வரம் கொடுப்பாரா பூசாரி?

இந்த இனம் என்று வரும்போது, பொதுவாக மலையகத்தை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தமிழர்கள், பெருந்தோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆகவும் அவர்களைச் சார்ந்தவர்களுமாகவே இருக்கின்றனர். 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 4.5 சதவீதமான மக்கள், பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று, 2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் 88 சதவீதமானோர், பெருந்தோட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கடுமையான பாகுபாட்டின் மத்தியில், குடியுரிமை, வாக்குரிமைக்காக நீண்ட நாள்களாக போராடிய இவர்கள், அதைப் பெற்றுக்கொண்டிருந்தாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் அடிமைகள் போல் நடத்தப்பட்டு, பின்னர் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஒடுக்குமுறைகளாலும், பெருந்தோட்டத் துறை மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாத அளவில் பின் தள்ளப்பட்ட வகையிலேயே இன்னும் உள்ளது என்பதே, நிதர்சன உண்மை.

‘இந்தியத் தமிழர்கள்’ அல்லது ‘மலையகத் தமிழர்கள்’ என்று அழைக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை, உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுத்தல் எனும் அமைப்பாக, தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வந்தாலும், மலையகத்தின் ஆரம்பக்கட்ட அரசியலும் தொழிற்சங்கத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில், தொழிற்சங்க அரசியல், மலையக பெருந்தோட்டத்துறை மக்களின் ஒட்டுமொத்த தேசிய இன அரசியலின் ஒரு கூறாகக் கொள்ளலாம்.

இலங்கையில் முதல்முறையாக, தொழிற்சங்கம் பற்றிய அறிவை விதைத்தவர்களாக, அல்பிரட் ஏர்னெஸ்ட் பூல்ஜன்ஸ், கலாநிதி பின்டோ ஆகியோரே கருதப்படுகின்றனர். 1893ஆம் ஆண்டு கேவ்ஸ் அச்சு நிறுவன தொழிலாளர் போராட்டமும் 1896ஆம் ஆண்டு, புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தப் பேராட்டமும், 1906ஆம் ஆண்டு போக்குவரத்து துறைசார்ந்த ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் என, தொடர்ச்சியான போராட்டங்களே, இலங்கையில் தொழிற்சங்க இயக்கத்துக்கு அத்திபாரமிட்டன.

இந்நிலையிலேயே, 1930களில், தோட்டப்புறங்களில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னர், மலையக மக்களின் அரசியலும் தொழிற்சங்க அரசியலோடே ஆரம்பமாகியது. மலையகத் தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு நூறு வருடங்களுக்கு பின்பே, தொழிற்சங்க அரசியல் பணிகள் மெதுவாக வேரூன்றுகிறது. இந்தத் தொழிற்சங்கத்தின் ஊடான அரசியலையே, பெருந்தோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள், கடந்த 80 வருடங்களாக அனுபவித்து வருகின்றனர். இத்தனை வருடங்களாக மலையக மக்கள் சந்தித்த தேர்தலைப் போன்றே, இம்முறை நடைபெறும் பொதுத் தேர்தலும் அமையுமா அல்லது புதிய ஒரு யுகம் படைக்குமா என்பது, ஓகஸ்ட் 6ஆம் திகதிக்கு பின்னரே தெரியவரும்.

ஓகஸ்ட் 5ஆம் திகதி, அதாவது நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா-மஸ்கெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 5 இலட்சத்து 717 ஆயிரம் பேர், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 43 ஆயிரம் பேர் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆவர். 8 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக, 12 அரசியல் கட்சிகள், 13 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். மலையகத்தில், இம்முறை அதிகளவான தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமையால், வாக்குகள் சிதறடிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. இதனால், நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவடையக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இந்த 80 வருடகால தொழிற்சங்க அரசியலில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த ஏமாற்றங்கள், நன்மைகள் தொடர்பாக சுருக்கமாகப் பார்த்தால், 1973ஆம் ஆண்டு, டிசெம்பர் 18ஆம் திகதி சம்பள உயர்வு கோரி, மலையக பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பங்கேற்புடன் நடைபெற்ற போராட்டம், ஏதேனும் ஒரு காரணத்துக்காக இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

முதலாவதாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, இலங்கை தோட்ட தொழிலாளர் யூனியன் தலைவர் என்.எம் பெரேரா, மாதாந்தச் சம்பளம் என்பது, அதிகபடியான கோரிக்கையாகும் என்றும் உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் கூறி, எம் சமூகத்தின் நியாயமான கோரிக்கையை நிராகரித்திருந்தார். அத்தோடு, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட 10 நாள்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஒருதலைப்பட்சமாகப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1981ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் வரவு-செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 70 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இச்சம்பள உயர்வு மறுக்கப்பட்டது. இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டனர்.

1981ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களில் உள்ள 14 தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி, தமக்குள் பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டுக்குழு என்ற அமைப்பை உருவாக்கி, 1981 ஓகஸ்ட் மாதம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 70 ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். எனினும் இந்த வேலைநிறுத்தத்தை எதிர்த்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, 1989ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 100 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கு அப்போதைய அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் சம்பள உயர்வைக்கூட வழங்க அப்போதைய அரசாங்கம் எவ்விதமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகித்த மலையக மக்களின் பிரதிநிதிகளும், இது தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தங்களை தெரிவிக்கவில்லை.

இவ்வாறான வரலாறுகளின் மத்தியில், 1998ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதி, முதலாவது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று வரை 2 வருடங்களுக்கு ஒருமுறை பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில், சம்பளக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது. எத்தகைய காட்டிக்கொடுப்புகள், துரோகங்களுள் இழைக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் துறையினரின் வாழ்வியலும் தொழிற்சங்க அரசியலும், பின்னிப் பிணைந்ததாகவே பிரிக்கமுடியாததாகக் காணப்படுகின்றது.

தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், செங்கொடிச் சங்கம் என்பவற்றின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. எவ்வாறாக இருந்தாலும், வாக்குரிமையைப் பெற்ற மலையகத் தமிழர்கள், இன்னும் நில உரிமைக்காகப் போராடிக்கொண்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில், மக்கள் நலனுக்காகச் செயற்பட்ட தொழிற்சங்கங்கள், பின்னர் சுயநல அரசிலுக்காக செயற்படத் தொடங்கின. தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்கள் சந்தாப் பணம் செலுத்தினாலும், அம்மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவை பின் நிற்கின்றன.

குறிப்பாக வீட்டுரிமை, காணியுரிமை, கல்வியுரிமை, பாதுகாப்புரிமை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் வாழும் இவர்களின் நலன்களை மேம்படுத்தும் செயற்பாடுகளை, மலையக வரலாற்றில் எந்தவோர் அரசாங்கமும் மேற்கொண்டிருக்கவில்லை. அவ்வாறு கொண்டுவந்திருந்தாலும் அது முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றே கூறவேண்டும்.

இது இவ்வாறிருக்க, சிறுத்தைகள், பாம்புகள், குளவிகளுக்கான வாழ்விடங்கலாக தேயிலைத் தோட்டங்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான காடுகளுக்குள் சென்று தொழிலை மேற்கொள்ள விரும்பாத தொழிலாளர்கள், தேயிலைத் தொழிற்றுறையை கைவிட்டுச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பின்மை, அதிக உழைப்பு, குறைந்த வருமானம், தோட்டச் சேவையாளர்களின் கெடுபிடி, ஆதிக்கம், தொழில் உரிமைகள் மறுக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணங்களால், தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்டத்துறையைக் கைவிட்டுச் செல்லும் நிலை அதிகரித்துவிட்டது. அவ்வாறு பெருந்தோட்டத்திலிருந்து ஒவ்வொரு தொழிலாளியும் வெளியேறினால், தொழிற்சங்கம் நடத்துவதும் எதிர்காலத்தில் ஒரு கேள்விக்குறியாகவே அமைந்தும் விடும் அல்லவா?

இதில்தான், பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய அவசியத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெருந்தோட்டத்தில் எந்தவோர் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால், அதற்கு, பெருந்தோட்டக் கம்பனிகளின் அனுமதியைப் பெறவேண்டிய விதி ஆரம்பத்திலேயே எழுதப்பட்டுவிட்டது. இந்தச் சமூதாயத்தின் வளர்ச்சிக்கு, ஆரம்பம் முதல் இது ஒரு முட்டுக்கட்டையாக அமைந்து வருகின்றது என்றால் அதை பலரும் ஏற்றுக்கொள்வர்.

இன்று மலையகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு, தொழிற்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டுமாக இருந்தாலும்கூட, அதற்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு பெருந்தோட்டக் கம்பனிகளிடம் அனுமதி பெறவேண்டிய நிலையே காணப்படுகிறது. இந்தத் தேர்தல் பிரசாரத்தில் கூட, பழைய தலைமைகளும் பல புதிய வரவுகளும் மலையகத்தில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி, தொழில்வாய்ப்புகளை வழங்குவதாகப் பிரசாரம் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அனைத்துக் காணிகளும், பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமாக இருக்கும்போது, தொழிற்பேட்டைகளுக்கான நிலத்தை எங்கிருந்து பெறுவார்கள் என்று யாராவது கேள்வி எழுப்பியுள்ளீர்களா?

கொவிட் – 19 நெருக்கடியின் போதும், தரிசு நிலங்களை வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு அரசாங்கம் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, தரிசு நிலங்களில் விவசாயம் செய்ய முற்பட்டவர்களுக்கு எதிராக, நிர்வாகங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தன.

இதைவிட க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர், புலமைப்பரிசிலைப் பெற வேண்டுமாக இருந்தால், தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கேவலமான நிலை, பெருந்தோட்டத்தில் மாத்திரமே நடைபெற்று வருகின்றது. இவை அனைத்தையும் தொழிற்சங்கங்கள் பல வருடங்களாக வேடிக்கை மாத்திரம் பார்த்து வருகின்றது.

இவ்வாறு, மலையகத்தில் காணப்படும் தீர்க்கமுடியாத அல்லது தீர்க்க முடிந்தும் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். சமீபத்தில் மலையகத்துக்கான கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது, இத்தனை காலங்களால் பல தொழிற்சங்கங்களின் கீழ் சந்தாப் பணம் செலுத்தி அதன் அங்கத்துவத்தை கொண்டிருந்தாலும், எந்தவொரு நன்மைகளையும் தாங்கள் பெற்றிருக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களின் வளர்ச்சிகாகவாவது நாம் அந்தத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்போம் என்றே கூறப்பட்டது.

அதாவது, “நன்மை கிடைக்காமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்தாலும் தொழிற்சங்கத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்ற ஒரு தீர்க்கமான முடிவிலேயே 80 சதவீதமான தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இதிலிருந்து, தங்களது வாக்குகளை என்ன தேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையான தெளிவைக் கூட இவர்கள் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும், மலையக தேசியத்தை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாததாகும். அதற்கு மலையக தேசிய இன அரசியலை முன்நகர்த்த வேண்டியது கட்டாயமாகும். மலையக தேசிய இன அரசியலை முன் நகர்த்துவதற்கு முதலில் மலையகத் தமிழரின் இருப்பை பாதுகாக்கக் கூடிய விதத்திலான இலக்கு அவசியம். அடுத்து இலக்கை அடைவதற்கான கொள்கைகளும் கொள்கைகளை மையப்படுத்தியதான வேலைத்திட்டங்களும் வேண்டும்.

இந்த வேலைத்திட்டங்களை நீண்டகால குறுகியகால என்ற இரண்டு நிலைப்பாட்டில் இருக்கவேண்டும். வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய அமைப்பு வடிவமும், அதற்கான ஊழியர்களின் தேவையும் அடுத்து தீர்மானித்தல் வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் அர்ப்பணம் உள்ள தலைமையின் அவசியம் மிகவும் முக்கியமானதாகும்.

இறுதியாக மலையக தேசிய இன அரசியலை நேர்த்தியான முறையில் முன்னெடுப்பதன் ஊடாக மட்டுமே இன்று மலையக தேசியம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து, அதன் தேசியத்தை முன் நிறுத்த முடியும். மலையகத்தின் எதிர்காலத் தலைமையாக யார் நியமிக்கப்பட்டாலும், “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலை” ஏற்படாமல் இருப்பதற்கு, மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.