பிரதமருக்கு மாலையிட்ட முதல்வர்! ஜனாதிபதியின் தந்திரமா?

ஜனாதிபதி வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் திணைக்களத்தில் இருந்து வெளியேறு முன் மகிந்த மைத்திரிக்கு கைலாகு கொடுக்க நீட்டியபோது மகிந்தவின் கையில் இருந்த மந்திர சாவிக்கு பயந்த மைத்திரி இரு கரம் கூப்பி வணக்கம் வைத்தார். இருந்தும் மகிந்த மைத்தியின் தோள் தட்டி சென்றார். கை கொடுப்பதை தவிர்த்ததால் மகிந்தவின் கையில் இருந்த மந்திர சாவி மைத்திரியின் தோளில் மட்டும் பட்டதால் அதன் தாக்கம் ஏற்படாது வென்றுவிட்டார் என மகிந்தவின் கேரள மாந்திரீகர் சொன்னதாக ஒரு செய்தி உண்டு.

தான் சொல்லாததை சொன்னதாக கூறிய விக்னேஸ்வரன் ஒரு பொய்யர் என ஒரு பேட்டியில் பிரதமர் ரணில் சொன்னதால் சினமுற்ற முதல்வர் பிரதமரின் யாழ் வருகையை புறக்கணித்தார். மீண்டும் ஜனாதிபதியுடன் பிரதமர் வந்தபோது முதல்வர் பிரதமர் அருகிருந்தும் அரை பொருட்படுத்தவில்லை. தன்னை வாஞ்சையோடு வரவேற்றவர் தன் பிரதமரை வரவேற்காதது மைத்திரிக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பொங்கல் விழாவிலும் இந்த அனுபவம் தேவையில்லை என்று இருவருக்கும் நல்லிணக்கம் ஏற்படவா ஜனாதிபதி தனது பயணத்தை இரத்து செய்தார்?

ஒரு சாமானியன் சாம்ராஜ்யத்தின் தலைவனாய் வந்தால் அதை கட்டிக்காக்க தன்னால் ஆன எதையும் செய்ய முயலவேண்டும். தான் பிரசன்னமானால் தன்பக்கம் நின்று பிரதமர் பக்கம் பாராமல் தவிர்த்து விடுவார் முதல்வர் என்ற முன் அனுபவத்தால் தான் அவர் விஜயம் தவிர்க்கப்பட்டதா? உழவர் போற்றும் திருநாளில் உறவுகளை ஏற்படுத்த விளைவது வரவேற்கதக்கது. மக்களின் மனதிலும்  இவர்களுக்குள் ஏற்படும் உறவு தம் இன்னல் தீர உதவும் என்ற நம்பிக்கை ஏற்படும். அதனால் தான் அதற்கு முன்தின வலம்புரி பத்திரிகை ஆசிரிய தலையங்கத்தில் பலாலியில் பொங்கும் பால் தமிழர் வாழ்விலும் பொங்கட்டும் வரும் பிரதமரும் எங்கள் முதல்வரும் பேதைமை மறந்து இணையட்டும் என எழுதியது போலும்.

தை பிறந்ததும் தமிழர் மனதில் புது நம்பிக்கை பிறப்பது வழமை. அப்படி அந்த வருடம் நினைத்தது நடக்கவில்லை என்றாலும் அடுத்த தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். இது வழி வழி வந்த நம்பிக்கை. அது போன்ற ஒன்றாக இந்த தை திருநாள் தொடங்கிய வடக்கு தெற்கு தலைமைகளின் நல்லிணக்கம் நற்பலனை தரும் என்ற நம்பிக்கை கீற்று தெரிகிறது. காரணம் விழாவில் பேசிய பிரதமர் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என்ற செய்தி உட்பட பல விடயங்களை செயல்படுத்துவேன் என சொன்னார். காரணமின்றி எவரையும் தடுத்து வைக்கும் சட்டம் இல்லாமல் போனால் இன்று சிறையில் இருப்பவர் விரைவில் தம் உறவுகளுடன் இருப்பர்.

காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு காணாமல் போனோர் என நீண்டு செல்லும் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தரவேண்டியது மத்திய அரசுதான். மாகாண அரசின் சுதந்திர செயல்பாட்டுக்கு வழிவிட வேண்டியதும் மத்திய அரசுதான். மத்தியின் பிரதமரும் மாகாண முதல்வரும் இதுவரை கொண்டிருந்த முரண்நிலை தை திருநாளில் நீங்கியது மக்களின் மனதில் நிச்சயம் பால் வார்க்கும். 2015 ஆரம்பம் நாட்டில் நல்லாட்சிக்கு வித்திட்டது.  2016 ஆரம்பம் தெற்கின் நேசக்கரம் வடக்கை நோக்கி நீள்கிறது. 2016ல் தீர்வு வரும் என சம்மந்தர் சொன்ன வாக்கை பலிதமாக்கும் சமிக்ஞை என இதனை கொள்ளலாமா?

அமெரிக்காவின் கெரி சமந்தாபவர் இந்தியாவின் ஜெயசங்கர் ஐநா வின் ஹசிம் பான்கி மூன் பிரித்தானிய பிரதிநிதிகள் என எவர் வந்தாலும் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வை தருவதற்கு சிங்கள மக்கள் சம்மதிக்க பேரினவாதிகள் இடம்கொடுக்க வேண்டும் என்தே உண்மை நிலை. இது மண்ணில் நெல் மணிகளை விளைவிக்கும் விவசாய குடும்ப பின்னணி கொண்ட மைதிரிக்கு தெரிந்ததால் தான்  முதலில் நன்கு உழுது அடிஉரம் இட்டு விதைத்து கண்களுவு தண்ணீர் விட்டு முளைவிடும் பயிரை களைகளில் இருந்து காக்க களைநாசினி அடித்து அறுவடை வரை செல்லும் செயலை மக்கள் தலைவர்களின் மனவிரோதத்தை முதலில் நீக்கும் செயல்மூலம் தொடங்கி வைக்கிறாரா?

இன நல்லிணக்கம் என்பது அறுபத்து ஆறு ஆண்டுகள் தொடரும் நோய்க்கான  ஆரம்ப வைத்தியம்.  இதுவரை சுகம் வரும் ஆள் தப்பாது என்பது போல பல ஒப்பந்தங்கள் நிறைவேறாது போனதால் புரையோடிப்போன பிரச்னைக்கு இரு பகுதியினரதும் மனதில் மாற்றம் வேண்டும். ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆழ நினைப்பதில் என்ன குறை என இளையவரின் இரத்தத்தை சூடாக்கிய காசி ஆனந்தன் அயல் நாட்டில் இருந்து இன்னமும் தன் செயலை தொடர்கிறார். நாடுகடந்து போனபின்பும் ஈழ அரசை நிறுவி பிரதமரானவர் அமெரிக்காவில் இருந்து ஸ்கைப்பில் ஆலோசனை வழங்கி ஈரானிய புரட்சிக்கு பிரான்சில் இருந்து வித்திட்ட அயதுலா கொமைய்னி என தன்னை நினைக்கிறார்.

எழுபதுகளின் பிற்பகுதியில் கூட்டணி எமக்கு ஏற்ற தீர்வை பாராளுமன்ற முறைமையில் பெற்று தராது என ஆயுதம் ஏந்தியவர் அது சிறுபிள்ளை வேளாண்மை ஆனதால் தாமும் பாராளுமன்றம் சென்று வெட்டி வீழ்த்த மூத்தகட்சியுடன் கூட்டமைத்து போட்டியிட்டு சிலர் தேர்தலில் தோற்றதால் தாம் மீண்டும் பாராளுமன்ற போக போரவை அமைத்து கூட்டமைப்பை கூண்டில் ஏற்ற முனைகின்றனர். 1977ல் அடுத்த தேர்தல் தமிழ் ஈழத்தில் என்றவர் எதிர்கட்சி தலைவர் ஆனதும் சந்தித்த சர்வதேச தலைவர்கள் பிரிவினைக்கு ஆதரவு தரவில்லை.

போராட்ட தலைவர்களை சந்தித்த இந்திரா காந்தி அம்மையாரும் உங்கள் உரிமைகளை பாதுகாக்கும் ஏற்பாட்டை இந்தியா செய்து தரும் என்றாரே தவிர  தனி நாடு அமைக்க உதவுவதாக உத்தரவாதம் தரவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் கூட பிரிவினை பற்றி அல்ல பிராந்திய நலன் கருதி தமிழர் தம் உரிமையை முன் நிறுத்தியது. அதை பிரபாகரன் மீறி செயல்பட்டிருக்கா விட்டால் இன்று இணைந்த வடக்கு கிழக்கு எம்வசம் இருந்திருக்கும். டி ஐ ஜி தலைமையினாலான மாகாண பொலிஸ் எமக்கு அரணாய் இருந்திருக்கும். முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பதே நடந்தது.

அமிர் அண்ணா நிலைமையை இளைஞர்களுக்கு மறைத்தார். இளைஞர் இந்திய நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு மறைத்தனர்.  அதனால் எம் இனத்துக்கு தீமையே விளைந்து. உண்மை உரைக்க அமிர் அண்ணா விரும்பவில்லை. மக்களின் முன் அதுவரை தளபதியாய் வலம் வந்தவர் தான் அடைய நினைத்த வெற்றி இலக்கை அடைய முடியவில்லை என்ற வெட்கத்தை வெளிப்படையாக கூறவும் முயலவில்லை. விளைவு இளைஞர் கையில் ஏந்திய ஆயுதம் எம்மவரின் இரத்தப்பலி கண்டது. ஏனைய இயக்கங்களை அழித்த பிரபாகரன் கூட உண்மை நிலை உரைக்காது இந்திய அமைதிப் படையை இந்தியாவின் மக்களை கொல்லும் படை என யுத்தத்தை செய்து இன்று செத்து அழிந்து போனார்.

ஆனால் சம்மந்தராவது தற்போது நிலைமை இதுதான் என உண்மை உரைக்கிறார். எது சாத்தியம் அதை அடைவதற்கான வழி என்ன என்பதை சுமந்திரனின் குரல் மூலம் தெரியப்படுத்தினால் அதனை  ஏற்க மறுக்கும் காகித புலிகள் சுமந்திரன் போகும் இடமெல்லாம் தம் ஆட்களை கொண்டு அவரின் ஒன்றுகூடலை குழப்புகின்றனர். அவர் கூறும் விளக்கத்தை கேட்க அனுமதியாது கூக்குரல் இடுகின்றனர். துரையப்பாவில் ஆரம்பித்த துரோகி பட்டம் தாராளமாக இவர்களால் தமது தவறான பாதையில் பயணிக்க மறுப்பவருக்கு வழங்கப்படுகிறது. இது சாத்தியம் இல்லை என உண்மை நிலையை உரைப்பவன் இனத்துரோகியா?

மைத்திரியின் வரவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய சிவாஜிலிங்கம் அடுத்த வட மாகாண சபை அமர்வில் முதல்வரை என்னவென்று அழைக்க போகிறார்? காணி விடுவிப்பு முதல் தாம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை வடக்கு வரும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கறுப்பு கொடி வரவேற்பே கிடைக்கும் என்றவர் தலைப்பா மரியாதையுடன் வந்த பிரதமருக்கு முதல்வர் மாலையிட்டு வரவேற்கும் நிகழ்ச்சியை தொலைகாட்சியில் பார்த்துவிட்டு மீண்டும் செங்கோலை தூக்கி சென்று கைதடி பாலத்தில் தொங்கவிடபோகிறாரா? தான் வந்தால் சில வேளை சிவாஜிலிங்கம்  தீகுளித்தால் தீரா பழி தனக்கு வரும் என பயந்து தான் மைத்திரி வரவில்லை என்றும் சிலர் சிந்திக்க கூடும். பிரச்சனை கொதிநிலையில் இருக்கவேண்டும் என விரும்பும் பயனாளிகள் அவ்வாறே நினைப்பார்.

(ராம்)