பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை பேய்க்காட்டும் எத்தனங்கள்

மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கமும் எதிரணி உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்புகளும் இந்த நெருக்கடியை கிட்டத்தட்ட புதினம் பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

அரசாங்கம் மக்களை மாட்டிவிட்டு கூத்தப் பார்க்கின்றது; எதிணி மக்களை கூட்டிவிட்டு கூத்துப் பார்த்தல் என்றும் சொல்லலாம்.

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, இறங்கிப் போனால் நாம் கட்டிவைத்த சாம்ராஜ்யம் உடைந்து விடுமே என்ற எகத்தாளத்தில் ராஜபக்‌ஷ அரசாங்கம் எந்தவொரு தெளிவான முடிவுக்கும் வராமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.

மறுபுறத்தில், எதிர்க்கட்சியும் கூட நிபந்தனைகளை முன்வைத்துக் கொண்டு, தமக்கான சாதக நிலை பற்றிச் சிந்தித்துக் கொண்டு, எந்த மாற்றத்திற்கும் முன்னிற்காமல் நழுவல் போக்கை கடைப்பிடிப்பதை காண முடிகின்றது.

ஆக மொத்தத்தில், அரசாங்கமும் சரி எதிரணியும் சரி நிகழ்கால நெருக்கடிகளை நாட்டு மக்களின் தலையில் கட்டிவிட்டு, தமது அரசியல் எதிர்காலம் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்ற மனோநிலையையே இது வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

ஓட்டுமொத்த ராஜபக்‌ஷ குடும்பமும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே பொதுவாக நாட்டு மக்களின் விருப்பமாகும். இதனை அவர்கள் தௌ்ளத் தெளிவாக, வெளிப்படையாகவே சொல்லி விட்டனர். ஆனால், ராஜபக்‌ஷ அரசாங்கம் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத மாதிரி, தொடர்ந்தும் ஏதோ ஓர் அடிப்படையில் அதிகாரத்தில் இருக்க முயற்சிக்கின்றனர்.

அரசியல்வாதிகள், வெட்கம் கெட்டவர்கள் என்பது உலகறிந்த விடயம்தான். ஆனால், இந்தளவுக்கு அவர்கள் வெட்கம் கெட்ட ராசாக்கள் என்பதற்கு இந்த அரசாங்கம் மட்டுமன்றி எதிர்க்கட்சியும் கூட நல்ல உதாரணங்களாகும். 

‘ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில், ஆரம்பத்தில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில், 20ஆவது திருத்தம் உள்ளடங்கலாக நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, கோட்டாபய எடுத்த அல்லது பசிலின் கதையைக் கேட்டு எடுக்கப்பட்ட தீர்க்கதரிசனமற்ற முடிவுகளே இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்துள்ளது என்பதாலாகும்.

இப்போது இடைக்கால அரசாங்கம் பற்றிய பேச்சுகள் மேலெழுந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலகியே தீர வேண்டும் என்ற குரல்கள் அரசியல் தரப்புகளில் இருந்து கடுமையாக முன்வைக்கப்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

ராஜபக்‌ஷ சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய மஹிந்த ராஜபக்‌ஷவை, அந்த சாம்ராஜ்யத்தை உடைத்து சுக்குநூறாக்கிய ஜனாதிபதி தரப்பு வெளியில் தூக்கி வீசுவது, அவ்வளவு இலகுவான காரியமல்ல. எதிர்காலத்தில் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற எண்ணம் கோட்டாபயவுக்கு உள்ளது.

மஹிந்தவை பதவி நீக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்,  தர்மசங்கடங்களின் காரணமாகவே இவ்விவகாரம் இழுபறிப்படுகின்றது. “நான் பதவி விலகமாட்டேன்” என்ற பிரதமர் கூற, “இதோ பிரதமர் பதவி விலகி, புதிய பிரதமர் பதவியேற்கவுள்ளார்” என்ற செய்திகள் மறுதரப்பில் இருந்து வெளியாகின்றன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

இது ஒரு நாடகமாகக் கூட இருக்கலாம். இதே விதமாகவே எதிர்க்கட்சிகளும் மக்களை பேய்க்காட்ட விளைகின்றன.

அந்த வகையில், ஜனாதிபதியையும் பிரதானமாகவும் ஏனைய ராஜபக்சக்களையும் வீட்டுக்குப் போகுமாறு மக்கள் ஆரம்பித்த போராட்டத்தை இன்று அரசியல் தரப்புக்கள் வேறு திசையில் நகர்த்த முற்படுகின்றதா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு குடும்பத்திலும் தோற்றம் பெற்றுள்ளது. நாட்டு மக்கள் தொடர்ந்தும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கெல்லாம் தீர்வு காணாத கோட்டாபய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து தொடர்ந்து போராடிக் கொண்டிக்கின்றனர். தமது வேலைகளை, குடும்பப் பிரச்சினைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, எதிர்காலம் பற்றிச் சிந்தித்து களமிறங்கியுள்ளனர்.

பொறுப்புள்ள, சுரணையுள்ள, மக்களின் இறைமையை மதிக்கின்ற அரசாங்கம் என்றால், கௌரவமாக பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், மத்திய கிழக்கின் தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் போலவே, ராஜபக்‌ஷர்களும் அகலக் கால்விரித்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே குட்டையில் இருந்து வேறு ஆட்களைத் தெரிவு செய்து, புதிய அமைச்சரவையை நியமிப்பது போன்ற முட்டாள்தனமான நகர்வுகளைச் செய்யாது, குறைந்தபட்சம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகளையாவது அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். அதனைக்கூட செய்யவில்லை என்பது மிக மோசமான நிலையாகும்.

மறுபுறத்தில், கனி வலியக் கனித்து பாலில் விழும் நேரத்திலாவது, கிண்ணத்தை கீழே பிடிக்காமல் காலத்தை வீணக்கிக் கொண்டிருக்கின்றது எதிர்க்கட்சி.

இந்த இலட்சணத்தில் எல்லாத் தரப்புகளுடனும் பேசி, வெற்றிகரமான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிரணி நிறைவேற்றுமா, அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இது, எதிரணியினர் உண்மையிலேயே இந்த நாட்டை ஆள்வதற்கு சரியான மாற்றுத் தெரிவா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. 

ஆகவே, விடாக் கண்டன்களாலும் கொடாக் கண்டன்களாலும் இடைக்கால அரசாங்கம் ஒன்றையேனும் அமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்தரப்புகள் தமது அரசியல் இருப்பு பற்றியே சிந்திப்பதையும் மக்கள் நலனை இரண்டாம் பட்சமாகவே நோக்குகின்றன என்பதையும் மக்கள் அறியாமலில்லை.

இந்த பின்னணயில், 21ஆவது திருத்தத்தை கொண்டு வருதல் பற்றிப் பேசப்படுகின்றது. 19ஆவது திருத்ததின் ஊடாக தாம் கொண்டு வந்த நல்ல பல மாற்றங்களை மீண்டும் அறிமுகப்படுத்தும் ஒரு திருத்தமாக எதிர்க்கட்சி இதனைப் பார்க்கின்றது.

20ஆவது திருத்தத்தின் மூலம் அதிக அதிகாரம் வழங்கப்பட்டமை தவறு என்ற அடிப்படையில் அதனை வலுவிழக்கச் செய்யும் ஒரு திருத்தமாக 21 இனை கொண்டு வரப் போவதாக ஆளும் கட்சி கூறுகின்றது. அதாவது, ‘இத்தனை தவறுகளுக்கும் நாம் காரணமல்ல, சட்ட ஏற்பாடுதான்’ என்று சொல்ல முனைகின்றார்கள்.

ஆனால், ஆளும் மற்றும் எதிர்தரப்புகளின் மக்களின் நலனுக்காக இதய சுத்தியுடன் இவ்விடயத்தை கூறுவதாக யாரும் கண்மூடித்தனமாக நம்பத் தேவையில்லை. குறிப்பாக, ராஜபக்‌ஷ தரப்பு இதனை ஓர் உபாயமாகக் கையாளலாம் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதில் முதலாவது விடயம், நிகழ்கால நெருக்கடிகளைச் சமாளிப்பது. அல்லது இழுத்தடிப்பது.

இரண்டாவது விடயம் என்னவென்றால், இப்போதிருக்கின்ற சூழலில் மிகக் கிட்டிய காலத்தில் ராஜபக்‌ஷ குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான நிகழ்தகவுகள் குறைவாக காணப்படுகின்றன. இந்நிலையில், இத்துணை அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு வேறு ஒருவர் வந்தால் தமது நிலை என்னவாகும்  என்று ராஜபக்‌ஷவினர் சிந்திக்கலாம்.

அத்துடன் பிரதமராக வருவதற்கு ஒரு ‘வாரிசுக்கு’ சிறு வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற கணிப்பும் அவர்களுக்கு இருக்கலாம். 21ஆவது திருத்தத்த்தை கொண்டு வருவதற்குப் பின்னால் இத்தகைய சூட்சுமங்களும் உள்ளன என்பதே நோக்கர்களின் கருத்தாகவுள்ளது.

எது எப்படியிருப்பினும், பொதுவாக நாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை என்பதும், நாட்டின் பொருளாதார நிலைமைகளை மீளக் கட்டியெழுப்ப நம்பத்தகுந்த விரைவுத் திட்டங்கள் வகுக்கபடவில்லை என்பதையும் இப்பத்தி அழுத்தமாக உரைக்க விளைகின்றது.

இன்று உரத்துப் பேசுகின்ற எதிர்தரப்பு அரசியல் கட்சிகளும் இதே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். நாட்டின் இந்த நிலைக்கு அவர்களுக்கும் பங்கிருக்கின்றது. இப்போது அவர்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்குப் பின்னால் மறைமுக நிகழ்ச்சி நிரல்களும் தமது எதிர்கால அரசியல் நலன்பற்றிய எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.

ஆனால், காலி முகத்திடல் உள்ளடங்கலாக நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இன மத பேதங்களுக்கு அப்பால் போராடுகின்ற சாதாரண மக்களுக்கு தமது வாழ்வும் இருப்பும் பிள்ளைகளின் எதிர்காலமும் பற்றிய கவலைகள்தான் இருக்கின்றன.

அதைவிடுத்து. அவர்களில் யாரும் அதிகாரத்தை தம்மிடம் தாருங்கள் என்று கூறவில்லை. இவர்களில் யாரும் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக, பிரதமராக போட்டியிடும் திட்டத்தோடு இருப்பவர்கள் என்று புத்தியுள்ள யாரும் கூறமாட்டார்கள்.

எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதே அரசாங்கத்தினது மட்டுமன்றி, எதிர்த்தரப்புக்களின்; அவசரமான முதற் கடமையாக இருக்க வேண்டும்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், 19 இனை மீள கொண்டு வருதல், 20 இனை இல்லாதொழித்தல், 21 ஆவது திருத்த உள்ளடக்கங்கள் எல்லாம் நீண்டகால அடிப்படையிலேயே பயனளிக்கக் கூடியவையாகும்.

இந்தச் சட்ட ஏற்பாடுகளை ஒருவாரத்திற்குள் கொண்டு வரவும் முடியாது. அப்படி நிறைவேற்றி இரு வாரங்களுக்குள் இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி மக்கள் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முடியாது.

யதார்த்தம் இப்படியிருக்க, மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் வேறு வேறு கோணங்களில் திருப்பிவிட்டு, இன்னும் மக்களின் வாழ்க்கையை படுகுழிக்குள் தள்ளும் பாங்கிலான எத்தனங்களை ராஜபக்‌ஷர்களும் எதிரணியினரும் தவிர்த்துக் கொள்வது எல்லோருக்கும் நல்லது.