போரில் இறந்தவர்களை நினைவு கூருதல்

சுமார் 11,000 புலிப் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி குறிப்பிடத்தக்கவர். இவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்த அரசாங்கம் பின்னர் அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைத்தது. ஆனால் விந்தையான விடயம் என்னவெனில், இந்த முன்னாள் போராளிகளை தமிழ் சமூகம் இன்னமும் சரியான முறையில் ஏற்று அங்கீகரிக்காததுதான். இதிலிருந்தே தமிழ் மக்கள் புலிகளின் தமிழீழப் போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கவில்லை என்பது புலனாகின்றது.

அதேநேரம், இந்த இறுதி யுத்தத்தில் இடையில் அகப்பட்டு குறிப்பிடத்தக்களவு பொதுமக்களும் உயிரிழந்தனர். புலிகள் இந்த மக்களை தமது மனிதக் கேடயமாக முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் செல்லாது விட்டிருந்தால் இந்த மக்கள் அநியாயமாக இறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் புலிகளின் கட்டளையை மீறி மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடி வந்ததால் அவர்களது உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. அப்படி ஓடி வந்த மக்கள் மீதும் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பலரைக் கொன்றிருக்கிறார்கள்.

இது தவிர காயம் பட்டிருந்த தமது போராளிகளை பஸ்களில் ஏற்றிச்சென்று மறைவான இடங்களில் பஸ்சுடன் சேர்த்து குண்டு வைத்துக் கொன்றதாக நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவைகள் பற்றி யாரும் பேசுவதில்லை. மனித உரிமை பேசும் அமைப்புகள் எப்பொழுதும் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பதும், தமது எஜமானின் சொல்படி ஆடுவதுமே வழமை.

போர் முடிவுற்ற பின்னர் வருடாவருடம் மே 18ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்காhல் நினைவேந்தல் தினம்’ என சில தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் தாம் இழந்த தமது அன்புக்குரியவர்களைக் கொண்டாடுவதில் தவறில்லை. அது அவர்களது உரிமை. பகிரங்கத்தில் அவர்கள் அப்படிச் செய்வதை தடுத்தாலும் அவர்கள் தமது மனதுக்குள் இறந்தவர்களுக்காகப் பிரார்த்திப்பதை யாரும் தடுத்துவிட முடியாது.

ஆனால் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் இந்த நினைவுகூரலைச் செய்பவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் ஆதரவாளர்கள். அவர்கள் இறந்தவர்களுக்காக உண்மையான அஞ்சலி செலுத்துவதை விட, இந்த மரணங்களின் நினைவுகளைக் கிண்டிக்கிளறி திரும்பவும் தமிழ் மக்களின் மனங்களில் யுத்த உணர்வுகளை ஊட்டலாமா எனப் பார்க்கின்றனர்.

ஆனால் இத்தகையவர்கள் இறுதி யுத்த நேரத்தில் யுத்தத்தை நிறுத்தி இழப்புகளைத் தவிர்க்கும்படி புலிகளிடம் கோரவில்லை. அதனால் எப்பொழுதுமே புத்திசாதுரியமற்ற வேலைகளைச் செய்வதில் பெயர்பெற்ற புலிகளின் தலைமை தாம் போரில் நிச்சயமாகத் தோற்போம் என்று தெரிந்த பின்னரும் தற்கொலை செய்வது போல தொடர்ந்து போரில் ஈடுபட்டு அப்பாவிப் பொதுமக்களையும் தமது போராளிகளையும் அழிவுக்குள்ளாக்கினார்கள்.

இந்த அழிவுகளுக்கு அரசாங்கத்தை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. முதலில் குற்றம் சுமத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் தலைமைகளே. அவர்கள்தான் நிறைவேற்ற முடியாத விடயம் எனத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி ‘தமிழீழ’ பிரகடனம் செய்தவர்கள். அவர்களால் தூண்டிவிடப்பட்ட இளைஞர்கள் திரும்பிவர முடியாத பாதையில் பயணித்து மரணத்தைத் தழுவிக் கொண்டனர்.

இரா.சம்பந்தன் தலைமையிலான இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதி யுத்த நேரத்தில் யுத்தத்தை நிறுத்தும்படி இலங்கை அரசையோ, புலிகளையோ, ஐ.நாவையோ, இந்தியாவையோ வலியுறுத்தவில்லை. இன்று சுமந்திரன் புலிகளைப் பற்றிச் சொல்வதைப் பார்க்கையிலும், அதை சம்பந்தன் ஆதரித்து அறிக்கை விடுவதைப் பார்க்கையிலும், புலிகளை அரசாங்கம் அழிப்பதைப் பார்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை உள்ளுர மகிழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

கடைசி யுத்த நேரத்தில் மட்டுமின்றி, இந்த 27 வருட யுத்தகாலம் முழுவதும் கொல்லப்பட்ட ஏதுமறியாத தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் அனுதாபத்துக்குரியவர்கள், அஞ்சலிக்குரியவர்கள்.

ஆனால் ஒரேயொரு ஆறுதல் என்னவெனில், பல உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் இறுதியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகும். அப்படி முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் யுத்தம் தொடர்ந்திருந்தால், இந்த 11 வருட காலத்தில் குறைந்தது மேலுமொரு 2 இலட்சம் மக்களாவது கொல்லப்பட்டிருப்பர். மிகுதி மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருப்பர்.