மட்டக்களப்பு மரணங்கள் மற்றவர்களுக்கானது அல்ல…..! அது எமக்கானதும்தான்….!!

இவை உணர்வுகள் மட்டும் அல்ல இவை உண்மை சம்பங்கள் என்பதை நேற்றும் நிரூபித்த நிகழ்வுதான் நுவரேலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி விடுமுறையில் சுற்றுலா சென்று திரும்பி; கொண்டிருந்த உறவுகளை வாகன விபத்தில் பலி கொண்ட சம்பவம். மூன்று குடும்பத்து உறவுகளை ‘மொத்தமாக’ காவுகொண்ட நிகழ்வு.

வருந்துகின்றோம்… அவர்களின் உறவுகளாக நாமும் இந்த துன்ப நிகழ்வில் மூழ்கியிருக்கின்றோம்.
தேநீர் அருந்த கடையொன்றில் ஓரம் கட்டிவிட்டு அருந்தலின் பின்பு புறப்பட்ட சில கணங்களில் நடைபெற்ற நேருக்கு நேர் மோதல் என்பதில் வீதியிற்கு தேநீர் கடையில் இருந்து பிரவேசிக்க முற்பட்ட வாகனம் ‘காத்திருந்து” வீதியுடன் இணையாமல் அவசரத்தில் இணைந்த வாகனச் சாரதியின் பொறுப்பற்ற தன்மையை இந்த விபத்து பொதுப் பார்வையில் எடுத்துக் கூறி நின்றாலும் உண்மையை என்ன என்பது அறத்தின் பக்கம் நின்று விசார்த்தால் மட்டுமே அறிய முடியும்.

பிரதான வீதியிற்குள் நுழையும் போது தரித்து நின்று அவதானித்து நிதானமாக போதுமான இடைவெளி உள்ள போது பிரதான வீதியில் இணைத்தல் எதிர் எதிராக பயணிக்கும் போது வேகத்தை குறைத்து இடைவெளி வழங்கி கடந்து செல்லல் ஒரே திசையில் பயணிக்கும் போதும் அவ்வாறே வாகனத்தை செலுத்தல் என்ற பொதுவான வாகனச் செலுத்தல் சுய கட்டுப்பாடுகள் ‘இந்த” ஓட்டம் சரியல்லை என்று பார்க்கும் விறுமத்தனமான பார்வை சாரதிகளை உசுப்பேத்தி பலரையும் இல்லாமல் செய்யும் செயற்பாடுகளையே செய்யும் என்பதற்கான சாட்சியங்களே இலங்கையின் விபத்துக்கான மனநிலைக் காரணி. மது அல்லது போதை தரும் பொருட்களை பாவித்து வாகனம் ஓட்டுதல் போட்டிக்கு ஓடுதல் தரமற்ற வாகனங்களை பாவித்தல் என்பன இங்கு கணிசமான விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.

மேற்குலக நாடுகளில் ஓரிடத்தில் இருந்து மறு இடம் வாகனத்தை ஓட்டி பயணிக்கும் போது பாதுகாப்பாக சென்றடைதல் என்ற உணர்வே மேலோங்கிநிற்கும். விரைவில் சென்றடைதல் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கும். இலங்கை போன்ற நாடுகளில் இவ்விடயம் பின்தள்ளப்பட்டு எவ்வளவு வேகமாக செல்லுதல் என்பது முன்னிலை பெற்று பாதுகாப்பாக வாகனத்தை செலுத்துதல் என்பது இரண்டாம் பட்சமாக்கப்படுகின்றது என்பதை நான் இலங்கையில் பயணிக்கும் போது அனுபவத்தால் உணர்ந்து கொண்ட மரணப் பயணங்கள் அவை. நான் பெரும் பாலும் பொதுப் போக்குவரத்தை பாவிப்பது ‘ஓரளவிற்கு” பாதுகாப்பானது என்பதையும் நான் உணர்ந்தேன்.

இனிவரும் காலங்களலாவது நாம் ஒவ்வொருவரும் இலங்கை போன்ற நாடுகளில் பயணிக்கும் போது பாதுகாப்பாக சென்றடைதல் என்பதை முன்னிறுத்தி விரைவாக சென்றடைதல் என்பதை இரண்டாம் பட்சமாக்கும் மனநிலையிற்கு எம்மை மாற்றிக் கொள்வோம். இதுதான் நாம் மட்டக்களப்பு உறவுகளின் வாகன விபத்து மரணங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். நாம் இவற்றை கவனத்தில் எடுத்து செயற்படாவிட்டால் நமக்கும் யாராவது அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை நாம் தவிர்க்க முடியாமல் போய்விடும்