மனித நேயம்.. ஐக்கியம்… பன்முகத்தன்மை.. இவையே எமக்கு முக்கியம்

இந்த மனித நேயமும், ஐக்கியமும் அற்று அல்லது குறைந்து போகும் போது வெறுப்புக்களும்…சகோதரத்துவமற்ற தன்மைகளும்… சண்டைகளும்… யுத்தங்களும் இதனால் ஆனா அழிவுகளும் துன்பங்களும் இழப்புகளும் ஏற்படுகின்றன.

மேற்கூறிய செயற்பாடுகள் உயிரினங்களால் தமக்குள் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகளை எதிர் கொள்வதற்கு மட்டும் அல்ல இயற்கை தனது சம நிலையை குழப்பும்…. குழம்பும் போது ஏற்படும் சீற்றங்களில் இருந்து மனித குலம் தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த ஐக்கியமும் மனித நேயமும் அவசியம் ஆகின்றது.

இதனை சுனாமி, நில அதிர்வு, பெரும் காற்று, பெரு வெள்ளம், வறட்சி, உணவுப் பற்றாக் குறை, வறுமை, பெரும் தொற்று நோய் என்று எல்லாவற்றையும் மனிதன் இணைந்து செயற்பட்டே இந்தப் பேரிடரை எதிர் கொண்டு வென்று இருக்கின்றான் வென்றும் வருகின்றான். இங்கு யாரும் தனித்து நின்று வென்றதாக வரலாறு இல்லை அது சமூக விஞ்ஞானத்திலும் இல்லை.

அதனை இன்று முன்பு எப்போதையும் விட கொரனா என்றும் பெரும் தொற்று பேரிடர்…. வெள்ளப் பேரிடர் காலத்தில் நாம் உலகம் எங்கும் காண்கின்றோம்.

இந்த பெரும் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான செயற்பாட்டில் பன்முகத் தலமை.. ஏகபோகத்தை நிலை நாட்டாத அணுகு முறைஇ மனித நேயம் போன்றவை இன்று தொற்றுகள் குறைந்து வருவதாக இருப்பதுவும் மரணங்கள் குறைந்து செல்வதும் இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் இன்றுவரை மனித குலம் கண்டுவரும் வெற்றியாகவும் அமைகின்றன.

எனவே ஐக்கியப்பட்ட செயற்பாடு ஏகபோக தலமை அற்ற சிந்தனை தலமைத்துவம் மனித நேயம் என்பன மனித வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமாகின்றது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அது இயற்கை பேரிடரை சந்திப்பதாக இருக்கலாம் மனித உரிமைகளுக்காக போராடுவதாக இருக்கலாம் பெரும் தொற்றுப் பேரிடரை எதிர் கொள்வதாக இருக்கலாம் எங்கும் இது பொருந்தியே இருக்கின்றது.

ஒவ்வொரு மனிதருக்கும் தன் பிறப்பு சார்ந்த பெருமை அடையாளம் அது மொழியாக இருக்கலாம்இ நாடாக இருக்கலாம், இனமாக இருக்கலாம், மதமாக இருக்கலாம் இருப்பது இயல்பானது. அந்த வகையில், தான் சார்ந்த இவைகளை அதிகம் நேசிப்பதுவும் அவற்றை செழுமைப்படுத்தி வளர்த்தெடுப்பதிலும் தொடர்ந்தும் அதனை இவ் உலகில் நிறுவி நிற்பதிலும் அக்கறை உடையவனாக இருப்பான். அதற்காக போராடுவான்.

இதன் அர்த்தம் தனது இனம், மொழி, மதம், நாடு என்பவற்றிற்கு அப்பால் ஏனைய இனம், மொழி, மதம், நாடு என்பனவற்றை வெறுப்பவனாக இருக்க முடியாது. அவர்களையும் நேசித்து அரவணைத்து ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தி சகோதரத்துவத்துடன் பயணிப்பதே மனித குல வெற்றிக்கு உறுதுணையாக.. வெற்றியாக… அமையும். இது வரலாறு எமக்கு கூறி நிற்கும் உண்மைகள்.

இந்த வகையில் இலங்கையில் பல் தேசியங்கள் வாழும் சூழலில் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாக தமிழ் பேசும் மக்கள் உள்ளாக்கப்படும் போது இதற்கெதிராக கிளர்ந்து எழுந்த இளைஞர்கள் அவர்களை வழி நடத்திய தலைவர்கள் என்று பலரும் உருவாகினர். இதில் சிலர் மரணித்தும் விட்டனர்.

இலங்கையில் உள்ள ஏனைய சிறுபான்மை இனங்களையும் அணைத்து இணைத்து ஐக்கியப்பட்டு அவர்களின் தனித் தன்மைகளையும் பேணி தான் சார்ந்த இனத்திற்குள் ஒரு ஒடுக்குமுறை அற்ற சமூகத்தை உருவாக்க புறப்பட்ட விடுதலை அமைப்பின் பிதாமகன்தான் தோழர் பத்மநாபா.

இன்று அவரின் பிறந்த தினம்

1980 களின் பின்பு பிறந்த பலராலும் அறிப்படாத அல்லது மறைக்கப்பட்ட தோழராக… போராளியாக… மக்களில் ஒருவராக… செயற்பட்டு கொல்லப்பட்டார். நான் மேற்கூறிய மனித குலத்தின் மீட்சிக்கான அனைத்தையும் தனக்குள் உள்வாங்கி செயற்பட்டவர் இவர்.

எவ்வாறு இளம் வயதில் வேற்று நாட்டில் அவரால் நேசிக்கப்பட்ட.. நம்பப்பட்ட.. உதவியை பெற்றுக் கொண்டு கால்நடை மேய்பாளர் செகுவேரா இன் மரணத்திற்கான ஊற்றுவாய் அமைந்ததோ அதே போலவே இளம் வயதில் வேற்று நாட்டில் தமிழ் நாட்டிற்கு அகதியாக கல்வி கற்க வந்த பணம் அற்ற மாணவன் ஒருவனை நம்பி உதவிகளும் செய்து உணவும் அளிக்கப்பட்டு வந்த ஒருவரால் காட்டிக் கொடுக்கப்படவே தோழர் நாபாவும் கொல்லப்பட்டார் என்ற வரலாற்று ஒற்றுமையை இவ்விடத்தில் பதிவு செய்தாக வேண்டும்.

தோழர் பிடல் காஸ்ரோ செகுவேரா இன் இணைந்த கியூப புரட்சியும் இன்று வரை நிமிர்ந்து நிற்கும் மனித நேய செயற்பாடுகளும் செகுவேரா பொலிவியாவில் எதிர் புரட்சிகர சக்திகளால் கொல்லப்பட்டாலும் பிடலின் உயர்வாழ்தல் செகுவேராவை இன்ற மக்கள் மனதில் ஆசனம் போட்டு இருக்க வைத்திருக்கின்றது.

அப்படியான பிடல் மாதிரியான மனநிலையில் இருந்தே இதனை எழுதுகின்றேன்.

பிடல் போல் ஒரு விடுதலை பெற்ற தேசத்தின் தலைவர்கள் எம்மிடம் இருந்திருந்தால் இன்று தோழர் நாபாவும் சேகுவேரா மாதிரியாக உலக மக்களால் நான்கு அறியப்பட்ட ஈழ விடுதலைப் போராளியாக பார்க்கப்பட்டிருப்பார் இதனை அவரை கொன்றவர்கள் ஏன் இவரின் மனித நேயச் செயற்பாட்டிற்கு எதிரானவர்களும் ஏற்றுக் கொள்வார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அப்பால் முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் என்ற ஏனைய சிறுபான்மை மக்களிடையே அதிக அரசியல் செயற்பாடுகளையும், சகோதரத்துவத்தையும், இணைப்பையும் ஐக்கிய முன்னணிiயும் கொண்டிருந்து ஒரே போராளியாக தலைவராக இவரே இருந்தார்.

இதற்கும் அப்பால் எமது போராட்டித்திற்கான ஆதரவுத் தளத்தை சிங்கள மக்கள் மத்தியிலும் விஸ்தரித்து உறவுகளை உருவாக்கி அவர்களையும் இணைத்து செயற்படுத்தி மக்கள் நேசாளன் தோழர் நாபா.

இதனை அவருடன் பயணித்த நான் கூறுவதை விட பல தளங்களிலும் உள்ள பல்வேறு ஆய்வாளர்கள், புத்தி ஜீவிகள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்களிடம் நாம் அறிய முடியும்.

இதற்கு அப்பால் பல்வேறு கருத்துக்களைக் கொண்டு இந்தியத் தமிழ் நாடு அளவிலான அரசியற் செயற்பாட்டாளர்கள், கட்சிகள்இ தனி நபர்களுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை உடையவர்களிடம் இதனை அறிந்து கொள்ள முடியும்.

இவர்களில் சிலர் பிற்காலத்தில் தமது அரசியல் செயற்பாடுகள், நிலைப்பாட்டை மாற்றி இருந்தாலும் இந்த பத்மநாபா என்ற ஒற்றை மனிதரை இன்றுவரை சிறப்பாகவே எடுத்துரைப்பர்.

நாற்பது வயதை அடைய முன்பே செகுவேரா போல் வேற்று நாட்டில் கொல்லப்பட்ட தோழரின் பிறந்த தினத்தை இன்று நினைவு கூர்வோம்.

அவரின் மனித நேயம், ஐக்கியப்பட்ட செயற்பாடு, சர்வ தேசியவாதியாக செயற்பட்ட உலகின் பல்வேறு விடுதலை அமைப்புகளுடான செயற்பாடு, இலங்கையின் சகல இன மக்களையும் நேசித்த தன்மை, பன்முகப்படுத்தப்பட்ட தலமையை எற்றுச் செயற்படுதல், முக்கியமாக சகோதர யுத்தத்தை தவிர்த்தல் என்பனவற்றை கனவுகளாக கொண்டு செயற்படுவதே அவருக்கு நாம் செலுத்தும் நினைவாக இருக்கும்.

இவர் காலத்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் இருந்த ஐந்து அமைச்சர்களையும் ஒருவர் முஸ்லீம், ஒருவர் சிங்களவர் ஏனைய மூவர் தமிழர்கள் அதுவும் வடக்கு கிழக்கு என்று பிரதேச பிரிநிதித்துவத்வை கொண்டு உருவாக்கி முதல் அமைச்சர் பதவியை தான் ஏற்றுக் கொள்ளாமல் இன்னொரு தகுதியானவரிடம் ஒப்படைத்து செயற்பட்ட பதவிகளை விட மக்கள் நலனில் அதிகம் அக்கறையுடைய அவரின் செயற்பாடுகளை இன்று நினைவு கூர்வோம்.

ஐக்கிய முன்னணியின் பிதாமன், மனி நேயத்தின் விளைநிலம் பன் முகத்தன்மையின் அடையாளம் சர்வதேசியவாதியாக வாழ்ந்தவர், விளிம்பு நிலை மக்களின் தலமைத்துவத்தை உருவாக்க போராடியவர் மக்களுக்காக மண்ணை நேசித்தவர் இந்த மக்களுக்காகவே தன் உயிரை துறந்தவர் தோழர் நாபா.

மனித நேயத்தின் விளை நிலம் என்றால் அது தோழர் நாபாதான். பல்வேறு கருத்துடையவர்களையும் ஒரு நேர்கோட்டில் அல்லது சமாந்திரமாக பயணிக்க வைத்த இணைத்த ஐக்கிய முன்னணியை திம்பு பேச்சுவார்த்தை… இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அடிபடையிலான மகாண சபை என்பவற்றில் தமிழ் பேசும் மக்கள்

மத்தியில் இருந்த இயக்கங்கள் கட்சிகளை இணைப்பதில் தோழர் நாபா என்ற ‘ஒற்றை’ மனிதரால் முடிந்திருக்கின்றது.

மேலும் இதில் ஏனைய சகோதர தேசிய இனங்களையும் இணைத்து எனது போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை அமைத்தவர் தோழர் நாபா.

தோழமை தினம் கொண்டாடுவதன் நோக்கம் சமூக முன்னேற்றம்.. சமூக ஜனநாயகம்.. விளிம்பு நிலை மக்களின் தலமைத்துவம் போன்றவற்றின் அடிப்படையிலான ஐக்கிய முன்னணியை அமைத்து எதிர்காலத்தை நோக்கிய நகர்வாகவே இருக்க முடியும். அது தேர்தல் களமாக இருக்கலாம் இதற்கு அப்பால் உள்ள அரசியல் போராட்டமாக இருக்கலாம். இதுவே தோழமை தினத்தின் ‘தோழமை’ என்பதை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

நவம்பர் 19, 2021