ஆதிக்க சக்திகளின் ஆட்சியின் கீழ் இலங்கை ஒரு வருடம்

ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து, பிரதானமாக இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் உருவாக்கிய சதித்திட்டத்தின் கீழ் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு (08.01.2015) ஒரு வருடம் ஆகின்றது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தொடர்ச்சியாக 20 வருட காலமாக ஆட்சி செய்து, முன்னெப்போதுமில்லாத வகையில் பலமாகத் திகழ்ந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பலவீனமடையைச் செய்வதின் மூலமாகவே இலங்கையில் தமது காலை ஊன்றலாம் என்று  கருதிய இந்தியாவும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது திட்டத்தில் வெற்றி பெற்றதோடு, இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் நீண்ட காலமாக வைத்திருக்கும் எண்ணத்துடன் தமது இராஜதந்திரிகளை தொடர்ச்சியாக இலங்கைக்கு அனுப்பிய வண்ணமும் உள்ளனர். அத்தோடு அவ்வப்போது தற்போதைய ஆட்சியாளர்களை புகழ்ந்து அறிக்கைகளையும் விடுகின்றனர்.


இலங்கையில் ஆட்சி மாற்றம் பார்வைக்கு நீதியானதொரு (ஜனாதிபதித்)தேர்தல் மூலமாக ஏற்பட்டதாயினும், தேர்தலில் ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக, அதே கட்சியின் பொதுச்செயலாளர் வேட்பாளராக நிறுத்தப்பட்டது உலகில் வேறு எந்த முதலாளித்துவ ஜனநாயக நாடுகளிலும் நிகழாத அதிசயம் என்றே கூறவேண்டும். இந்த ஆட்சி மாற்றத்திற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலங்கைத் தரப்பினர் மற்றும் குறிப்பாக மூன்று நாடுகளை விடவும், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள், ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி), வடக்குக் கிழக்கு மையவாத தமிழ், முஸ்லீம் தேசியவாதக்கட்சிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகள், பல ஆங்கில, சிங்கள, தமிழ் ஊடகங்கள் போன்றவைகளும் தமது ஆதரவை வழங்கின. அத்துடன் நிற்காமல், 100 நாள் திட்டம், சம்பள உயர்வு, நல்லாட்சி, ஜனாதிபதி ஆட்சிமுறை இல்லாதொழித்தல், ஊழல் ஒழிப்பு, தேசிய அரசாங்கம், ஊடக சுதந்திரம், போர்க்குற்ற விசாரணை, புலிகள் இயக்கத்தினர் அனைவரும் சிறையிலிருந்து விடுதலை, இனப்பிரச்சனைக்கு தீர்வு, புதிய அரசியலமைப்பு, அரசியல் நிர்ணய சபை என பல்வேறு சொல்லலங்காரங்களுடன் பவனி வரும் ஆட்சியாளர்களுக்கு, கடந்த ஒரு வருடமாக இவர்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்கிய வண்ணமும் உள்ளனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் நிகழ்ந்ததாகக்கூறி நாட்டின் சில அபிவிருத்தித்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன, கொழும்பில் அடிக்கடி அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன, தனியார்மயமாக்கல், ஊழியர் சேமநல நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஒழிக்கப்படவுள்ளது, இப்படி இந்த அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். பாராளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சியென எதுவுமே இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு பரிபூரண அதரவு வழங்கி, தமிழ்மக்களை தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்குமாறு கூறிப் பிரச்சாரம் செய்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பரிசாக, எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்சியாளர்களே எதிர்க்கட்சியாகவும் உள்ளனர்.

குடும்ப சர்வதிகார, ஊழல் நிறைந்த ஆட்சியிலிருந்து நாட்டினை விடுவித்து ‘நல்லாட்சி’ புரிவதாக கூறும் இந்த ஆட்சியில், அரசியல்வாதிகளிலிருந்து பாதுகாப்பு பிரிவினர் வரை பலர் ஊழல், கடத்தல், கொலை போன்ற குற்றச்சாட்டுகளில் கைது   செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆனால் அண்மையில் கடத்தல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டதாக முழு ஆதாரங்களுடன்  கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரா வெறும் கண்துடைப்புக்காகவே கைது செய்யப்பட்டு, உடனடியாகவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுமுள்ளார்.

பாகிஸ்தானிடமிருந்து கொள்வனவு செய்யப்படவிருந்த JF17 ரக விமானங்கள் இந்தியாவின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறே இந்திய எதிர்ப்பினால் திரிகோணமலை துறைமுகத்தில் சீனாவின் ஒத்துழைப்புடன் நிறுவப்படவிருந்த விமான பராமரிப்பு நிலையமொன்றிற்கான ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெல்ஜியத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் 1 பில்லியன் டொலர்களை இலங்கையில் வைப்பிலிட முன்வந்துள்ளதாக இலங்கையின் நிதியமைச்சர் பெருமையுடன் கூறியிருக்கிறார். முன்னைய ஆட்சியிலிருந்தவர்கள் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தினை வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டிருப்பதாக குற்றம் சாட்டும் தற்போதைய ஆட்சியாளர்கள், வெளிநாட்டினர் ஒருவர் எமது நாட்டு வங்கியில் பெருந்தொகையான பணத்தினை வைப்பிலிட முயலும்போது, அந்தப்பணம் அவருக்கு எவ்வாறு வந்திருக்கும் என்பது பற்றி எப்படி கேள்வி எழுப்பாமல் இருக்க முடியும்.

2009 இல் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை ஓரளவிற்கேனும் அபிவிருத்தியடையச் செய்து,  முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்ல முயன்ற ஆட்சியை முடிவுகட்டி, நாட்டினை அந்நிய சக்திகளிடம் தாரைவார்த்து அழிவுப்பாதையில் கொண்டு செல்வதைப் பார்த்தால், இலங்கையின் நிலைமை ‘சாண் ஏற முழம் சறுக்கின’ கதையாகவே உள்ளது. இந்த முழச்சறுக்கல் 1977 இலிருந்து 17 வருடங்கள் நிகழ்ந்தது. இப்போது 2015 இல் மறுபடியும் ஆரம்பித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு முதுகில் குத்தி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிக்கு இன்னமும் 5 வருட ஆட்சிக்காலம் உள்ளது, அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் 4 வருட காலம் காத்திருக்க வேண்டும். இவ்வாறான நிலைமையில் இலங்கை மக்களுக்காக குரலெழுப்ப பலமான எதிர்க்கட்சி எதுவுமில்லாத துர்ப்பாக்கிய சூழலில் நாடு உள்ளது.

-ஆசிரியர் தலையங்கம் ‘வானவில்’ இதழ் 61