ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை – ஐ.நா. அறிக்கை

ஐ.நா. அறிக்கையில் எழுதப் பட்டுள்ள, ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்ற வாக்கியம் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியது. ஐ.நா.வை குறை கூற முடியாத கையறு நிலையில், பலர் சுமந்திரனுக்கு எதிராக திரும்பி, ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்கள்.  இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுத்த பலர், சட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல், வெறும் உணர்வு பூர்வமான கதைகளை பேசினார்கள். படித்தவர்கள் கூட, சிறுபிள்ளைத் தனமாக உரையாடுகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? ஆம், முடியும். அதுவும் ஐ.நா. கூறும் அதே சட்ட ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நாங்கள் ஈழப்போரின் முடிவை எடுத்துக் காட்டியது தான் நாம் விட்ட தவறு. ஐ.நா. எமது தவறுகளை, தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அறிக்கை எழுதியுள்ளது. எம் தலையில் நாங்களே மண் அள்ளிப் போட்டுள்ளோம்.


இனப்படுகொலை பற்றி நிரூப்பிக்க வேண்டுமானால், 1958 முதல் 1983 வரையில் நடந்த கலவரங்களை, இனப்படுகொலை என்று காட்ட வேண்டும். “இனக் கலவரம்” என்று சொல்லப் படுவது உண்மையில் இனப்படுகொலை தான். அது தான், இலங்கையின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தியது.
இந்த இடத்தில், மற்ற நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை இலகுவாகப் புரியும். ஜெர்மனியில் ஒரு காலத்தில், யூதர்கள் எந்த இடத்திலும் வசிக்க முடியாமல் தேடித் தேடி அழிக்கப் பட்டனர். துருக்கியில் வாழ்ந்த ஆர்மேனிய மக்களின் நிலைமையும் அதுவே. ருவாண்டாவில் ஹூட்டு இனத்தவர்கள், துட்சி இனத்தவர் ஒருவர் விடாமல் தேடிக் கொன்றார்கள்.

அது தான் இனப்படுகொலை. தென்னிலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரம் மட்டுமல்ல, குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் போன்றனவும், இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. ஈழப்போரின் முடிவில் நடந்த படுகொலைகளை, 1958 முதல் நடந்து வரும் இனப்படுகொலையின் தொடர்ச்ச்சியாக கருத வேண்டும்.

ஆனால், தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் பலர், மேற்படி உண்மையை கவனத்தில் எடுக்காமல் பேசுவது ஆச்சரியத்திற்குரியது. பெரும்பாலானவர்கள், புலிகளின் அழிவுக்கு பழிவாங்குவதற்காக, அல்லது ஈழத் தாயகக் கோட்பாட்டை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்காக அப்படிப் பேசுவதாக நினைக்க வேண்டியுள்ளது. தமிழ் தேசியம் என்பது ஒரு அரசியல் கொள்கை மட்டுமே. அதுவே உண்மையாகி விடாது.

ஐ.நா. இனப்படுகொலை என்ற சொல்லைப் பாவித்தால் கூட, அது தமிழர்களை தனியான இனமாக அங்கீகரித்ததாக அர்த்தம் அல்ல. கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக ஐ.நா. அறிக்கை தெரிவித்தது. ஆனால், கம்போடியாவில் இனப்படுகொலையால் கொல்லப் பட்டவர்களும், கொலை செய்தவர்களும் ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த கம்போடிய மக்கள் தான்.

ஜெர்மனியில் யூதர்களை தனியான இனம் என்று ஹிட்லர் சொன்னான். அனால், அங்கு யூதர்கள் ஒரே ஜெர்மன் மொழி பேசும் வேற்று மதச் சமூகமாகவே இருந்தனர். ஐ.நா. தமிழரை இனமாக அங்கீகரித்தாலும், அது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் அல்ல. துருக்கியில் நடந்த இனப்படுகொலைக்கு ஆர்மேனியார்கள் நீதி கோருவதற்கும், துருக்கியில் ஆர்மேனியத் தாயகம் கோருவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. (உண்மையிலேயே வட கிழக்கு துருக்கியில், ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.)
ருவாண்டாவில் துட்சிகள் ஹூட்டுகளால் இனப்படுகொலை செய்யப் பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதே துட்சிகள் ருவாண்டாவின் ஆட்சிப் பொறுப்பேற்று, ஹூட்டுக்களை ஒடுக்கியது மட்டுமல்லாது, அயல் நாடான கொங்கோவில் தஞ்சம் கோரியிருந்த ஹூட்டு அகதிகளையும் படுகொலை செய்தனர். அது குறித்து ஐ.நா. பின்னர் வெளியிட்ட “கொங்கோ படுகொலைகள்” பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

ஆகையினால், இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொண்டு விட்டால், அது தமிழரை தனி நாடாக அங்கீகரித்து விட்டதாகவோ, அல்லது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாகவோ அர்த்தம் அல்ல. இனம், சுயநிர்ணயம் என்பது முற்றிலும் மாறுபட்ட விடயங்கள். உலகில் குறைந்தது ஓராயிரம் மொழிகளைப் பேசும், தனித்துவமான இன மக்கள் வாழ்கின்றனர். ஐ.நா. அவர்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்க முன்வரப் போவதில்லை.

அப்படியானால், எதற்காக ஐ.நா. இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொள்ள மறுத்தது? தமிழர்கள் எப்போதும் இனம், தேசியம் என்று, குறுகிய மனப்பான்மையுடன் சிந்தித்துப் பழகி விட்டார்கள். ஆனால், இருநூறு நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐ.நா. விசாலமான பார்வை கொண்டிருக்க வேண்டும்.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்களை மட்டுமே, ஐ.நா. கவனத்தில் எடுத்துள்ளது. அப்போது நடந்த படுகொலை ஏற்றுக் கொண்டாலும், அவற்றை போர்க்குற்றங்கள் என்று வகைப் படுத்தி உள்ளது. ஏன்?

2009 ம் ஆண்டு, பாகிஸ்தானிலும் போர் நடந்தது. தாலிபான் அழிப்பு என்ற பெயரில், பாகிஸ்தான் ஆயிரக் கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது. அதுவும் வேறு மொழி பேசும் வேற்றின மக்கள் தான். ஐ.நா. அதையும் இனப்படுகொலை என்று அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

அது மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசை வீழ்த்துவதற்கு, அமெரிக்கா படையெடுத்தது. அப்போதும் பல்லாயிரக் கணக்கான ஆப்கானியர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதே மாதிரி, ஈராக்கில் சதாம் ஆட்சியை அகற்றுவதற்கு அமெரிக்கா படையெடுத்த நேரத்தில், பல்லாயிரக் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப் பட்டனர். ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த இனப்படுகொலைகளையும் ஐ.நா. அங்கீகரிக்க வேண்டி இருக்கும்.
இனிமேலும், தமிழர்கள் இனம், தமிழ் தேசியம் என்று குறுகிய மனப்பான்மையுடன் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. அது எமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம் ஆகும். இனப்படுகொலையை மறைக்க விரும்பும் சக்திகளுக்கு, நாங்களே துணை போகக் கூடாது. தமிழர்களுக்கு, உலகமயப் பட்ட, விசாலமான மனப்பான்மை அவசியம். அப்போது தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நாங்கள் நிரூபிக்க முடியும்.
(கலையரசன்)