எங்கள் ஸ்டாலின்அண்ணா மறைந்தார்!

நீண்ட நெடிய பதிவாக எழுத முடியாத அளவுக்கு, என் கண்ணீர் கணணியை மறைப்பதால், முன் பதிவாக இந்த தீரா துயரை உடன் பதிவிடுகிறேன். பின்பு சற்று என்னை ஆசுவாசபடுத்தியதும், அண்ணா பற்றிய என் தொடர் தொடரும். நேற்று முன்தினம் ஒரு கட்டுரை எழுதுமுன் கிடைத்த தகவலை உறுதிப்படுத்த, குண்சியை தொடர்பு கொண்டபோதுதான் அறிந்தேன், அண்ணாவின் நிலை சற்று மோசம் என்று. குண்சி தந்த தாஸ் [ பல்லவன்] இலக்கத்துக்கும், விஜய் இலக்கத்துக்கும் [அண்ணாவின் மகன் ] அழைப்பை எடுத்தபோது, தற்போது நிலமை மோசமில்லை என தாஸ் மற்றும் விஜயின் அழைப்பில் வந்த பெண் கூறினார். தானும், குகனும் மாவினும், காரில் சென்று அண்ணனை பார்த்துவிட்டு வந்ததாக தாஸ் கூறினார். தொண்டையில் பூட்டிய குழாய் சிரமமாய் இருப்பதால், காலையில் தான் அதை கழட்ட, வைத்தியசாலை போனதாக விஜயின் அலை பேசியில் வந்த பெண் கூறினார்.

உடன் இந்திய ETA VISA எடுத்து, ஸ்ரீலங்கன் விமான சேவையில் 9ம் திகதிக்கு சென்னை பயணமாகும் ஆசனப்பதிவும் செய்து, 11ம் திகதி அண்ணனை கும்பகோணத்தில் பார்த்து பேசியபின், குண்சிக்கு அழைப்பெடுத்து, நான் அண்ணனோடு இருக்கிறேன் என பெருமிதம் கொள்ள நினைத்த என் நெஞ்ஜு வெடிக்கும் செய்தியை சொன்னார் குண்சி. சர்வமும் என்னுள் அடங்கிவிட்டது. நாபாவை பலி கொடுத்தோம். அண்ணனை பறிகொடுத்தோம். அண்ணன் இல்லா அந்த வெளியில், அவர் ஆத்மா அண்ணி உருவில் உலவும் என்ற நம்பிக்கையில், என் பயணத்தை தொடர்வேன். என்னால் எந்த ஆறுதலும் அண்ணிக்கு சொல்ல முடியாது. என்னால் எந்த ஈடும் அவர் இழப்புக்கு செய்ய முடியாது. ஆனால் சற்று, அவர் முன்னால் மனம்விட்டு அழவேண்டும் போல் இருக்கிறது.

காரணம் கும்பகோணத்து நாயகன், எங்கள் ஸ்டாலின் அண்ணா! எமக்காக, எமது ஈழ விடுதலை போராட்டத்துக்காக, தனது எத்தனை சொத்து, சுகங்களை இழந்தாலும், முகம் சுழிக்காது, அவருக்கு நிழலாக துணை நின்ற அண்ணியை, நான் என் அன்னைக்கும் மேலாக போற்றுவதால். என் இதய கனம் இறங்கியபின், நான் மீண்டும் 20ம் திகதி ஏன் கூடு திரும்பிய பின், நான் கடந்து வந்த பாதையில் கண்ட ஒப்பற்ற மனிதனின், மனிதம் பற்றி நிச்சயம் பதிவிடுவேன். நெஞ்சு கனக்கிறது, நல்லவரை நலியவைக்கும் விதியே, உன்னை திட்ட என் மனம் விழைகிறது. தீயே உனக்கு என்ன தீராத பசியோ?, நீ தின்ற உடல் எத்தனையோ? கணக்கிடவில்லையோ?, என கதறிய கண்ணதாசன் கவி நினைவில் வருகிறது.

வியாழன் 02-06-2016 பெரியாரின் தொண்டர், திராவிடத்தின் பற்றாளர். ஈழ விடுதலை போராடத்தின் நியாயத்தை ஏற்றவர், இறுதிவரை கொள்கை பிறளாதவர், தன் சொத்துக்களை எம் போராடத்துக்காக இழந்த, கும்பகோணத்து தமிழன், எங்கள் ஸ்டாலின் அண்ணா BA BL அவர்களின் பிறப்புடல், இந்த மண்ணை விட்டு விலகும் நாள் எமக்கெல்லாம் கரிநாளே. ஓ தமிழ் சாதியே! நீ உனக்காக துடிக்கும் இ தயங்களை ஏனோ ஓரம் கட்டி விட்டு, தம் சுயனலத்துக்காக உன்னை வைத்து பலன் அடைபவர்களுக்கு, பல்லக்கு தூக்குகிறாய். எங்கள் எட்டயபுரத்து முண்டாசு கவி பாரதியை, அன்று நீ எள்ளி நகையாடினாய். இன்று ஏன் கொண்டாடுகிறாய்?. இப்படித்தானே எங்கள் ஸ் டாலின் அண்ணாவையும் இன்று நாம் பறி கொடுத்தோம். எத்தனை புயல்கள், சூறாவளிகள், சுனாமிகள் வந்தாலும் நாம் ஏன் மாற மறுக்கிறோம்?

(ராம்)