பயஸ் மாஸ்டர்

1970களில் தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு இணைந்து கொடி விட்ட பயஸ் மாஸ்டர் எனும் இன்னுமொரு கொடி சாய்ந்து விட்டது. திருகோணமலையிலும் யாழ்ப்பாண முற்றவெளியிலும் இலங்கையின் எதிர்காலம் குறிப்பாக தமிழர்களின் எதிர்காலம் பற்றி உரையாடியவைகள் ஒரு படம் போல் மனத்திரையில் ஓடுகின்றன. ஆழ்ந்த கவலைகள் நெஞ்சில். அமைதியாக உறங்கிடு நண்பா – அ. வரதராஜப்பெருமாள்

மரண அறிவித்தல்:-திரு.பயஸ் மாஸ்ரர் (சுமதி மாஸ்ரர்) பயஸ் அன்ரன் கிறிஸ்தோப்பர் அவர்கள் 07.08.2022ல், தென்ஆபிரிக்கா நாட்டில்-சுகயீனம் காரணமாக இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்ட இவர், எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராட்ட வழிகாட்டிகளில் ஒருவர். 1969ல் தென்னிலங்கை பல்கலைகழக மாணவராக நுழைந்தபோது , தென்னிலங்கையில் ஏற்பட்ட இடதுசாரிய முத்திரையுடன் ஏற்பட்ட சிங்கள இளைஞர்களின் சேகுவோரா புரட்சியின் தாக்கத்தாலும், புரட்சியை முன்னெடுத்த சில சிங்கள பல்கலைக்கழக இளைஞர்களின் தொடர்பாலும் ஈர்க்கப்பட்டு, பிற்காலத்தில் எமது தமிழ் தேசிய விடுதலை போராட்டத்திற்கும் ஆயுத போராட்டமே ஒரே வழியென தேர்ந்தெடுத்தார்.

இதனை இளைஞர்களை இடதுசாரி கொள்கையில் அணிதிரட்ட வழி தேடினார். இந் நிலையில் பல்கலைக்கழக பட்டதாரியாகிய நிலையில் 1976ம் ஆண்டு மட்டில், பட்டதாரி ஆசிரியராக முதல் முதலில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்தார். அங்கு அமரர் தங்கத்துரை எம்.பி அவர்களின் உதவியுடன் காலூன்றினார்.

அங்கிருந்தே இளைஞர்களை அரசியலை நோக்கி சிந்திக்க தூண்டினார்.தொடர்ந்து திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரிக்கு மாற்றலாகி வந்தநேரம்- ஜெயச்சந்திரன்(பார்த்தன்), ஜான் மாஸ்ரர்(காந்தன்),சார்ல்ஸ் அன்ரனி(சீலன்), றோஸ்மைக்கல், போன்ற துடிப்பான சில இளைஞர்கள் கல்வி பொதுதராதர சாதாரணம் மற்றும் உயர்தரம் என்ற நிலையில் கல்வி கற்றுவந்தனர்.

இந்நிலையில், இவ்வாறான இளைஞர்களை அடையாளம் கண்டு எமது விடுதலைப் பாதைக்கு இழுத்து வந்தவரும் இவரே. பிற்பட்ட காலங்களில் இவர் அடிக்கடி என்னுடன் உரையாடும் போது சொல்வார் ‘ தான் திருமலைக்கு வந்து முதலில் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் இருவரில்- ஒருவர் ஜெயச்சந்திரன் புளொட் இயக்கத்தின் முன்னிலைப் போராளியாகி – ராணுவ தளபதியாகி வீரமரணம் அடைந்தார். மற்றவர் சால்ஸ்அன்ரனி புலி இயக்கத்தின் முன்னிலைப் போராளியாகி,ராணுவ தளபதியாகி வீரமரணம் அடைந்தார்.

எனவே இவ்வாறான திறமைசாலிகளை கண்டுபிடித்து , விடுதலைக்கு இழுத்துவிட்ட எனக்கு இன்னும் எமது மக்களுக்கான போராட்டத்திற்கும், இவர்களின் தியாகங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என மனம் திறந்து பேசுவார். இவ்வாறாக எமக்கு தெரிந்த, இவரோடு நாம் பயணித்த, கடைசி காலங்கள்வரை இவரின் தொடர்புகளை பேணியவர்களில் நானும் ஒரு வரலாற்று சாட்சியாக உள்ளேன்.

மரணம்வரை இவர் தொடர்ந்த தொடர்புகளும், கல்வியும், அரசியல் சித்தாந்தங்களும் பல படிப்பினைக்கும் ஆய்விற்கும் உட்பட்டது. எமது தமிழ் தேசியத்திற்காக சிந்தித்து- செயலாற்றி- அணிதிரட்டி-வழிவகுத்து எமது போராட்டத்தை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர் 1980ற்கு பிற்பட்ட காலங்களில், தலைமறைவாகி, சேகுவோரா போல் சர்வதேச புரட்சியை தேடி நடைபோட்டு, தென்னாபிரிக்கா புரட்சிவரை தன்னை இணைத்துக் கொண்டவர்.

நாடுகள், நிறங்கள்,இனங்கள் மாறி வாழ்ந்தாலும், தான் பிறந்த மண்ணையும் மக்களையும், எம்மைப் போன்ற மாணவர்களையும், அபிமானிகளையும் என்றும் தொடர்பில் நிலைநிறுத்தி, எமது விடுதலை உணர்வுகளை மீட்டிக் கொண்டிருந்த எமது மதிப்பிற்குரிய, வரலாற்று நாயகன் இன்று எம்முடன் இல்லை.

எனினும் உங்கள் அத்திவாரமான ஆழமான வரலாறு நாம் உள்ளவரை எம்மோடு பயணிக்கும். சென்று வாருங்கள் பயஸ் மாஸ்ரர்……விடை அறியா விடை தருகின்றோம் சென்று வாருங்கள்!இவரின் இறுதி நிகழ்வுகள் தென்னாபிரிக்காவில், 12.08.2022 நடைபெறும்!இவரின் இழப்பு செய்திகள், அவரின் இரு பிள்ளைகளால் இவரின் தொலைபேசி இலக்கத்தினூடாக எம்மைப் போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதனை உங்களுடன் பகிர்கின்றோம்!

(ஜெ.ஜென்னி)