விக்னேஸ்வரன் வாங்கிய குட்டு

அப்படியிருக்க, 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகார எல்லைகள் குறித்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்குப் போதிய விளக்கங்கள் இல்லை என்று வாதிட முடியாது; அது அவ்வளவுக்கு எடுபடாது.

வடக்கு மாகாண அமைச்சர்களாக இருந்த பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரை, அப்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பதவி நீக்கிய போது, 13ஆவது திருத்தம் பற்றி விவாதிக்கப்பட்டது.

பதவியில் நியமிக்கும் அதிகாரமற்ற ஒருவருக்கு, பதவி நீக்கும் அதிகாரம் இல்லை என்பது அடிப்படைப் பொருள்கோடல். நீண்ட நீதித்துறை அனுபமுள்ள விக்னேஸ்வரன், தன்னுடைய தன்முனைப்பு (ஈகோ) மனநிலையால், தடுமாறுகிறார் என்று, அந்தத் தருணத்தில் எடுத்துக் கூறப்பட்டது.

ஆனால், அவர் தன்னுடைய முடிவுகளில் உறுதியாக இருந்தார். அதன் பலனை, இன்றைக்கு அனுபவிக்க வேண்டி வந்திருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (05) வழங்கியிருக்கின்ற தீர்ப்பு, அவரின் நீதித்துறை அனுபவத்தின் மீதான குட்டு ஆகும்.

13ஆவது திருத்தம், மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்களை வழங்கவில்லை என்று, அது திணிக்கப்பட்ட (அறிமுகப்படுத்தப்பட்ட) சந்தர்ப்பத்திலேயே உணரப்பட்டுவிட்டது. சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் பாரம்பரிய உரிமையாகக் கொண்டிருக்கிற தமிழ் மக்கள், 13ஆவது திருத்தத்தை எந்தவிதத்திலும் தீர்வுக்கான அடிப்படையாகக் கொள்ளவில்லை.

அதனை, ஆரம்பம் முதல் நிராகரித்தே வந்திருக்கிறார்கள். அப்படியிருக்க, நீதிமன்றம் சென்றுதான், அதன் அதிகார எல்லைகள் குறித்து, மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றில்லை.

விக்னேஸ்வரனுக்கு எதிராக, நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், அந்தத் தீர்ப்பு ஏன் வழங்கப்பட்டது, அவர் ஏன் அவமானப்பட வேண்டி வந்தது என்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவரும், அவரது ஆதரவாளர்களும் 13ஆவது திருத்தத்தின் பின்னால், ஒளிந்துகொண்டு, தங்களுடைய தவறுகளை மறைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

தீர்ப்பு வெளியாகிய சில மணித்தியாலங்களில், விக்னேஸ்வரன் அளித்துள்ள பதிலில், 13ஆவது திருத்தத்தைக் குற்றஞ்சொல்கிறார்; கூட்டமைப்பை விமர்சிக்கிறார். அதைத் தவிர்த்து, தன்னுடைய நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதற்கு அவர் தயாராக இல்லை.

பதவி நீக்கத்துக்கு எதிராக, டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில், விக்னேஸ்வரன் தரப்பு ஆரம்பத்தில், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம், முதலமைச்சருக்கு இருப்பதாகப் பொருள்கோடல் செய்ய விளைந்தது. இன்னொரு தருணத்தில், ஆளுநருக்கே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருப்பதாக வாதிட்டது. மீண்டும், அமைச்சர்களை நியமிப்பது முதலமைச்சரே, ஆகவே நீக்கவும் அதிகாரம் இருக்கின்றது என்றும் வாதிட்டது.

இவற்றையெல்லாம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், நீதிமன்றத்தின் காலத்தை வீணடிக்கும் வேலையை விக்னேஸ்வரன் தரப்புச் செய்திருப்பதாகவும் கண்டித்திருக்கின்றது. உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவருக்கு, கீழ் நீதிமன்றமொன்று குட்டு வைத்திருப்பது, உண்மையிலேயே இரசிக்கக் கூடிய ஒன்றல்ல; ஆனால், அதற்கு அவரே காரணமாக இருந்திருக்கிறார் என்பதுதான் வருத்தத்துக்குரியது.

“…தமிழ்ச் சூழலில், விக்னேஸ்வரனுக்கு என்றொரு மரியாதை இருக்கிறது. அவர், ஓர் ஓய்வுபெற்ற நீதியரசர். அதனை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவரை, ஒரு கனவான் தன்மையோடுதான் நடத்த வேண்டும். மாறாக, அவருக்கு எதிராக, டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்திருப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இதுவோர் அரசியல் ரீதியான நடவடிக்கை. இதற்குத் தமிழ் மக்கள் பதில் சொல்வார்கள்…” என்று, டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்த தருணத்தில், விக்னேஸ்வரன் ஆதரவு அணியிலுள்ள செயற்பாட்டாளர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.

ஓய்வுபெற்ற நீதியரசரை, ஒரு சமூகம் மதிப்பதும் கொண்டாடுவதும் தப்பில்லை; அது, வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், இயற்கை நீதிக்குப் புறம்பாக, அவதூறுகளைக் கூறிய ஒருவருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட ஒருவர், நீதி கோருவது எப்படித் தவறாக முடியும்?

விக்னேஸ்வரனுக்கு எதிராக, டெனீஸ்வரன் வழக்குத் தொடர்ந்ததும் அந்த அடிப்படைகளிலேயேதான். விக்னேஸ்வரன் இறுதி வரையும், கனவான் பிம்பத்துடன் வாழ்வது, அவரது நடவடிக்கைகளிலேயே தங்கியிருக்கின்றது.

அதுபோல, நீதி நியாயத்துக்கு அப்பால் நின்று, எவர் ஒருவரையும் நியாயப்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. தமிழ் மேட்டுக்குடி சிந்தனையை, ஒரு பிரமிப்பாகத் தமிழ்ச் சமூகம் கொண்டு நடப்பதின் அபத்தம், இப்படியான சந்தர்ப்பங்களில்தான் அதிகமாக வெளிப்பட்டு, எரிச்சலூட்டுகின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை அடுத்து, முதலமைச்சரான விக்னேஸ்வரன், நிபுணர்கள் குழுவை அமைத்து, விசாரணைகளை நடத்தினார். அதில், அமைச்சர்களான பொ.ஐங்கரநேசனும் த.குருகுலராஜாவும் அதிகார துஷ்பிரயோகம், மோசடி செய்திருப்பதாக அறிக்கை வெளியானது.

ஆனால், டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அப்படியான சூழலில், ஐங்கரநேசனும் குருகுலராஜாவும் பதவி விலகினார்கள். ஆனால், முன்முடிவுகளோடு விசாரணைக்குழுவின் அறிக்கைக்காகக் காத்திருந்த விக்னேஸ்வரனுக்கு, அறிக்கை ஏமாற்றமளித்தது. அதுவும், தனக்கு இணக்கமான ஐங்கரநேசன் பதவி விலக வேண்டி ஏற்பட்டதை, அவரால் சகிக்க முடியவில்லை. அப்படியான தருணத்தில்தான், டெனீஸ்வரனையும் சத்தியலிங்கத்தையும் பதவி விலகுமாறு கோரினார். அதுவும், அவர்கள் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டு, பதவி விலகும் கோரிக்கையை முன்வைத்தார்; இதனால், அவர்கள் இருவரும் எரிச்சலடைந்தனர்.

அப்படியான தருணத்தில், அமைச்சரவைக்குள் இருந்தவர்கள் குற்றமிழைத்து இருக்கிறார்கள் என்கிற அடிப்படையில், கூட்டுப்பொறுப்பை ஏற்று, அமைச்சரவை முழுவதுமாகப் பதவி விலகுவது, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கை ஆகும்.

ஆனால், அமைச்சரவையின் தலைவரான தான், குற்றச்சாட்டுகளுக்கு அப்பாலான ஒருவர் என்று வரையறுத்துக் கொண்டு, குற்றம் நிரூபிக்கப்படாத மற்றைய அமைச்சர்களையும் பதவி விலகக் கோருவது, இயற்கை நீதிக்குப் புறம்பானது. அது, ஒருவகையில் அயோக்கியத்தனமானது. இதிலிருந்து ஆரம்பித்த சிக்கல்தான், இன்றைக்கு விக்னேஸ்வரனை நீதிமன்றத்திடம் குட்டுப்படும் அளவுக்கு கொண்டு வந்திருக்கின்றது.

முதலமைச்சராக, அமைச்சர்களோடு பணியாற்றுவதில் சிக்கல் இருக்கின்றது. அதனால், பதவி விலகுமாறு கோருவது அரசியலில் நடப்பதுதான். ஆனால், நிரூபிக்கப்படாத குற்றங்களை திரும்பத்திரும்பக் கூறிக் கொண்டு, அவர்களைப் பதவி விலகக் கோரும் போது, அதனை எதிர்த்து எவர் ஒருவரும் போராடுவார். அப்படித்தான் டெனீஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வந்தது.

இந்த ஊடாட்டத்தில், அதிகம் தன்முனைப்பால், தூண்டப்பட்ட விக்னேஸ்வரன், தன்னுடைய எல்லைகளைக் கடந்து நின்று, அமைச்சர்களைப் பதவி நீக்கினார். அது, தன்னைக் குப்புறத்தள்ளும் என்று அவர் நம்பியிருக்கவில்லை.

அரசியல் என்பது, சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கும் களம். எவர் ஒருவரும் சந்தர்ப்பத்தைத் தவற விடமாட்டார். (குறிப்பாக, விக்னேஸ்வரன் தனக்குக் கிடைத்த நல்ல பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது போல, மற்றவர்களும் தவறவிடமாட்டார்கள்.) அப்படியான ஒரு கட்டத்தில் நின்றும், விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு அணுகப்பட வேண்டும்.

விக்னேஸ்வரனுக்கு எதிராக, டெனீஸ்வரன் வழக்கைத் தொடர்ந்தாலும், அந்த வழக்குத் தாக்கல் செய்வதற்குப் பின்னால், தமிழரசுக் கட்சியின் சட்டக்குழுவும் இருந்திருக்கின்றது என்பது உணரப்படக் கூடியது.

அரசியல் என்பது, சிக்கலான சதுரங்கம். சின்னச் சின்னத் தவறுகள் கூட, ஆட்டத்தை முழுமையாக எதிரிகளின் கைகளில் கொடுத்துவிடும். அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில், ஏக நிலையில் இருக்கும் கூட்டமைப்புக்கு, (தமிழரசுக் கட்சிக்கு) எதிராக விக்னேஸ்வரன் வாள்களைச் சுற்றும் போது, அவதானமாக இருந்திருக்க வேண்டும்.

வாள்களைச் சுற்றுவது ஆரம்பத்தில் இலகுவான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், வாள்களை அதே வேகத்தோடு என்றைக்கும் சுற்ற முடியும் என்றில்லை. ஏனெனில், வாள்களைக் கைகளில் ஏந்தியிருக்கும் ஒருவர், அந்த வாள்கள் குறித்து மிகுந்த அவதானத்தோடு இருக்க வேண்டும். சிறிய தடுமாற்றம் ஏற்பட்டாலும், அது ஏந்தியிருப்பவரையும் சேர்ந்து அறுத்துவிடும். விக்னேஸ்வரன், இன்றைக்கு நீதிமன்றத்திடம் வாங்கியிருக்கின்ற குட்டு, அப்படியொரு தடுமாற்றத்தால் ஏற்பட்டது.

விக்னேஸ்வரனைச் சுற்றியிருப்பவர்கள், அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள், முதலில் அவரைத் தடுமாற்றங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்தும் குட்டுகளை வாங்க வேண்டி ஏற்படலாம்.