பிரிட்டனை எங்கே கொண்டுபோய் விடுவார் போரிஸ் ஜான்ஸன்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற 27 நாடுகளையும் வெறுக்கத்தக்க எதிரிகளாகவும், அவையெல்லாம் பிரிட்டனின் இறையாண்மையைக் கீழிறக்கிவிட்டவையாகவும் போரிஸ் ஜான்ஸன் வெகுகாலம் கூறிவந்தார். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் பிரிட்டனுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பைப் பற்றி பன்னாட்டு நிதியம் உள்ளிட்டோர் கூறுவதையெல்லாம் அவர் பொருட்படுத்தியதே இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு எந்த நிபந்தனைக்கும் உட்பட முடியாது என்று அப்போது உறுதியாக நின்றார் முந்தைய பிரதமர் தெரஸா மே. நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றால் தெரஸா தனது நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்க நேர்ந்தது. தற்போது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரஸாவை விட போரிஸ் ஜான்ஸனின் நிலை மிகவும் ஆபத்தானதாகவே இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பதுபோல் ஆகஸ்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் டோரிகள் தோல்வியடைந்தால் போரிஸ் ஜான்ஸனின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும்.

எதிரெதிர் துருவங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கும் அவைக்கு இந்தக் கணக்குகளெல்லாம் மிகவும் முக்கியமானவை. மூன்றாவது முறையாக பிரெக்ஸிட் தள்ளிப்போடப்படுமானால் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள கடும் நிலைப்பாட்டாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த ஒப்பந்தத்தைப் பற்றிய மறுபேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் சொல்லிவிட்டதால் அக்டோபர் 31-ல் பிரெக்ஸிட் நிகழ்வதற்கு சாத்தியம் இல்லாததுபோல்தான் தெரிகிறது.

கன்ஸர்வேட்டிவ்களுக்கிடையே உள்ள குறுகலான பார்வை கொண்ட அதிதீவிர தேசியவாதிகளின் விருப்பத்துக்கேற்ப போரிஸ் ஜான்ஸன் நடந்துகொண்டால் அதிக இழப்பு பிரிட்டனுக்குதான் ஏற்படும். மேலும், பல நாடுகள் தொடர்புடைய ஒரு உறவை – குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிதைக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றியம் எனும் உறவைக் கையாள்வதில் பிரிட்டன் கூடுதலான அக்கறையைக் காட்ட வேண்டும்.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இரண்டு பக்கத்திலும் உள்ள நாடுகளான பிரிட்டனும் அமெரிக்காவும் தனித்துவமான உறவைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த நாடுகள் மேலதிகமான சர்வதேசியப் பார்வை கொண்டிருக்கவில்லை என்றால் அவர்களுக்கிடையிலான உறவுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அரசியல்ரீதியில் ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதை போரிஸ் ஜான்ஸன் தவிர்க்க வேண்டும். அதுதான் பிரிட்டனுக்கு நல்லது.

(The Hindu)