வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் புதுவையை மறந்தோர் அரசியல் சோரம்!

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிராத கலை இலக்கியவாதிகளை யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். ஏறத்தாள எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு தேவைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்தான். கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் ஒரு பத்திரிகை நேர்காணலில் காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது, எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும் என்று சொல்லி இருந்தார்.

இப்போது காலம் மட்டுமல்ல, அவருடன் உறவு கொண்டிருந்த கலை இலக்கியப் படைப்பாளிகளும் அவரைக் கை கழுவி விட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் இடம்பெற்று வருடங்கள் ஆகிவிட்டன, இது வரையில் எந்தவொரு படைப்பாளியோ, இலக்கிய அமைப்போ அவர் எங்கே, எப்படி இருக்கிறார்? என்று கேட்கத் துணியவில்லை, எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மானுட நேயம் என்னும் அடிப்படைத் தகுதியை படைப்பாளிகள் இழந்து விடக்கூடாது என்று யாழில் நடந்த கூட்டம் ஒன்றில் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கூறி இருந்தார்.

ஆனால் புதுவை இன்னமும் உயிருடன் இருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதுவும் பேசாமல் வாய் மூடி மெளனித்து உள்ளனர். கூட்டமைப்பார் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி புதுவை குறித்து அக்கறை எடுத்திருக்க முடியும். ஆனாலும் அவர்கள் பகலில் நாடாளுமன்றத்தில் ஏதோ எல்லாம் பேசி விட்டு வெள்ளி நிலா விளக்கேற்றும் இரவு நேரத்தில் சிங்கள அமைச்சர்களோடு தேனிலவு கொண்டாடி வருகிறார்கள்.

புதுவை எழுதிய வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் என்ற புகழ் பெற்ற பாடலை கேட்டு கேட்டு இன்றும் கண்ணீர் வடிக்கும் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல் கண்டு சீற்றம் அடைந்து உள்ளனர்.