மாடுகளையும் புண்ணாக்கிய விலையுயர்வு

அடுத்த வேளையை நினைப்பதற்குப் பதிலாக இந்தவேளை எவ்வாறு வயிற்றுக்கு ஆகாரத்தைத் தேடிக்கொள்வது என்பது, அடிமட்ட மக்களின் பிரச்சினைகளாக இருக்கிறது. ஒரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படாது, ஒவ்​வொருநாளும் புதுப்புது பிரச்சினைகளை மக்களின் தலைகளில் அரசாங்கம் சுமத்திக்கொண்​டே செல்கிறது.

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தாலேயே ஏனைய பொருள்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துவிடும். கூவியழைத்து விற்பனை செய்யும் பொருட்கள் முதல், குளிரூட்டப்பட்ட வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அத்தனை பொருட்களின் விலைகளும் எகிறிவிடும்.

ஒரு பொருளின் விலையைக் கூட ஞாபகத்தில் வைத்திருக்க முடியாத அளவுக்கு ஒவ்வொருநாளும் விலைகள் அதிகரித்துகொண்​டே செல்கின்றன. இதன்மூலம், சாதாரண மக்கள் மீது சுமைகளைச் சு​மத்தாத வகையில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எவையும் இவ்வரசாங்கத்திடம் இல்லையென்பது கண்கூடாகிறது.

இந்நிலையில், மீண்டுமொரு தடவை எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் விலைக் குளறுபடிகள் இருக்கத்தான் செய்கின்றன. எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படுமாயின், ஏனைய ​பொருட்களின் விலைகளை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

பால்மாவின் விலையால், சாதாரண மக்கள் பெரும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒரு வேளைகூட பால்தேநீரை குடிக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைமையையே அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல்களை நம்பியிருப்போரின் நிலை​மையை சொல்வதற்கு வார்த்தையே இல்லை. விலை அதிகரிப்புடன், தேநீர் கோப்பையின் அளவு குறைந்திருக்கிறது. விலைகளை அதிகரிக்க அனுமதியளிக்கும் அரசாங்கம், பொருள்களின் தரம், நிறை மற்றும் அளவு உள்ளிட்டவற்றையும் கண்காணிக்கவேண்டும்.

தீர்மானிக்கும் சக்தி, அரசாங்கத்துக்கு அப்பால் இருப்பதனால், பெயருக்காக மட்டுமே இவ்வரசாங்கம் இருக்கிறது என்பதை அரிசி விவகாரத்தில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்துள்ளது. இதற்கிடையில், மாடுகளை வளர்ப்போரின் மனங்களில் பாலை வார்ப்பதைப் போல, ஒரு லீற்றருக்கான கொள்வனவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு முன்னர், மறு கன்னத்தில் அறைந்தாற்போல, புண்ணாக்கின் விலையை அதிகரித்துள்ளது. இதனால், மாடு வளர்ப்பவர்கள் மாடாய் உழைத்துத் தேய்ந்து​போகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விலைகளை அதிகரித்து மனிதர்களின் மனங்களை புண்ணாக்கிய அரசாங்கம், புண்ணாக்கின் விலைகளை அதிகரித்து மாடுகளின் தீவனத்திலும் விளையாடி புண்ணாகிவிட்டது.