யாரு கண்ணுபட்டுப் போனதோ….? அந்த மாதிரி இருந்த ஊரு இந்த மாதிரிப் போனதே…..?

இதன் மறுபுறத்தில் ‘….காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே….” என்று கேட்ட போராட்டங்களும் ”….எமது வாழ் நிலங்களை விடிவியுங்கள……”; என்ற இராணுவ பிரசன்னத்தை அகற்ற கோரிய போராட்டங்களும் “….எமது வாழ்வாதாரத்திற்குரிய ஒழுங்குகளை செய்து தாருங்கள்……” என்ற கோஷங்களும் எழும்பியவண்ணமும் இருந்து கொண்டுதான் இருந்தன.

இதற்கும் அப்பால் ஐ.நா சபையில் மனித உரிமை மீறலுக்கான குற்றப்பத்திரிகை வாசித்தலும், போர் குற்றத்திற்கு மகிந்த இலங்கை அரசை கழுவேற்றாமல் விடமாட்டோம் என்ற புலம் பெயர் தேசத்து முன்னாள் புலி அமைப்பாளர்களின் போராட்டங்களும் நடைபெற்றன. அரசுடன் சேர்ந்து இலங்கையில் தமது ‘வியாபாரத்தை’ நடாத்திய புலம் பெயர் போர் நிதி முதலீடுகளும் சமரசங்களும் நிறையவே நடைபெற்றன.

ஏற்பட்ட யுத்தமற்ற சூழலை பாவித்து தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை குடியேற்றங்கள் மூலம் சிங்களப் பெரும்பான்மை மக்களை முன்னிலைபடுத்தும் செயற்பாடுகளும் கூடவே கிழக்கில் முஸ்லீம் மக்கள் எமது நிலங்களை தமதாக்கி கொள்கின்றார்கள் என்ற குறைபாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்க ஒரு தமிழரேனும் யுத்தம் முடிவுற்றுவிட்டது இனி நாம் தாயகம் திரும்பி வாழலாம் என்ற செயற்பாட்டிற்குள் தம்மை இணைத்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் வெளிநாட்டிற்கு ஓடுதல் அல்லது ஓடுங்கள் என்று தமிழ் தலமைகளே விரட்டிய உசுப்பேத்தல்களும் மட்டும் நடைபெற்றன.

தேர்தலில் வென்று உரிமையை நிலைநாட்ட எம்மிடம் வடக்கு, கிழக்கு மாகாண சபையை தாருங்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல அதிக ஆசனங்களைத் தாருங்கள் என்ற தமிழ் தரப்பு கோஷங்களும் சம அளவில் உரத்து எழுப்பப்பட்டு வந்தன. வடக்கும், கிழக்கும் தமிழ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டும், அதிக ஆசனங்களை பாராளுமன்னத்திற்கு தமிழ் தரப்பின் சார்பில் வழங்கப்பட்டு எதிர் கட்சித்தலைவர் பதவியும் கிடைத்தன.

ஆனால் இவை எவையும் இலங்கையில் பல்லின மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்குரிய சூழலை இலங்கையில் ஏற்படுத்தவில்லை. இதற்கான அரசியல் அமைப்பு திருத்தங்களும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கமும் ஏற்படுத்தப்படவில்லை. போரில் கிடைத்த துன்பங்கள் மூவின மக்களையும் போரின்பால் வெறுப்பினை ஏறபடுத்தியிருந்த தாக்கம் தமக்குள் ஒருவகையான இணக்கப்பாடுகளை இனங்களுக்கிடையில் ஏற்படுத்தியிருந்தது என்னமோ உண்மைதான். இதனால்தான் ‘கலவரங்கள்’ என்ற வடிவங்கள் அதிகம் தலை தூக்கவில்லை யுத்தம் முடிந்த கடந்த வருடங்களில்?

யுத்தம் நடைபெற்ற காலத்திலும், யுத்தம் முடிவுற்ற பின்பும் இலங்கையில் தமது ஆடுகளத்தை ஆரம்பிக்க ஜே.ஆர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேற்குல செல்வாக்கு செலுத்தும் முயற்சி இந்திராகாந்தி அம்மையாரின் ஜே.ஆர் இற்கு பாடம் புகட்ட ஈழவிடுதலைப் போராளிகளை ஊக்குவித்தல் என்பதினால் தடை போட இதற்கு பின்னால் நல்லாட்சிவரை தனது பொம்மை அரசொன்றை சரத் பொன்சேகாவின் ஜனாதிபதி வெற்றிக் கனவினால் கூட நிறைவேற்ற முடியவில்லை.

இதற்கிடையில் யுத்த காலத்து இந்திய செல்வாக்கு செலுத்தலை சமப்படுத்தவும் கூடவே இலங்கையின் மீள் கட்டுமானத்திற்கான கடனையும் பெற என சீனாவின் பிரசன்னம் இலங்கை இல் முன்பை விட கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. இதனால் முன் எப்போதையும் விட இலங்கையில் மேற்குலகம் தனது காலை வைத்தே ஆகவேண்டும் என்ற தேவையை அதிகம் ஏற்படுத்தி விட்டது.

ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லாவின் ஆட்சியை இல்லாமல் செய்ய இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முகாஜிதீன் ஊடாக வளர்த்தலில் இருந்து ஆரம்பித்து ஈராக், லிபியா, சிரியாவில் அல் பசீரின் ஆட்சியை இல்லாமல் செய்ய ஐ.எஸ்.ஐ.எஸ்.(தற்போதைய ஐ.எஸ்) வரைக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உருவாக்கியவர்கள் இந்த மேற்குலகத்தினர். இன்று இதே பாதையில் இலங்கையில் ‘……யார் கண்பட்டுப் போனதோ…..”. பாவம் இலங்கை மக்கள்.

ஆனாலும் இலங்கை இந்த விடயத்தில் பாராளுமன்ற அளவில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்பன சமபலத்தில் உள்ள அமைப்பை பெரும்பாலும் சுதந்திரத்திற்கு பின்னால்(சிறீமாவின் குடியுரிமை பறிப்பு காலம் தவிர்ந்து) தமக்கே கொண்டிருப்பதினால் ரணில் போன்ற வலதுசாரிகளினால் முழுமையாக மேற்குலகிற்கு விற்றுவிட முடியாது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணி நாம் பெற்ற கடன் எமக்கு சுமை என்றாலும் சீனா எமக்கு வழங்கிய கடனுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய நிலையில் சீனாவை அகற்றல் என்ற மேற்குலகின் வேலைத்திட்டமும் இதற்காக இலங்கையை ஆடுகளமாக பாவிப்பதுவும் மிகச் சுலபமாக ஆப்கான், ஈராக், லிபியா, சோமாலியா போலன்றி சிரியா, வெனிசுலா மாதிரி நாம் எழுந்து நிற்கவே அதிகம் வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனாலும் உதவி என்று நன்கொடை என்று கேள்வியில்லாமல் மேற்குலக நட்பு மத்தியதர நாடுகளிடம் இருந்து இறக்குமதியாகும் மார்க்கத்தில் இல்லாத மத அடிப்படைவாதங்களும் முகம் மூடும் ஆடைக் கலாச்சாரங்களும் குண்டு வெடிப்பு பயங்கரவாதங்களை எம்மிடையே பரவ விடாமல் தற்காத்து கொள்வது நாம் எல்லோரினதும் கடமையாகும். இதில் நாம் சகோதரர்களாக இலங்கையை காப்பாற்றுவோம்.

இப்படிச் செயற்பட்டால் இந்தக் கோடையிலேயே நாம் ஊர் சென்று திரும்பி ‘…..அந்த மாதிரி இருக்கு ஊரு….” என்று கூறி மகிழலாம். நாம் செய்வோமா…..?