முற்போக்கு இலக்கியம் படைத்த டொமினிக் ஜீவா

அதிகம் நெருங்கிப் பழகும் வாய்புகள் கிடைக்காவிட்டாலும் மல்லிகையை நான் வாழ்ந்த கிராமத்து வாசிக சாலையிலும், பல்கலைக் கழக சூழலிலும் வாசிக்கும் வாய்புகளைக் கொண்டிருந்தமையினாலும் நான் நம்பும் கம்யூனிச சித்தாத்தின் வழியே பயணிக்கும் ஒரு மூத்த போராளி என்ற வகையிலும் டொமினிக் ஜீவாவுடன் நான் நெருங்கிப் பழகிய உணர்வையே பெற்றிருக்கின்றேன். யாழ் பல்கலைக் கழக சூழலில் சில தடவைகள் சந்தித்ததுவும் உண்டு.

முற்போக்கு இலக்கியங்களை படைத்தல் அதற்கான ஏற்புடமையை எற்படுத்தல் அதனை விடாப்பிடியாக தோற்றுப் போதலுக்குள் ஆளாகாமல் 40 வருடங்கள் கடந்தும் செயற்படுத்தல் என்பது சாதாரண விடயம் அல்ல. இதற்கான ஆதரவுத் தளம் சுருங்கியதாக தோற்றம் அளித்தாலும் உண்மையில் இலங்கை தமிழ் பேசும் சூழலிலும் ஏன் தமிழ் நாட்டிலும் இதற்கான தளங்கள் இருந்து கொண்டுதான் இருந்தன… இருக்கின்றன…

மல்லிகை தொடர்ந்தும் வெளிக் கொணர்ந்தவர். மல்லிகை பந்தல் பதிப்பகம் மூலம் பல நூல்களை வெளியிட்டவர். மல்லிகை இதழில் ஒவ்வொரு தடவையும் முன் அட்டையில் இலக்கிய கர்த்தாக்கள் படங்களை பிரசுரித்து எழுத்தாளர்களுக்கு மாண்பைக் கொடுத்தவர்.

யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு முறைப்படி இலக்கிய கலாநிதி பட்டம் கொடுத்திருக்க வேண்டும். பதிலாக பொருத்தமற்ற கௌரவ முதுமானி பட்டத்தையே வழங்க முன் வந்தது. அதனை அவர் நிராகரித்தார்.

யாழ் பல்கலைக கழகம் யாழ்ப்;பாண மேலாதிக்க சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்த போதிலும் தவிர்க்க முடியாத சூழலில் டொமிக் ஜீவாவிற்கு கௌரவப் பட்டம் அளிக்க முற்பட்டதை அவர் நிராகரித்து என்பது ஒரு ஒடுக்கு முறை சமூகத்திற்கு நீதி மறுக்கப்பட்டதற்கான எதிர்ப்புக் குரலாகவே என்னால் பார்க்க முடியுகின்றது.

டொமினிக் ஜீவா ஈழத்து முற்போக்கு இலக்கிய இதழியில் நிச்சயமாக சாதனையாளர்தான்;. இதனை ‘மல்லிகை’ எனும் சஞ்சிகையை 1966 ல் ஆரம்பித்து 2012 வரை தொடர்ந்து மாத சஞ்சிகையாக வெளிவந்தது சாட்சியமாக்கி நிற்கின்றது. இத்தனை வருட கால கட்டத்தில் 401 இதழ்களை வெளியிட்டுக் காட்டியவர்.

கம்யூனிஸ்ட் உலகின் மிக உன்னதமான போராளியாகவும் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையில் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் பரிசினை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் இதனை பெற்ற படைபாளி.

அந்த காலத்தில் யாழ் ராஜா தியேட்டருக்கு அருகில் செல்லுகின்ற ஒழுங்கையில் செயற்பட்டுக் கொண்டிருந்த ’மல்லிகை’ என்ற பெயர் பலகையை காணாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் கொழும்பிற்கு 1990 களின் பிற் கூற்றில் இடம் பெயரும் வரை அந்த பலகை அங்கேதான் இருந்தது.

பாடசாலை வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரின் கற்பித்தலில் உள்ள தவறை சுட்டிக் காட்டியதற்காக அந்த மாணவன் அவ் ஆசிரியரால் சாதிசொல்லி அவமானப்படுத்தப்படுகிறான். அந்தக் கணித கணக்கின் சரியான வடிவத்தை அவனே கரும் பலகையில் எழுதுகிறான். அவமானம் தாங்காது ஆசிரியர் அவனை மேலும் சாதி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

பின் அவர் சுமார் ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு பத்திரிகை ஆசிரியராக செயற்படுகின்றார். அப்போதும் அவரது சாதியைப் இழவுபடுத்தி அவருக்கும் பத்திரிகைக்கும் கடிதங்கள் வருகின்றன. இதுதான் இலங்கை தமிழ் சூழலில் உள்ள சாதிய ஒடுக்குமுறையின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம். அந்த மாணவனாக தோழர் டொமினிக் ஜீவா.

இந்திய சுதந்திரத்தின் பின்னரான 1948 ம் ஆண்டு தலைமறைவுப் போராளியாக கம்யூனிஸ்ட் மு. கார்த்திகேசன் வீட்டில் சில காலம் வாழ்ந்த தமிழ் நாடு கம்யூனிஸ்ட் ப. ஜீவானந்தம் அவர்களால் ஆகர்சிக்கப்பட்டு தனது பெயருடன் ஜீவா வை இணைத்து இன்று மல்லிகை சஞ்சிகையின் தந்தையாக ‘மல்லிகை ஜீவா’ என்று எம்மால் அறியப்படுகின்றார்.

வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை கொதி நிலைகளைக் கடந்து இந்த மல்லிகை தன் இலக்கியச் சிறகுகளை விரித்திருக்கிறது. மனிதனை மனிதன் இழிவு படுத்தும் இந்த உலகில் தடைகளை தகர்க்க எழுத்துக்களை ஆயுதமாக்கி போராட்ட களத்தை தைரியமாக எதிர்கொண்டவர் டொமினிக் ஜீவா.

பஞ்சமர் சமூகத்தின் மும் மூர்த்திகளான ஜீவா, டானியல், தெணியான் போன்றவர்களின் எழுத்துக்கள் காலத்தால் பேசப்படுகின்றன. எழுத முடிந்தவர்கள் எழுதலாம். அவர்கள் நிலைத்து நிற்பதா இல்லையா என்பதை வாசகன் தீர்மானிப்பான் என புதிய எழுத்தாளர்களுக்கு மல்லிகை களம் கொடுத்ததை இன்று பல எழுத்தாளர்கள் கூறி நிற்பதை நாம் காண முடியும்.

தோழர் டொமினிக் ஜீவா இன் என்னைக் கவர்ந்த அவரின் வரிகளாக

‘…..நான் வாழ்வை, வாழ்வின் உண்மையை நேர் நின்று நோக்கினேன். கண்களைக் கூசிக் குலுக்காமல் பார்த்தேன். கண்களால் கண்டதை, காதுகளால் கேட்டதை, மனத்தால் உணர்ந்து புரிந்து கொண்டவைகளை அச் சம்பவங்களை, கதைகளாக்கி உங்கள் மத்தியில் பாத்திர உருக் கொடுத்து நடமாட விட்டிருக்கிறேன். நான் வாழாத, நான் பார்க்காத உலகத்தைக் கருப் பொருளாக்கி, கதை செய்து உங்கள் முன்னால் உலவவிட்டு வேடிக்கை காட்டவில்லை.

அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை!

இதனையே நானும் என் எழுத்துகளில் கையாளுகின்றென்….”

நான் என் எழுத்துகளில் இதனையே கையாளுகின்றேன் என்பதில் ஜீவாவின் பல்கலைக் கழகத்தில் நேரடியாக கல்வி பயிலாத ஆனால் அவரின் மாணவனாக என்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.

சுதந்திரனில் தனது எழுத்து பயணத்தை ஆரம்பித்து மல்லிகை மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியராக இலக்கிய உலகில் கொடிகட்டி பறந்து தனது 94 ஆவது வயதில் மூப்பின் காரணமாக காலமானார் டொமினிக் ஜீவா.

ஒரு மனிதன்…. எழுத்தாளன் படைப்பாலே அதிக காலம் வாழ முடியும் என்பதை நாம் வாழும் காலத்தில் நிறுவி எம்முடன் இனியும் வாழப் போகின்றவர்தான் தோழர் டொமினிக் ஜீவா