயவிமர்சனங்களுடன் அடுத்த கட்டம் தொடர்பாக ஆரோக்கியமாக அணுகுகின்ற போக்கும், புலிகள் மீதான விமர்சனங்கள், அதிருப்திகள் கொண்டிருந்தோரும் ஈழப்போராட்டம், தமிழ்த்தேசியம் தொடர்பாக மீண்டும் பங்கேற்க ஆரம்பித்துவருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையும் அங்கே ஈழப்போராட்டம் ஏற்படுத்திய தாக்கமும், தொடர்ச்சியாக இந்திய மைய அரசால் பாரபட்சம் காட்டப்பட்டுவருகின்றோம் என்கின்ற உணர்வும், கூடங்குளம், முல்லைப் பெரியார் ஆறு போன்ற பொதுப்பிரச்சனைகளிலும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வைக் கூர்மைப்படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த உணர்வலைகளைத் தனக்குச் சாதகமாக அரசியல் ரீதியில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற சுயநலத்துடன் அரசியல் கட்சிகள் காய் நகர்த்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அண்மைக்காலத்தில் இதற்கான ஆகச்சிறந்த உதாரணமாகக் கருணாநிதி டெசோ. தமிழீழம் என்று மீண்டும் பேச ஆரம்பித்திருப்பதைக் குறிப்பிடலாம்.
ஈழத்தமிழர்களின் நீண்ட கால விடுதலைப் போராட்டத்திற்கும், அந்தப் போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகளிற்கும் தாம் மாத்திரமே உரித்தானவர்கள் என்று உரிமை கோரி இந்தப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் ஒட்டுமொத்த அரசியல் அனுகூலங்களையும், ஈழத்தமிழர் போராட்டத்தினை அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுப்பவர்கள் தாம் மாத்திரமே என்று அடையாளப்படுத்தி அதனூடாக புலம்பெயர் தமிழர்கள், ஆதரவாளர்களிடம் இருந்த கிட்டக்கூடிய எல்லாவிதமான ஆதரவையும் கொண்டு தம்மை ஒரு பலமான அரசியல் கட்சியாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற குறுகிய நோக்கும், முழுச் சுயநலமும் கொண்டதாகவே நாம் தமிழர் கட்சியின் ஆவணம், நாம் தமிழர் கட்சியை அடையாளம் காட்டி இருக்கின்றது.
எந்த விதமான நுணுக்கமான அரசியல் பார்வைகளுக்கும் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியின் நோக்கம் இந்த ஆவணத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றது. பழம் பெருமைகள் (இவற்றிற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இன்றுவரை நாம் தமிழர் கட்சியினரால் காட்டப்படவில்லை), புரட்டுகள், திரித்தல்கள், பெரியார் பற்றிய அபாண்டமான குற்றச்சாற்றுகள் (இவற்றுள் அனேக குற்றச்சாற்றுகள் ஏற்கனவே ஆதாரங்களுடம் மறுக்கப்பட்டுவிட்டவை, அத்துடன் பெரியாரின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமலேயே இந்தக் குற்றச்சாற்றுகள் ஆவணத்தில் குறிப்பிடப்படுகின்றன) என்று தொடங்குகின்ற ஆவணம் பிரிவு 6ல் தமிழரின் வீழ்ச்சிக்குரிய துல்லியமான காரணம் என்கிற பிரிவை கீழ்வருமாறு நிறைவு செய்கின்றது,
“தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக தமிழரின் இன எதிரியான இந்தியா, தனது எதிரிகளான சீனா, பாக்கித்தான் ஆகிய நாடுகளின் துணையோடு கூட, அமெரிக்கா பிரிட்டன் போன்ற முதலாளிய நாடுகளையும், கியுபா, வெனிசுலா போன்ற நிகராண்மை நாடுகளையும் உள்ளடக்கிய அனைத்து உலக நாடுகளையும் ஒத்துழைப்பிற்கு அழைத்துக்கொண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, தமிழர்களின் ஒத்துழைப்பில்லாத இரண்டகத்தால் பேரழிவைச் சந்திக்க நேர்ந்தது; தமிழீழ விடுதலைப் போராட்டம் தன் இலக்கு நோக்கிய தொடர்ச்சியை இழந்து தவிக்கின்றது. தகுதியான எந்த உதவியும், எங்கிருந்தும் இல்லாத வெறுமை நிலவுகின்றது.”
இதன் தொடர்ச்சியாக ஆவணத்தில் பிரிவு 7 ‘அ’ வில் நாம் தமிழர் பற்றிய அறிமுகம் பின்வருமாறு கூறப்படுகின்றது,
இந்த வெறுமையை உடைத்தெறிந்து, தமிழர், உலக அரங்கில் மானத்தோடு வாழும் நிலையை உருவாக்கிட, விடுதலை வேட்கையும், வீரமும், மானமும், ஈகமும், ஒப்புடைப்புணர்வும், உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், ஒற்றுமைப்பண்பும், தன் விளம்பரத் தவிர்ப்பும், தன்னுறுதியும், இனவிடுதலைப் பற்றும், இனவிடுதலைப் குறிக்கோளில் உறுதியும், உடல் வன்மையும், உளத் திண்மையும், பொறுமையும், போர்மையும், அறிவார்ந்த சிந்தனையும், தகவார்ந்த செயல்திறனும் கொண்ட தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற தன்னிகரில்லாப் பேரியக்கமே “நாம் தமிழர் கட்சி”. அது தமிழர்க்காகத் தமிழர்களால் நடத்தப்படும் தமிழர்களின் கட்சி.”
அதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெறுமையை உடைத்தெறியப் போவது நாம் தமிழர் கட்சி என்கின்றது ஆவணம். இதனுடன் தொடர்புபடுத்தி சில மாதங்களிற்கு முன்னர் நாம் தமிழர் கட்சி தாம் புலிகளின் அரசியல் பிரிவாகச் செயற்படுவோம் என்ற பொருள்பட அறிவித்திருந்ததையும் கவனிக்கவேண்டும். புலிகள் அமைப்பின் நீட்சியாகத் தம்மை அடையாளப்படுத்துவன் மூலம் தமிழகத்தில் புலிகளிற்கு ஏற்பட்டிருக்கின்ற ஆதரவினை தமது ஓட்டரசியல் என்கின்ற சுயநலத்திற்குப் பாவிப்பது என்பது நாம் தமிழரின் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகின்றது. முதலில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தவர்கள் ஆதரவாளர்களாகவும், ஆக்க பூர்வமாக செயற்படுபவர்களாகவும் இருப்பது ஈழத்தமிழர்களின் பலத்தை அதிகரிக்கும் என்கின்ற அதேவேளை, ஈழப் போராட்டத்தினை கொண்டு நடத்துபவர்களாக ஒருபோதும் தமிழகத்து அரசியற் கட்சிகளோ அல்லது அரசியற் தலைவர்களோ இருக்கமுடியாது. அவ்விதம் அமைவது ஈழப்போராட்டத்தினை வலிமையிழக்கச் செய்வதுடன் இன்னமும் பின்னடைவையே ஏற்படுத்தும். நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சீமான் பேசிய உணர்வூட்டும் பேச்சுக்கள் ஈழத்தமிழர்களிடையேயும், ஈழத் தமிழர் ஆதரவாளர்களிடையேயும் அவருக்குப் பெரும் ஆதரவை வழங்கியது உண்மை. அத்துடன் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்கான இந்திய அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்ததும், கனடா, அமெரிக்காவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டதும் அவருக்கான ஆதரவை அதிகரித்ததும் உண்மை. தவிர தான் வன்னி சென்று திரும்பிய சந்தர்ப்பங்களில் அங்கு நடந்தவை பற்றி தொடர்ச்சியாக மேடைகளில் பேசி தனக்கும் புலிகளுக்கு நெருக்கமாக தொடர்பு இருந்தது என்பதை தொடர்ச்சியாக மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே சீமானும் இருந்தார். ஆனால் ஈழத் தமிழர்களிற்காக தான் சிறை சென்று திரும்பியவன் என்பதையும், தனது உணர்வூட்டும் பேச்சுக்களையும் வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வெறுமையை உடைத்தெறிய வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியனர் என்றும், புலிகளின் அரசியற் பிரிவினராகத் தாம் செயற்படுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி கூறுவதும், அதை ஈழத்தமிழர்கள் (யாராவது) நம்புவதும் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். ஈழத்தமிழர் போராட்டம் தொடர்பான சீமானின் பாத்திரம் ஒரு உணர்வூட்டும் பேச்சாளார் என்பதில் இருந்து ஒரு அரசியல் தலைவராக விரிவடைவதில் இருக்கக் கூடிய ஆபத்துக்களைத் தொடர்ந்து பார்ப்போம்.
முதலில் இந்த ஆவணத்தில் பிரிவு 16. உறுப்பினர் தகுதியில் பின்வருமாறு கூறப்படுகின்றது,
அவர்கள் (உறுப்பினர்கள் – கட்டுரை ஆசிரியர்) தமிழ் நாட்டிலோ அல்லது பிற மாநிலங்களிலோ வாழ்பவர்களாக இருக்கலாம். வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பின் இந்திய ஒன்றியத்தின் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
அதாவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல்வேண்டும். இதன்படி நாம் தமிழர் கட்சியில் ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக முடியாது. அப்படி இருக்கின்றபோது, இந்தியத் தமிழர்களால், அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு கட்சி தம்மை ஈழப்போராட்டத்தினை கொண்டு நடத்துபவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குவது மிக மோசமான ஏமாற்றுத்தனம். மேலும், புலம்பெயர் நாடுகளிலும் நாம் தமிழர் தமது கிளைகளை அமைத்து இருக்கின்றனர். அவற்றின் உறுப்பினர்களாகவும், நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈழத்தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சிக்கான தமது பங்களிப்பை ஆற்றியும் வருகின்றனர். இப்போது நாம் தமிழர் ஆவணத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் எவருமே அதில் உறுப்பினராக முடியாது என்பதை நாம் தமிழர் கட்சியினர் தமது வெளிநாட்டுக் கிளைகளுக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் சட்ட ரீதியாகப் பதிவுசெய்து இயங்குகின்ற ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் நாம் தமிழர் கட்சியினர் தமது வெளிநாட்டுக்கிளைகளின் நிர்வாகிகளின் பெயர்களையும், தொடர்புகொள்வதற்கான வழிகளையும் தமது இணையத் தளத்திலேயே தெரியப்படுத்தவேண்டும். தனது ஆவணத்தின்படி தனது கட்சியில் உறுப்பினராகமுடியாதவர்களை தனது கட்சி உறுப்பினர்கள் என்ற பெயரில் சேர்த்துவைத்துக்கொண்டு இருப்பது அந்த உறுப்பினர்களை அரசியல் ரீதியாகச் செயலிழந்தவர்களாக மாற்றும் செயலே அன்றி வேறொன்றில்லை.
இந்த ஆவணத்தில் முக்கியமாகக் கவனம் செலுத்தவேண்டிய விடயம் பிற இனத்தவர்கள் மீதும், “நாம் தமிழர்” என்ற பிரிவுக்குள் உள்ளடக்கப்படமாட்டாதவர்கள் மீதும் ஆவணம் காட்டும் மோசமான வெறுப்புணர்வு. இது இனங்களிடையிலான ஒற்றுமையை முற்றாக ஒழித்துக்கட்டி நாம் தமிழர் செயற்படும் இடங்களையெல்லாம் கலவர பூமியாக மாற்றக்கூடியது. உதாரணத்துக்கு ஆவணத்தில் 3வது முரண்பாடாக “தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்தவத்திற்கும் இடையிலான முரண்பாடு” என்று குறிப்பிடப்படுகின்றது. ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான வெற்றிடத்தினை உடைக்க வந்திருப்பதாக சொல்லுகின்ற இந்த நாம் தமிழர் கட்சி இப்படியான நிலைப்பாடுகள் மூலம் செய்யப்போவதெல்லாம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கான எல்லா தார்மீக நியாயங்களையும் குழி தோன்றிப்புதைப்பதைத்தான் என்றே தோன்றுகின்றது. விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று முஸ்லீம்களை வெளியேற்றியது. இன்றுவரை புலிகள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாற்றுகளில் ஒன்றாக இது இருக்கின்றது. பின்னாட்களில் புலிகள் அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும் இருக்கின்றார்கள். சமாதான கால கட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனுக்கும், முஸ்லீம் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்தாகி இருக்கின்றது. ஒப்பந்தத்தின் பிரகாரம் முஸ்லீமகள் ஒரு தனித்தேசிய இனமென்கின்ற நிலைப்பாட்டுக்குப் புலிகளும் வந்திருந்தார்கள் அல்லது முஸ்லீம்களும் ஒரு தனித் தேசிய இனமென்பதைப் புலிகளும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இன்றைய நிலையில் இலங்கைப் பிரச்சனைக்கான தீர்வு என்று சிந்திப்பவர்களும் முஸ்லீம்களை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு தனித் தேசிய இனமாகவே கருதி தீர்வுகள் நோக்கி சிந்திக்கவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் மொழிவழித் தமிழர்களாக இருந்தாலும் தம்மை ஒரு தனித்த இனத்தவர்களாகவே அடையாளப்படுத்தி வருகின்றார்கள். (தமிழகத்து தமிழர்களின் நிலைப்பாடு இதில் இருந்து வேறுபட்டது. அவர்கள் தம்மை தமிழர்களாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகின்றார்கள்). அண்மைக்காலமாக இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் அங்கு வாழுகின்ற சிறுபான்மை இனங்கள் மீது தன் ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரமாக்கி வருவதோடு சம நேரத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் செயற்பட்டு வருகின்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த நேரத்தில் அங்கு வாழுகின்ற சிறுபான்மை இனங்கள் தத்தம் உரிமைகளுக்காகப் போராடுவதுடன், தமக்கிடையே இருக்கின்ற கசப்புணர்வுகள், முரண்பாடுகளைக் களைந்து ஒருவருக்கொருவர் ஆதரவுடனும், நம்பகத்தன்மையுடனும் நடந்துகொண்டால் மாத்திரமே சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுக்கு அழுத்தம் தரவும், தமது உரிமைகளை தக்கவைக்கவும் முடியும். அண்மைக்காலத்தில் அறிவுசார் வட்டங்களில் இருந்து இதற்கான முன்னெடுப்புகளும் ஓரளவு நடைபெற்றே வருகின்றன. ஆனால் நாம் தமிழரின் ஆவணமோ இந்த ஒட்டுமொத்த முயற்சிகளையும் தவிடு பொடி ஆக்குவதுடன் இனங்களிற்கிடையே இருக்கின்ற பிளவை இன்னமும் ஆழவும், அகலவும் படுத்தவே முயல்கின்றனர். நாம் தமிழர் கட்சி கருதுகின்ற மேற்படி முரண்பாடு பற்றி அவர்கள் ஆவணம் தொடர்ந்து பின்வருமாறு விளக்கமளிக்கின்றது,
“3ம் முரண்பாடுகளாக முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை. சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும், தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்றுணர்ந்து வருவராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளவேண்டிய தரப்பினர்.”
இங்கே முக்கியமான இன்னொருவிடயம் கிறித்தவர்கள் தொடர்பான நாம் தமிழர் கட்சியின் பார்வை. ஈழத்தப் பொறுத்தவரை கிறித்தவர்கள் தம்மை மொழி சார்ந்தே அடையாளப்படுத்திகொள்ளுகின்றார்களே தவிர தம்மை ஒரு தனித்து அடையாளப்படுத்திகொண்டதே கிடையாது. தவிர ஈழத்தில் புலிகள் அமைப்பினருக்கும் கிறித்தவ மதகுருமார்களுக்கும் தொடர்ச்சியாகப் பேணப்பட்ட நல்லுறவு அனைவரும் அறிந்ததே. சமாதான கால கட்டத்தில் பிரபாகரன் தொடர்பாக தொடர்ச்சியான பல்வேறு வதந்திகளைப் பரப்பிவந்த இலங்கை அரசு பிரபாகரன் கிறித்தவராக மதம் மாறினார் என்றும் சிலகாலம் சுவரொட்டிகள் ஒட்டிப்பார்த்தது. இது பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இன்றி எழுந்தமானத்துக்கு இது போன்ற பிரிவினைக்கு வழிகோலும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டே தம்மை புலிகளின் அரசியல் தொடர்ச்சி என்றும், தமிழீழ விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை உடைத்தெறிய வந்தவர்கள் என்றும் அலங்கார வார்த்தைகளை அள்ளி இறைக்கும் நாம் தமிழர் கட்சி ஆவணம் உடைக்கப்போவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தையல்ல, மாறாக தமிழீழ விடுதலை பற்றி எமக்கிருக்கின்ற நம்பிக்கையையே.
இந்த ஆவணம் அள்ளி இறைக்கும் வெறுப்பை விதைக்கும் வார்த்தைகள் இத்தோடு முடியவில்லை. பிற்சேர்க்கை அ – ஆவணம்சார்ந்த முன்மாதிரி முழக்கங்களில் மறக்க மாட்டோம், மறக்க மாட்டோம் மலையாளிகளை மறக்க மாட்டோம்” என்று ஒரு முழக்கம் வருகின்றது. இந்த முழக்கம் ஈழப்பிரச்சனை தொடர்பானதாகவே அமைகின்றதையும் அறியமுடிகின்றது. ஈழப்போராட்டத்தில் இந்திய அரசிலும், ஐநா உள்ளிட்ட அமைப்புகளிலும் பங்கேற்று போரின் இறுதிக்கணம் வரை இலங்கை அரசுக்கு எந்த அழுத்தமும் வரவிடாது காபந்து பண்ணி ஒரு இனப்படுகொலையை நடத்தி முடிக்க உதவிய அமைச்சர்களிலும், அதிகாரிகளிலும் சிலர் மலையாளிகளாக இருந்தார்கள். ஆனால் அதைக் காரணம் காட்டி ஒரு இனத்தின் மீதே வெறுப்பைக் கக்கும் ஒரு கோசத்தை ஒரு கட்சி தன் அதிகார பூர்வ முழக்கமான தன் கட்சி ஆவணத்திலேயே வெளியிடுவது எத்தனை மோசமானது. தமிழர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பிரசாரங்களையும், அறிக்கைகளையும் வெளியிடும் சிங்களப் பேரினவாதிகளையும், சிவசேனா போன்ற அமைப்புகளையுந்தான் இந்த அறிக்கை நினைவூட்டுகின்றது. ஈழத்தில் இருந்த நாட்களில் புலிகளால் ராணுவ முகாங்கள் அழிக்கப்பட்டபோதும் இழந்த பிரதேசங்கள் மீட்கப்பட்டபோதும் ஒரு கொண்டாட்ட உணர்வு இருந்ததேயன்றி எந்தத் தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் மரணத்தையும் நாம் அங்கு கொண்டாடி வந்ததில்லை. பூநகரித் தாக்குதலின் பின்னர் புலிகளால் வெளியிடப்பட்ட “சிறீமா ஆச்சி பெத்த மகள் சந்திரிக்காவே..” என்ற பாடலை ஒலிபரப்புவதற்குக்கூட சில நாட்களின் பின்னர் புலிகள் தடைவிதித்திருந்தனர். இந்தப் பாரம்பரியத்தில் வந்த எமக்கு ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாக விரோத மனப்பாங்குடன் சித்திகரிப்பது மிகவும் கேவலமான ஒரு செயலாகவேபடுகின்றது. இன்னொரு முழக்கம் சொல்கின்றது “கணக்குத் தீர்ப்போம், கணக்குத் தீர்ப்போம். அமைதிப்படை கணக்குத் தீர்ப்போம்” என்று. இந்தக் கோசத்தைப் பார்க்கின்றபோது எனக்கு, இந்திய இறையாண்மைக்குட்பட்டு இயங்கப்போகின்ற நாம் தமிழர் கட்சி எவ்விதம் அமைதிப்படைக்குக் கணக்குத் தீர்க்கப்போகின்றது? என்ற கேள்வி எழுகின்றது. ஈழப் போர் உக்கிரம் பெற்றிருந்தபோது பலமுறை மேடைகளில் “நானே ஈழம் சென்று போராடுவேன்” என்று வீர முழக்கம் செய்த சீமானின் இன்னுமொரு முழக்கம்போலவே இந்த நாம் தமிழர் கட்சியின் முழக்கமும் அமைகின்றது. இது போன்ற வெறும் முழக்கங்களிற்கும் நடிகர் விஜய் செய்த “நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நாம் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட” என்கிற “முழக்கத்திற்கும்” அதிகம் வேறுபாடில்லை.
தவிர, “உலகின் முதன்மொழி தமிழ்; உலகின் முதலினம் தமிழர். முதன் மொழியாம் நம் தமிழின் அகவை 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது” என்று பாவாணரைத் துணைக்கிழுத்துக் கொண்டு தொடங்குகின்ற ஆவணம் அதன் 54ம் பக்கத்தில்
“முன்னம் பிரிந்து திரிந்தவன் மனுநெறியன்
பின்னம் பிரிந்து திரிந்தவன் திராவிடன்
அய்ரோப்பியன், அமெரிக்கன் மேலை மனுநெறியன்
அய்யனென்னும் பொய்யன் கீழை மனுநெறியன்
தெலுங்கன் மலையாளி தென்புலத் திராவிடன்
மராட்டியன் பஞ்சாபி வடபுலத் திராவிடன்
சிங்களவன், சியாமியன் கீழைத் திராவிடன்”
என்று விரிகின்றது. இங்கே சிங்களவரை “கீழைத் திராவிடன்” என்று அறிவித்துக்கொள்ளும் நாம் தமிழர் அறிக்கை பெரியாரைக் குறிவைத்து, “ஈழத்தந்தை செல்வா உதவிகேட்டபோது சிங்களத் திராவிடத்திடம் பணிந்துபோகுமாறு திராவிடம் அறிவுரை கூறியது” என்கிற அவதூறை முன்வைக்கின்றது. உண்மையில் 72ல் நடந்த அந்த சந்திப்பில் பெரியார் “ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்” என்றே கூறி இருந்தார். அதனை பெரியார் சிங்களவர்களுக்குப் பணிந்து போகுமாறு தமிழர்களைப் பார்த்துக் கூறியதாகக் கூறுவது மிகுந்த உள்நோக்கம்கொண்டது. தவிர ஆவணம் தொடர்ந்து கூறுகின்றது,
“வாக்கு அரசியல் திராவிடமோ தில்லிக் கும்பல் போட்ட தாளத்திற்கு ஏற்றவாறு, முன்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பின்பகுதில் இந்தியம், சிங்களத்தோடு சேர்ந்து குழுதோண்டியது. இந்தியத் தேசியக் கட்சிகள் அனைத்தும், மனுவிய வெறியோடு (வெவ்வேறு அளவுகளில்) தமிழீழ விடுதலையை முற்றாக எதிர்த்து நின்றன, நிற்கின்றன.
பகுதிவாதத் தமிழ்க்கட்சிகள் திராவிடக் கட்சிகளின் காலடிகளில் விழுந்து, அவற்றோடு இணைந்து ஈழத்திற்கு இரண்டகம் செய்தன…”
இங்கே வாக்கு அரசியல் கட்சிகள் பற்றி இத்தனை தெளிவாகப் பேசுகின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் வாக்கு அரசியல் கட்சியொன்றின் தலைவியான ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று போற்றினார், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார். காங்கிரசை தோற்கடிக்கவேண்டும் என்பதுதான் அன்று அவரது நோக்கமாக இருந்தது என்றால் ஈழத்தாய் என்றும், இலை மலைர்ந்தால் ஈழம் மலரும் என்றும் புகழ்ந்திருக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. தவிர ஜெயலலிதா பற்றிய சீமானின் மென்போக்கு பலரும் பல சந்தர்ப்பங்களில் அவர் மீது வைத்த குற்றச்சாற்றே. சென்ற மார்ச் மாதத்தில் கனடாவில் ரொரன்றோ நகரில் கூடங்குளம் தொடர்பாக ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தியிருந்தோம். அதில் கலந்துகொள்வதற்கான அழைப்பு நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் விடுக்கப்பட்டிருந்தபோதும் அவர்களின் நிலைப்பாடு இவ்வாறான ஒரு போராட்டத்தினை நடத்துவது ஜெயலலிதாவை எதிர்ப்பது போன்றதாகும், ஜெயலலிதா இப்போது ஈழத்தமிழர்கள் தொடர்பாக அக்கறைகொண்டவராகவே இருக்கின்றார் என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தது. ஆவணத்தில் 57ம் பக்கத்தில் தமிழர் அழிப்புக்கூறுகளான கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களை இழுத்து மூடத் தொடர்ந்து போராடுவதை கட்சியின் செயற்பாட்டுக் கொள்கையாக அறிவித்திருக்கின்ற இவர்கள் கூடங்குளம் போராட்டத்தின்போது தமது தொண்டர்களை முழுமையாகக் களமிறக்கிப் போராடினார்களா என்ற கேள்வியே எஞ்சி நிற்கின்றது. எப்படி ஈழத்தமிழர்களின் போராட்டத்தினை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் லாபங்களிற்காக பாவித்தார்களோ அதைவிடப் பன்மடங்கு லாபநோக்கம் கருதியதாகவே சீமானின் நோக்கம் இருக்கின்றது
அடிப்படை முரண்பாடுகள் என்பதில் 8வது முரண்பாடாக ஆணாளுமை – பெண்ணடிமை முரண்பாடென்று பட்டியலிட்டும், செயற்பாட்டுக் கொள்கைகளில் 12வது கொள்கையாக “மகளிருக்குச் சமபங்கு கொடுப்பது கொடையன்று, அதை அடைவது அவர்கள் பிறப்புரிமை, அதற்காகப் பாடுபடுவோம்” என்றும் அறிவித்துக்கொள்ளுகின்ற இந்த ஆவணத்தில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் ஆண்பால் விகுதிகளே பாவிக்கப்பட்டிருக்கின்றதை அவதானிக்கவேண்டும். தவிர முரண்பாடுகள் என்று பட்டியலில் தமிழ்த் தேசிய முதலாளிகளுக்கும் பிற தேசிய முதலாளிகளுக்குமான பிரச்சனையை எல்லாம் கடந்து சாதீயம் பட்டியலில் 7வதாக வருவதோடு அதை ஒரு மேற்கட்டுமானப் பிரச்சனை என்றே ஆவணம் தெரிவிக்கின்றது. இப்படியான முரண்கள், திரித்தல்கள், புரட்டுக்களே இந்த ஆவணத்தை நிறைத்து நிற்கின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பவர்களாகவும், புலிகளில் அரசியல் தொடர்ச்சியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளுகின்ற நாம் தமிழரின் உண்மையான, மொழிப் பாசிச, இனவாதத்தைத் தூண்டுகின்ற முகத்தை இந்த ஆவணம் அம்பலப்படுத்தி நிற்கின்றது. இப்படிப் பட்ட மோசமாக, இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களான புலிச் சின்னத்தையும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தையும், புலிகளின் மாவீரர் நாள் பாடலான மொழியாகி எங்கள் மூச்சாகி.. பாடலைத் தமது உறுதிமொழியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், பேரையும் தொடர்ந்து தமது மேடைகளிலும், ஆவணங்களிலும் உபயோகிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும். இந்த ஆவணத்தின்படி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கினாலோ அல்லது வெறுமே பெயருக்கு ஆவணத்தைத் திருத்திவிட்டு இதே மனப்பாங்குடன் தொடர்ந்து செயற்பட்டாலோ ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.