பிரித்தானியாவின் புதிய பிரதமர்-திரு பொரிஸ் ஜோன்ஸன்


இன்று கொன்சர்வேட்டிவ் பாட்டியின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்ட திரு பொரிஸ் ஜோன்ஸன் அவர்கள் நாளை (24.07.2019) மதியத்தின்பின் பிரதமர் பதவி ஏற்பார். பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாய நியதிகளின் நிமித்தம்,நாளைக்குப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் மதிய நேரம் நடக்கும் பிரதமர் கேள்வி நேரம் முடிந்ததும் தற்போதைய பிரதமர் திருமதி திரேசா மே தனது பிரதமார் பதவியைத் துறப்பதாக மேன்மை மிகுந்த எலிசபெத் மகாராணியிடம் தனது பதவி இராஜினாமா விடயத்தைக் கையளித்தததும் மேன்மை மிகுந்த மகாராணியார் திரு ஜோன்ஸன் அவர்களையழைத்துப் புதிய பிரதமராகப் பதவியேற்று நாட்டை நிர்வகிக்கச் சொல்வார்.இவர் பிரித்தானிய இராச்சியத்தின் 77வது பிரதமராகப் பதவி ஏற்பார்;.

இராஜிநாமா செய்யவிருக்கும் பிரதமர் திருமதி.திரெசா மே,அமெரிக்க ஜனாதிபதி டோனாலட் ட்ரம்ப்,ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் போன்றவர்கள் பிரதமர் பதவியேற்கும் திரு. ஜோன்ஸன் அவர்களுக்கு வாழ்த்துக்களையனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர் சில விடயங்களைத் தனது எதிர்காலத் திட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார். பிரக்ஷிட் பிரச்சினையால் சின்னாபின்னமாகச் சிதறிக்கிடக்கும் கொன்சர்வேட்டிவ் கட்சியை இவர் ஒன்றிணைத்து அடுத்து தேர்தலில் தொழிலாளர் கட்சிசார்பால் பிரதமர் வேட்பாளரான திரு. ஜெரமி கோர்பினை வெற்றி கொள்வார் என்றும் ஐரோப்பிய யுனியனிலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவார் என்றும் இவரின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே இம்மூன்று பெரிய விடயங்களையும் தனது ஆதரவாளர்களுக்குச் சொன்னார்.நான்காவது விடயமாக ஒன்றுபட்ட பிரித்தானியாவின் ஆளுமையை மேம்படுத்த வேண்டும் என்றும் சொன்னார்

ஆனால் பிரக்ஷிட் விடயத்தில் ஐரேப்பாவுடன் தொடர்புகளை முற்றாக முறிக்கும் கொள்கைகளுடைய இவரின் பதவியேற்பை எதிர்த்து இவரின் கட்சியிலுள்ள பல மந்திரிகள் இராஜினாமாக் கடிதங்களைக் கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் ஒரு பொதுத் தேர்தல் வைக்காமல் 0.25 விகிதப் பிரித்தானிய மக்களின் வாக்குகளுடன் பிரதமரானது ஜனநாயகத்திற்க எதிரானது என்று சிலர் சொல்கிறார்கள்.
‘அரசியல் கோமாளி’ என்று ஒருசிலரால் வர்ணிக்கப் படும் திரு ஜோன்ஸன் அவர்கள் ஒரு பன்முகத் தன்மையுள்ளவர் அதில் சில விடயங்கள் சிலருக்குப் பிடிக்காது.அதாவது பிரித்தானியப் பண்பாடுகளுடன் சேர்ந்த அரசியல் பாரம்பரியங்களை மீறி இவர் தான்தோன்றித் தனமாகச் சிலவிடயங்ளைச் செய்வதாகக் கூறுவோருமுண்டு.

திரு பொரிஸ் ஜோன்ஸன் அவர்கள் அவரின் பன்முகத் தன்மையான குணாதிசயங்கள் மாதிரியான குடும்ப அமைப்பையும் கொண்டவர்.19.6.1964ம் ஆண்டு பிரித்தானிய மத்தியதரக் குடும்பத் தாய் தகப்பனுக்கு நியுயோர்க் நகரிற் பிறந்தவர். இவரது தந்தைவழிப் பாரம்பரியம் துருக்கி, தாய்வழிப் பாரம்பரியம் ஆங்கிலோ-சுவிஸ் என்பதைக் கொண்டது.திரு பொரிஸின் கொள்ளுப் பாட்டன் துருக்கிய ஒட்டமான் ஏகாதிபத்தியத்தில்; அமைச்சராக இருந்த அலி கெமால் (1967-1922) என்பராகும்.இந்தக் கொள்ளுத் தாத்தா துருக்கியில் நடந்த உள்நாட்டுப் புரட்சியில் கொலை செய்யப்பட்டார்.இவரது தந்தை ஸரான்லி ஜோன்ஸன் ஐரோப்பிய பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்தவர் போரிஸ் இருதடவைகள் திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்டவர்.அத்துடன் சில காதலிகளையும் வைத்திருந்ததாகக் கதைகள் உண்டு 6 -7 பிள்ளைகள் உள்ளனர்.இப்போது செல்வி.காரி சிமோன்ட் என்ற பார்ட்னருடன் வாழ்கிறார்.இருவருக்கும் நடந்த குடும்பச் சண்டை காரணமாகப் பக்கத்து வீட்டுக்காரன் போலிசை அழைத்தது சில வாரங்களுக்கு முன் நடந்தது.

மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த இவர்,பிரித்தானிய ஐரோப்பிய பாடசாலைகளிற்படித்தவர்.பிரித்தானியாவின் உயர்மட்ட வர்க்கத்தின் பாடசாலையான ஈட்டனில் படித்தவர்.அந்தப் பாடசாலையில் படித்தவர்களில் இருபது மாணவர்கள் பிரித்தானிய பிரதமர் பதவியை வகித்திருக்கிறார்கள்.ஓக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி மாணவர் தலைவராக 1986ம் ஆண்டு செயற்பட்டார்.

இவர் பிரித்தானிய அரசியலில் நீண்ட கால ஈடுபாடுடடையவர். ஒக்ஸ்போர்ட் பட்டதாரியான இவர் ஒரு ஜேர்ணலிஸ்டாக வாழ்க்கையை ஆரம்பித்தவர்.வேலை செய்த இடத்தில் உண்மைக்கப்பால் ஒரு விடயத்தை எழுதியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்.அதன்பின் பல பத்திரிகைகளில் வேலைசெய்திருக்கிறார். 2001ம் ஆண்டு பாராளுமன்றம் சென்றார்.அதைத் தொடர்ந்து இவரின் வாய் வன்மையும் எப்போதும் மலர்ந்த முகமும் மக்களைக் கவர்ந்தது. லண்டனின் முடிசூடா மன்னன் என்றழைக்கப்பட்ட தொழிற்கடசி மேயரான திரு. கென் லிவிங்ஸ்டனைத் தோற்கடித்து 2008ம் ஆண்டு தொடக்கம் லண்டன் மாநகருக்கு இருதடவை மேயராகச் செயற்பட்டார். இவர்காலத்தில் லண்டன் நிர்வாகத்தில் மக்களுக்குப் பிடித்த சில விடயங்களைச் செய்தார். உதாரணமாக,பொது மக்கள் கார்களைத் தவிர்த்து சைக்கிள்கள் பாவிப்பது நல்லது என்ற பிரசாரத்தைச் செயற்படுத்தினாh.;

மீண்டும் பாராளுமன்றப் பிரதிநிதியாக வந்தவர் முக்கியமான பதவிகளை வகித்தார்.2016ம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பிரித்தானியாவுக்கு நல்லது என்று பிரசாரம் செய்தார்.2016-18வரை வெளிநாட்டுத்துறையின் பொறுப்பிலிருந்தார்.ஆனால் சில காரணங்களால் வேலையிலிருந்து 2018ம் ஆண்டு நீக்கப் பட்டார்.
பிரித்தானியாவை,ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒட்டுமொத்தமாகப் பிரித்தெடுப்பேன் என்ற சங்கற்பத்துடன் பிரதமாராகிறார். நான்கு நாடுகள் சேர்ந்த ஐக்கிய இராச்சியமான பிரித்தானியாவின் மற்ற மூன்று நாடுகளும் இவரது வருகையால் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களில் பெரும்பான்மையினர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வாக்களித்ததுபோல் ஸ்காட்லாந்து நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால்பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தால் அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்துபோகும் சாத்தியமும் உண்டாகலாம்.அத்துடன் இவர் ஸ்காட்லாந்துக்கு எதிரானவர் என்ற அபிப்பிராயமும் சிலருண்டு. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவது பிரித்தானியரின் இனவாதத்தை அடிப்படையாகக்கொண்டது என்று வாதிடுவோருமுண்டு.ஐரோப்பிய ஒன்றியத்திலிலுள்ள 27 நாடுகளுடன் ஒன்றாகவிருப்பதும் அந்த நாடுகளிலிருந்து பெருந்தொகையாக ஐரோப்பியர்கள் இங்கிலாந்தில் வந்து குவிந்ததும் உலகத்தைக் கட்டியாண்ட பிரித்தானியாவுக்குக் கவுரவக்குறைவாக இருக்கிறதா என்ற சிலர் கேள்வி கேட்கிறார்கள்.

தனக்குச் சரியானதென்ற நினைப்பதைச் சட்டென்று சொல்லும் திரு. போரிஸ் அவர்கள் ஒருவித்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் போன்று தனது வாயால் சிக்கலில் மாட்டிக்கொள்பவர். 2004ம் ஆண்டில் லிவர்ப்பூல் நகரைப் பற்றி ஏதோ எழுதி அந்த நகர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டவர். அண்மையில் ஹியாப் அணியும் முஸ்லிம் பெண்களைப், ‘போஸ்ட் பொக்ஸஸ்’என்று சொல்லிப் பிரச்சினையில் மாட்டுப் பட்டுக்கொண்டவர்.

எட்டு ஆண்டுகள் லண்டன் மாநகரத் தலைவராக இருந்த அனுபவம் கொண்டவர்.இன்று கொன்சர்வேட்டிவ் கடசியைச் சேர்ந்த 92.153 அங்கத்தவர்களின் வாக்குகள் மூலம் பிரித்தானியாவின் பிரமதராக வருபவர், பிரித்தானியாவின் 66.கோடி மக்களின் பிரச்சினையையும் எப்படிக் கையாளப்போகிறார்? 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் என்னவென்று பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்? 193 நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்துவ நாடான இங்கிலாந்தின் தலைவராக என்னவென்று செயற்படப் மேன்மை மிகுந்த போகிறார்? 53 நாடுகள் கொண்ட கொமன்வெல்த் நாடுகளின் முக்கிய அங்கத்தவராக என்ன வென்று தனது ஆளுமையைக் காட்டுவார் என்ற விடயங்களை இனித்தான் பார்க்கவேண்டும்.