வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..

இன்றைய The Hindu நாளிதழில் ஒரு செய்தி. மே.வங்க மாநிலத்தின் வட புலத்தில் (Dooars) வசிக்கும் ‘ஓரோய்ன்’ (Oraon) எனும் பழங்குடியினர் பேசுகிற ‘குருக்’ (Kurukh) எனும் மொழியை திருனாமுல் காங்கிரஸ் அரசு மாநில ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. அப்பகுதியில் வாழும் 17 இலட்சம் பழங்குடியினர் அம்மொழியைப் பேசுபவர்களாம். மம்தா அரசு மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கை அம் மொழியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பற்றியுள்ளது. பாராட்டுக்கள்.

இந்தப் பிரச்சினையில் நம் கவனத்தைக் கவரும் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் அது நம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாம். அந்த மொழியின் எழுத்துருவும் (script) கூட திராவிட மொழி வகையைச் செர்ந்தது தானாம். அதன் பெயர் ‘டோலோங் சிகி” (Tolong Siki).

இதில் என்னை ஈர்த்த அம்சம் என்னவெனில் நான் இதுவரை திராவிட மொழிக் குடும்பம் என்பது (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு..) தவிர சிந்து சம வெளியை ஒட்டிய பகுதிகளில் பேசப்படும் ‘ப்ராஹூய்’ ஆகியன மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இது கங்கைச் சமவெளியிலும் கூடப் பரவியிருந்த செய்தி நான் இதுவரை கவனிக்காதது.

இந்தியாவில் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் (சமஸ்கிருதம், பிராகிருதம் முதலியன), திராவிட மொழிக் குடும்பம் தவிர ஆஸ்ட்ரோ ஏசியாடிக், திபெத்தோ பர்மன்) (Austro-Asiatic / Tibeto-Barman) முதலான மொழிக் குடும்பங்கள் புழக்கத்தில் உள்ளதை அறிவோம். இப்பகுதியில் (வங்கம், சட்டிஸ்கார்) உள்ள பழங்குடி மக்கள் மத்தியில் கடைசியாகக் குறிப்பிட்ட இந்த இரு மொழிக் குடும்பங்களும் தான் உள்ளன. ‘சந்தாலி’, ‘முன்டா’, ‘ஹோ’ முதலிய பழங்குடி மொழிகள் ‘அஸ்ட்ரோ ஆசியாடிக்’ குடும்பத்தையும், டார்ஜீலிங்கில் பேசப்படும் ‘லெப்சியா’, ‘தமங்’, ‘புடியா’ முதலியன ‘திபெத்தோ- பர்மன்’ குடும்பத்தையும் சேர்ந்தவை.

பலரும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல வடமாநில மக்கள் எல்லோராலும் பேசப்படுவது ‘இந்தி’ அல்ல. ஆனால் அந்த மக்கள் எல்லோர் மத்தியிலும் இன்று இந்தி வன்முறையாகத் திணிக்கப்படுவதும் அதை அம்மக்கள் இப்போது எதிர்த்துக் தத்தம் மொழிகளை (மைதிலி, பிஹாரி…. முதலானவை) அரசுகள் ஏற்க வேண்டும் எனப் போராடுவதும் வேறு கதை. இது குறித்து நான் ஏற்கனவே இந்தப் பக்கங்களில் எழுதியுள்ளேன். ஆம், ஒரு வகையில் இந்தி எதிர்ப்பு என்பது இப்போது தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலங்களுக்குச் சென்று விட்டது.

சரி, இந்தக் கதையை நாம் அப்புறம் பேசுவோம். மேற்கு வங்கப் பழங்குடி மக்கள் மத்தியில் பயிலப்படும் திராவிட மொழிகளின் கதைக்குத் திரும்புவோம். ஜார்கன்ட் மாநிலம் ஏற்கனவே (2013) குர்கு மொழியை அங்கீகரித்துவிட்டது. 2016 முதல் மாணவர்கள் அம்மொழியிலேயே தேர்வுகளையும் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மே.வங்கம் அதி இப்போது செய்துள்ளது. மம்தா அரசுக்கு வாழ்த்துக்கள்.

சிந்து வெளி நாகரிகம் என்பது திராவிட மொழியினருடையது என்கிற கருத்துக்கு இப்போது அதிகம் வலு சேர்ந்துள்ளது கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பேசிய மொழியியல் அறிஞர்கள் பலரும் இம்முறை இதை அழுத்தமாக வற்புறுத்திச் சென்றுள்ளனர். ஜார்கன்ட், மே.வங்கம் ஆகிய பகுதிகளிலும் அதாவது கிழக்கிந்தியாவிலும் திராவிட மொழிகள் பயிலப்பட்டுள்ளது கவனத்துக்குரியது. ஜார்கண்டின் ராஜ்கமல் குன்றுகலில் வசிக்கும் பழங்குடியினர் மத்தியில் பயிலப்படும் ‘மால்டா’ (Malta) மொழியும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.

புறநானூற்றின் 201ம் பாடலில் கபிலர் இருங்கோவேளைச் சொல்லும்போது துவாரகையிலிருந்து வந்த மரபினர் (புலிகடிமால்) எனக் குறிப்பிடுவது, தொல்காப்பியத்தில் இதே போலச் சொல்லப்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் மு.இராகவையங்கார் முதலான தமிழறிஞர்கள் சங்க காலத்தில் மூவேந்தர்களுக்கு இணையாக விளங்கிய வள்ளன்மை மிக்க ‘வேளிர்கள்’ கங்கைக் கரையோரத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்கின்றனர்.

அப்படியாயின் திராவிட மொழிகள் சிந்து வெளியில் மட்டுமின்றி கங்கை வெளியிலும் பயிலப்பட்டனவா? இல்லை ஆரிய மொழிக் குழுவினரின் வருகையை ஒட்டி சிந்து வெளிப் பண்பாடு அழிந்த போது ஆரிய மொழியினரைப் போலவே திராவிட மொழியினரும் கிழக்கை நோக்கி இடம் பெயரத் தொடங்கினரா?
எனக்கு மொழியியல் அறிவு அல்லது பரிச்சயம் அதிகமில்லை. இல்லை என்றே சொல்லலாம். ‘ஆரியக் கூத்து’ நூல் எழுதிக் கொண்டிருக்கும் போது கொஞ்சம் வாசித்ததுதான்.
மொழியியல் அறிஞர்கள் இது குறித்து விரிவாக எழுதினால் பயனுடையதாக இருக்கும்.

(Marx Anthonisamy