முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்னான பத்து வருடங்கள்

முள்ளிவாய்க்கால் அழிவுடன் தமிழ் தேசிய அரச கட்டுமானமும், தமிழ் தேசிய இராணுவமும் அழிந்து போயிற்று. அது தன்னகத்தே முறையான மக்கள் கட்டமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்பது அதன் மிகப்பெரும் பலவீனம் என்பதை இங்கே குறித்துக்கொள்வோம். தமிழ் மக்களது தேசிய விருப்புகளும், உணர்வுகளும் நீறு பூத்த நெருப்பாக இன்னும் இருந்து வருகின்றன. கடந்த பத்து வருடங்களாக தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்காக சாதித்தது எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் மக்களுக்கு அரசியல் சாணக்கியம் என்னும் ஏமாற்று வித்தை காட்ட புறப்பட்டு, இறுதியில் இலங்கை இந்திய, மேற்குலக அரசுகளின் முகவர்களாக மாறி மக்களை அதலபாதாளத்தில் தள்ளியிருக்கிறார்கள். அதே நேரத்தில் புலிகளின் அழிவைப் பயன்படுத்தி புலம்பெயர் சூழ்நிலையில் தமிழ்தேசத்தின் சொத்துக்களை முடக்கி தனியார் உடைமையாக்கி அனுபவித்து வரும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதக் கூட்டமொன்று கடந்த பத்தாண்டுகளாக வெவ்வேறு வடிவில் மக்களை ஏமாற்றி வருகிறது. ​

இன்று இருக்கும் எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது தலைவர்களோ தமிழ் மக்களின் நலனுக்காக குரல்கொடுக்கும் சுயமான நிலையில் இல்லை. நாட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் இருக்கும் சக்திகளால் ஆட்டிப்படைக்கப்படும் வெறும் முகவர்களாக மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் போராட்டங்களை வைத்து விலை பேசுவது, போராட்டங்களை உள்வாங்கி நலிந்துபோக செய்வது, போராட்டங்களை காட்டிக்கொடுப்பது; நீதி விசாரணை, தீர்வுத்திட்டம் என்னும் இரு தளங்களையும் அர்த்தம் இல்லாமல் செய்வது என்னும் வகையில் பல விடயங்களில் இலங்கை அரசிற்கு பெரும் ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறார்கள். ​

குறைந்தபட்ச அதிகார மையங்களாக கிடைத்த வடக்கு கிழக்கு மாகாண சபைகள் வெறும் அரட்டை அரங்குகளாக மட்டுமே இருந்திருக்கின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களும், மக்கள் வாழும் பகுதிகளும் இருக்ககூடிய நிலையில், மக்களுக்கான திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை எப்படி பயன்படுதுவது என்னும் திட்டமில்லாமல், பெருமளவு நிதி திருப்பி அனுப்பப் படும் அபத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ​

நந்திக்கடலில் ஆயுதவழிப்போராட்டம் சங்கமம் ஆக்கப்பட்டதோடு, தமிழ் மக்களது நிலம் மற்றும் வளத்தின் மீதான உரிமை, தொழில் மற்றும் சிவில்,சமூக கட்டமைப்புகள் மீதான ஆளுமைகள் என்பன மிகவும் பலவீனமுற்று போயின. நலிவுற்ற தமிழ் மக்களின் இந்த தளங்களின் மீது சிங்கள, முஸ்லிம் மக்கள் பிரிவுகள் செல்வாக்கு செலுத்துகின்றன அல்லது செலுத்த விழைகின்றன.​

30 வருடகால தொடர் உரிமைப் போராட்டம் விட்டுசென்ற கொடுமையான வடுக்கள் வலிகளிலிருந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீளுவதற்கு இந்த பத்து வருட காலம் போதுமானதாக இல்லை. உறுதியான தலைமை அற்று, நம்பிக்கை இன்றி, அவர்களது சொந்த மக்கள் தவிர வேறு எந்த ஆதரவும் இன்றி, இராணுவ மற்றும் உளவு துறையின் கடும் பிடிக்குள் சிக்குண்டிருக்கும் எம்மக்கள், தமது உரிமைகள் பற்றி பேசுவதற்கும், போராடுவதற்கும் குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுத்திருந்தது. நில ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அரசியல் கைதிகள் அவலம், இராணுவ மயமாக்கல், தெரு ஓரங்களிலும் மலைகளிலும் புத்தர் சிலைகள் முளைப்பது, கோயில்கள் மீதான ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட போதை பொருள் வினியோகம், மக்களின் நிம்மதியை குலைக்கும் கிறீஸ்பூதம் மற்றும் ஆவாக்குழு , கடல் தொழில் பறிக்கப்படுவது, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மாவீரர் தின நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுமதி, வளங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்னும் பல தளங்களில் தமிழ் மக்களது உரிமை குரல்களும் மக்கள் போராட்டங்களும் படிப்படியாக எழுச்சி பெற்றன. ​

இத்துடன் தமிழ் மக்களின் குரல் அடங்கி ஒடுங்கிவிடும் என்று எதிர்பார்த்த அனைத்து பிரிவுகளுக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் புலம்பெயர் மற்றும் மலையக மக்களின் ஆதரவுடன் தமது போராட்ட குரலை ஒலிக்கத் தொடங்கினார்கள்.​

உரிமை, அபிவிருத்தி, நிவாரணம் என்னும் மூன்று தளங்களில் தமிழ் மக்களின் தேவைகளும் போராட்டங்களும் அமைந்திருக்கின்றன.தமிழ் தலைமைகள் முழுவதுமாக சோரம் போயிருக்க, சிவில் சமூக அமைப்புகள் பெரிதாக பலம் பெறாமல் இருக்கும் சூழ்நிலையிலும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் எமது மக்களின் தன்னம்பிக்கையையும், ஒற்றுமையையும், விடாமுயற்சியையுமே அடையாளம் காட்டி நிற்கின்றன. ​

அனைத்துதரப்பு போராளிகள் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,அங்க அவையங்களை இழந்தவர்கள், உறவுகளை இழந்த பிள்ளைகள் மற்றும் முதியோர் என்போர் எமது போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பெரும் பிரிவினராக இருக்கிறார்கள். புனர்வாழ்வு என்னும் வார்த்தையால் கேவலப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் போராளிகள் இன்னும் அரசின் கிடுக்குபிடியில் இருந்து வருகிறார்கள். தலைமையும் வழிகாட்டுதலும் இல்லாத தமிழ் சமூகம், போராட்ட அமைப்புகளின் சரிபிழைகளுக்கு அப்பால் உரிமைக்காக போராடிய வீரர்கள் என்னும் வகையில் இந்த போராளிகளை எமது சமூகம் பார்க்க தவறியுள்ளது. இலங்கை அரசிடம் சலுகை பெறுவதற்கு என ஒரு கூட்டமும், இலங்கை இந்திய அரசுகளின் பயன்பாட்டிற்கு என சிலரும் இந்த போராளிகளை அரசியல் என்னும் சதுரங்க ஆட்டத்தில் தவிக்க விட்டுள்ளனர். ​

பலவிதமான அரச அடிவருடிகளின் பின்னாலும் பலர் அன்னியமாக்கப்பட்டுள்ளனர். தொழில் வாய்ப்பு என்னும் வகையில் தமிழ் தலைமைகளின் கையாலாகா தனத்தை பயன்படுத்தி இலங்கை இராணுவம் CSD (Civil Security Department) தொழில் துறைக்குள் பலரை உள்வாங்கியுள்ளது. இது தமிழ் சமூகத்துள் இன்னுமொருவகை அன்னியமாக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கும் அரசின் ஒரு முயற்சி என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தொழில் வாய்ப்புகளிலும், உதவித்திட்டங்களிலும் போராளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வேலைத்திட்டங்கள் சமூக அக்கறை கொண்ட பிரிவுகளால் முன்னெடுக்கப்பட வேண்டும்.​

போரின் பெருந்துயரமான எமது பாதிக்கப்பட்ட மக்கள், புலம்பெயர் மக்கள் மற்றும் உள்ளூரில் இருக்கும் சில தேசிய உணர்வுள்ளவர்களின் ஆதரவில் ஏதோ சில உதவிகளை பெற்று வருகிறார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளில் பெரும் பகுதியினாரால் கைவிடப்பட்ட இந்த மக்கள் தமது சொந்த முயற்சியால் சிறு முன்னேற்றங்களை கண்டு வருகிறார்கள். ​

போர் வெற்றியின் மமதையில் இருந்த இலங்கை அரசு தமிழ் தேசத்தின் மீதான போரில் வெற்றி பெறுவதற்கு எந்த சக்திகள் உதவி புரிந்தனவோ அவர்களாலேயே இன்று ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. போரின் வெற்றியை கொண்டாடிய ராஜபக்ச அணியும், சிங்கள தேசமும் இன்று இந்திய, அமெரிக்க, சீன அரசுகளால் பந்தாடப்படுகிறன. பெளத்த-சிங்கள அரசு என்பது தமிழருக்கு எதிரான இனவாதம் என்னும் ஊட்டச்சத்தை அளித்து தான் சிங்கள மக்களை ஆண்டுவந்தது. ராஜபக்ச, ரணில்,மைத்திரி என்னும் அணிகளும் அவர்களின் சர்வதேச எஜமானர்களும் இன்று இலங்கை தீவையும் சிங்கள தேசத்தையும் விற்றுக்கொண்டிருப்பது மட்டுமல்ல, ஒரு கலவர பூமியாக மாற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு துணை நிற்கிறார்கள். மேற்குலக மூலதனம், ஆசிய மூலதனம் என்னும் இரு ஆதிக்க மூலதனங்களின் போட்டியில் சிக்குண்ட தீவாக இலங்கை மாறியிருக்கிறது. தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறையில் சிங்கள தேசம் தன்னை இழந்திருப்பது போல், தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறையில் பெளத்த- சிங்கள அரசு தன்னை இழந்து வருகிறது. ​

தமிழ் மக்களின் அழிவை வேடிக்கை பார்த்த முஸ்லிம்கள் இன்று தமிழ் மக்களுக்கு நடந்த அதேவகை ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள். இலங்கை இனவாத அரசுடன் நட்புறவும், இணக்க அரசியலும் எக்கணத்திலும் எதிராக மாறும் என்பதற்கு இன்று முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச வன்முறைகள் சாட்சியமளிக்கின்றன.​

முஸ்லிம் மக்கள் மீதான இந்த வகை தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுபான்மை தமிழர்களின் எதிரிகள் எப்படி முஸ்லிம்களின் நண்பர்களாக இருக்க முடியாதோ! அதேபோல் இன்று சிறுபான்மை முஸ்லிம்களின் எதிரிகள் தமிழர்களின் நண்பர்களாக இருக்க முடியாது. ஒருவரின் அழிவை மற்றவர் கொண்டாடுவது என்பது தமிழர், முஸ்லிம்கள் விடயத்தில் இரு சமூகங்களின் அழிவில் தான் முடியும் என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை நிரூபித்து நிற்கிறது. இது வேறுவடிவில் சிங்களவர்களுக்கும் பொருந்தும் என்பதை சில காலத்தில் சிங்கள மக்கள் உணருவார்கள். ​

தமிழ் மக்களின் இடப்பெயர்வு காலகட்டங்களில் விடப்பட்ட பல காணிகள் குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்களில் சில பிரிவினரால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானதும் அது தொடர்பான தமிழ் மக்களது பல கோரிக்கைகள் முஸ்லிம் தரப்புகளால் இதுவரை மறுக்கப்பட்டு வருவது ஒரு கசப்பான உண்மையாகும். இன்று இலங்கை அரசால் இலக்கு வைத்து தாக்கப்படும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடனான உறவை பாதிக்கும் இது போன்ற விடயங்களில் உடன் கவனம் செலுத்துவது இரு தரப்பின் இருப்பிற்கும் மிக அவசியமான தேவையாகும்.​

இனரீதியாக பிளவுண்டு இருந்த இலங்கை சமூகங்களையும் அவற்றின் போராட்ட களங்கள், கட்டமைப்புகள், கலாச்சாரங்களையும் மாற்றி மதரீதியில் சிந்திக்க வைப்பதற்கான ஒரு சர்வதேச நிகழ்ச்சிநிரல் கடந்த பத்து ஆண்டுகளாக கடும் பிரயத்தனதுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெளத்தம் என்பது சிங்கள ஆதிக்கத்தின் அடையாளமாக்கப்பட்டு பலகாலமாக இயங்கிவருகிறது. இஸ்லாம் என்னும் மதம் முஸ்லிம் அல்லது சோனகர் என்னும் இன அடையாளாமாக கொள்ளப்பட்டு கடந்த 20-30 ஆண்டுகளாக வளர்ச்சி கண்டிருக்கிறது. வகாபிசம் என்னும் இஸ்லாமிய தீவிரவாத போக்குகளுடன் முஸ்லிம் சமூகத்தின் சில பிரிவுகள் அடையாளப்படுத்தி கொள்வதும் அதன் வளர்ச்சியாக இன்று பேரழிவுகளை தரக்கூடிய தீவிரவாத சக்திகளின் கைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி ஒரு சுய அழிவு பாதையை வகுத்துக்கொண்டுள்ளதை சமீபத்தைய நிகழ்வுகள் அடையாளம் காட்டுகின்றன.​

இனரீதியான கூறுகளை அதிகம் சுமந்து கொண்டிருக்கும் தமிழ் தேசியத்தின் இருப்பு என்பது இந்த சமூகங்களை மதசமூகமாக்கும் நிகழ்ச்சி நிரலின் மிகப்பெரும் சவாலாகும். தமிழ் மக்களை சைவர், இந்துக்கள், கிறிஸ்தவர் என்னும் முகாம்களுக்குள் தள்ளுவதும், இந்திய இந்துமத தீவிரவாத அரசியலின் வழிகாட்டுதலில் சிவசேனை, இராவண சேனை என்னும் சைவ மதவாத அமைப்புகளின் உருவாக்கத்தினூடாக தமிழர்களிடையே மத முரண்பாடுகளை ஊக்குவித்து தமிழ் தேசிய தளத்தை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி நடந்து வருகிறது.​

முப்பது வருடகால போராட்டத்தின் பாதிப்புகளும் 2006-2009 கால பெரும் அழிவுகளும் தமிழ் மக்களை பெரும் சமூக பொருளாதார அரசியல் பின்னடைவுகளில் தள்ளி விட்டிருக்கிறது. தமிழ் தலைமைகள் அனைத்தும் கைகூலிகளாக இருக்கின்ற பொழுதிலும் தமிழ் மக்கள் இதுவரை தமது முயற்சிகளில் சளைக்கவில்லை. ​
அவர்களின் போராட்டங்களும் தங்களது இருப்பிற்கான முயற்சிகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன. ​

தமிழ் மக்களின் வளர்ச்சி தொடர்பாகவும் அவர்களின் நிலம், பயிர்செய்கை, மீன்பிடி, தொழில்கள், கலாசார பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவற்றின் இருப்பும் வளர்ச்சியும் இன்று மிக அவசியமான பகுதிகள். இவை தொடர்பான திட்டமிடலும், அடிப்படை செயல்பாடுகளும் மிக அவசியமானவை. கலவர பூமியாக மாறிவரும் இலங்கை தீவில் தனது உறுதியான இருப்பை தக்கவைத்துக்கொள்வதினூடாக மட்டுமே தமிழ் சமூகம் தனது உரிமைகளை கூட வென்றெடுக்க முடியும் என்பது இன்றுள்ள நிதர்சனமாகும்.​

1983 தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் இலங்கை முழுவதும் பறிகொடுத்த எமது உரிமை,உடைமை,பாரம்பரியம் இன்னும் பல கூறுகளையும் மீட்டெடுப்பதற்கான காலகட்டத்தில் வாழும் நாம் இயக்கவாதம், பிரதேசவாதம்,மதவாதம் சாதியம் இன்னும் எமக்குள் இருக்கும் பல முரண்பாடுகள் கடந்து பொதுத்தளத்தில் வேலை செய்வது இன்றைய காலத்தின் அவசியமாகும்.​

இது மட்டுமே எமது உரிமைக்காக உயிர்நீத்த அனைத்து போராளிகள், மக்கள் அனைவருக்கும் நாம் செய்யும் அஞ்சலி மட்டுமல்லாது அந்த போராளிகளினதும் மக்களினதும் கனவை நனவாக்கும் ஒரு உன்னதமான செயலுமாகும்.​

புதிய திசைகள்
17/05/2019