46 ஆண்டுகளுக்கு முன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த 12 அம்சத் திட்டம்


எனவேதான் நம் அனைவரினதும் இதய அபிலாசையான தேசிய ஒருமைப்பாட்டை மெய்யாகவே சாதிப்பதற்கான ஓர் உருப்படியான திட்டத்தை, ஒரு வழிமார்க்கத்தை மக்களின் முன் சமர்ப்பிப்பதோடு, அந்த ஆக்கபூர்வமான திட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளினதும் மக்களினதும் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெறுவதும் அவசியம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஸ்தூலமான அடித்தளத்தை உருவாக்க மொழிப் பிரச்சினைக்கு நியாயமான நல்ல தீர்வு காணப்படுவது மறுக்கமுடியாத முன்தேவை என்று கருதுகின்றோம்.

ஏகாதிபத்தியத்தினதும் சுரண்டல் வர்க்கங்களினதும் ஆதிக்கத்தையும் வர்க்க நலனையும் பாதுகாக்க கலோனியலிஸ்டுகளாலும் பணமூட்டை வர்க்கத்தாலும் நீண்டகாலமாகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட தேசிய குரோதமும் பகைமையும் பூசலும் எடுத்த எடுப்பில் அகற்றப்படக் கூடியவையல்லவையல்ல என்றாலும், இவற்றை நீக்கவும் இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் வலுப்படுத்தவும், ஸ்தூலமான செயற்பாடுகளை மேற்கொள்ளாது தேசிய ஒருமைப்பாட்டை ஸ்தாபிக்க முடியாது என்பதும், தேசிய புனர்நிர்மாணத்தை மேற்கொள்ள முடியாது என்பதும் மறுக்கமுடியாத உண்மைகள்.

இன்றைய கட்டத்தில் தேசிய இனப் பிரச்சினைக்கு மக்களின் மனநிலை, ஜனநாயக வளர்ச்சி அரசியல், பக்குவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஆரம்ப வடிவ நியாயத் தீர்வு காண்பது சாத்தியமானதும் அவசியமானதுமாகும்.
இத்தகைய ஒரு ஜனநாயகத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக பின்வரும் ஆலோசனைகள் அமையலாம் என்று நம்புகின்றோம்.

 • நாட்டில் ஒருமைப்பாடும் தேசிய முழுமையும் மீறப்பட முடியாதவை என்பதை அனைவரும் ஏற்பதுடன், பல்வேறு இனங்களினதும் தனித்துவத்தை உத்தரவாதப்படுத்துவது.
 • தமிழ் பேசும் மக்களினதும் சிங்கள மக்களினதும் நியாயமான அபிலாசைகளை பரஸ்பரம் ஏற்பது.
 • மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் அடிப்படையாக அரசகரும மொழிச் சட்டததையும் தமிழ் மொழி விசேச விதிகள் சட்டத்தையும் அனைவரும் ஏற்பது.
 • சிங்களம் அரசகரும மொழி எனும் சட்டத்தை தமிழ்பேசும் மக்களுக்குப் பாதகமற்ற வகையில் அமுல்படுத்துவதுடன், மொழிச் சட்டங்களை அமுல்படுத்தும்போது அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படக்கூடிய கஸ்டங்களையும் அசௌகரியங்களையும் முடிந்தளவில் குறைக்க உசிதமானவற்றைச் செய்வது.
 • அரசுடனும், அரசாங்க அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், பொலிஸ் நிலையங்கள் முதலானவற்றுடனும் தமது அலுவல்களைத் தமது மொழியில் ஆற்றுவதற்குத் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறையில் முழுமையாக உத்தரவாதப்படுத்துவது.
 • அவ்வவ்பகுதி மக்கள் தமது பகுதிகளின் விவகாரங்களை நிர்வகிப்பதில் பங்குகொள்ள வாய்ப்பளிப்பது என்ற ஜனநாயகக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதற்காக உகந்த நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதுடன், ஸ்தல ஸ்தாபனங்களின் அதிகாரத்தை விஸ்தரிப்பது.
 • தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கட்டுப்கோப்புக்குள் பிரதேச பொருளாதார அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கவும், இவற்றை அமுலாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் பிரதேச மக்களுக்கு முதலிடம் கொடுப்பதை உறுதிப்படுத்தவும் ஆவன செய்வது.
 • உயர்தர, விசேச நடுநிலைக் கல்விக்கான வசதிகளை வியாபிப்பதின் மூலம் அனைத்துப் பிள்ளைகளுக்கும் உயர் கல்வி பெறுவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் ஜனநாயகக் கோட்பாட்டைச் செயல்படுத்துவது.
 • ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மானித அடிப்படையில் செயல்படுத்தப்படுவதை விரைவுபடுத்துவதுடன், தோட்டத் தொழிலாளர்களைத் தேசிய வாழ்வில் இணைக்கும் நிகழ்வைத் துரிதப்படுத்துவதோடு இந்த மக்கள் முகம்கொடுக்கும் சில கஸ்டங்களை நிவர்த்திக்க உடன் நடவடிக்கைகளை எடுப்பது.
 • அனைத்து இன மக்களினது கலைகளையும், கலாச்சாரங்களையும், இலக்கியங்களையும் வளர்க்க அனைத்து உதவிகளையும் வழங்குவதுடன், தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் நல்லுறவையும் நல் விளப்பத்தையும் வளர்க்க தமிழ் இலக்கியப் படைப்புகளைச் சிங்களத்திலும், சிங்கள இலக்கியப் படைப்புகளைத் தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவது ஆகியவற்றின் மூலம் கலாசார பரிவர்த்தனையை விரிவுபடுத்துவது.
 • இன, மத, சாதி போன்ற காரணங்களுக்காக உத்தியோகம், பதவியுயர்வு மற்றும் விவகாரங்களில் அவ்வவ்போது ஏற்படக்கூடிய பாகுபாடுகளையும் ஒதுக்கல்களையும் முற்றாக நீக்குவதுடன், தமிழ் பேசும் மக்களின் நலன்களோடு சம்பந்தப்பட்ட அமைப்புகளில் தமிழ் பேசும் மக்களுக்குரிய இடம் அளிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவது.
 • இன, மத, சாதி ரீதியான குரோதங்களைத் தூண்டுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனப்படத்துவது.
  (இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் ஆல விருட்சமாகத் திகழ்ந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 1975 மே 30 மற்றும் 31ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு மாநாடு ஒன்றை நடத்தி, தேசிய ஒருமைப்பாட்டை எட்டவும், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் 12 அம்சத் திட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அந்தத் திட்டத்தை அப்போதைய இலங்கைப் பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டுக்கு நேரடியாக வருகை தந்து பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • இதில் கூறப்பட்டுள்ள சில விடயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான விடயங்கள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. அந்த வகையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தீர்க்கதரிசனம் இதில் புலப்படுகிறது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இம் மாநாடு ஒரு வரலாற்று நிகழ்வாகும்)